Published:Updated:

ஹாலிவுட்டை உலுக்கிய மீ டூ பாலியல் வழக்கு: நிரூபணமான ஹார்வி மீதான குற்றச்சாட்டு

ஹார்வி வெயின்ஸ்டீன்
பிரீமியம் ஸ்டோரி
ஹார்வி வெயின்ஸ்டீன்

அவரின் மனைவி ஜார்ஜினா சாப்மன், விவாகரத்துப் பெறுவதாக அறிவித்தார்.

ஹாலிவுட்டை உலுக்கிய மீ டூ பாலியல் வழக்கு: நிரூபணமான ஹார்வி மீதான குற்றச்சாட்டு

அவரின் மனைவி ஜார்ஜினா சாப்மன், விவாகரத்துப் பெறுவதாக அறிவித்தார்.

Published:Updated:
ஹார்வி வெயின்ஸ்டீன்
பிரீமியம் ஸ்டோரி
ஹார்வி வெயின்ஸ்டீன்

ஹாலிவுட்டை உலுக்கிய மீ டூ விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஹார்வி வெயின்ஸ்டீனை `குற்றவாளி’ என்று அறிவித்திருக்கிறது நியூயார்க் நீதிமன்றம். உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள இந்த வழக்கில், ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு சுமார் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்!

ஹாலிவுட் சினிமா தயாரிப்பு நிறுவனமான மிராமாக்ஸின் தலைவர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் மீதான பாலியல் புகார் குறித்த கட்டுரை ஒன்றை, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை 2017-ம் ஆண்டு வெளியிட்டது. ஹார்வி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகுதான், பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட வர்கள் தைரியத்துடன் பேசும் ‘மீ டூ’ (#MeToo) இயக்கம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஹார்விக்கு எதிராகப் புகார் தெரிவித்த பெண்கள்
ஹார்விக்கு எதிராகப் புகார் தெரிவித்த பெண்கள்

ஆஷ்லே ஜுட், ஏஷியா அர்ஜெண்டோ உள்ளிட்ட மிராமாக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் மிராமாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர், ஹார்வி தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தனர். அந்தக் குற்றச்சாட்டுகளின் தாக்கம் இந்தியத் திரைத்துறைகளிலும் எதிரொலித்தது. இந்தி திரையுலகம் தொடங்கி தமிழ் திரையுலகம் வரை பாலியல் குற்றப் புகார்கள் குவியத் தொடங்கின. இந்த நிலையில், ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான வழக்கில், அவர் குற்றவாளி என தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது நியூயார்க் நீதிமன்றம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹார்வி மீதான குற்றச்சாட்டுகள் வெளியான பிறகு அவரது மிராமாக்ஸ் நிறுவனத்தின் உயர்மட்டக் குழு ஒட்டுமொத்தமாக அவரை நிறுவனத்திலிருந்து விலக்குவதாக அறிவித்தது. அவரின் மனைவி ஜார்ஜினா சாப்மன், விவாகரத்துப் பெறுவதாக அறிவித்தார்.

ஹார்வி வெயின்ஸ்டீன்
ஹார்வி வெயின்ஸ்டீன்

இத்தனை சர்ச்சைகளுக்குப் பிறகு ஹார்வி தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், `பல தரப்பினருக்கும் பிரச்னை ஏற்படுத்தியதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நிறுவனத்தின் பெண் ஊழியர்களை நான் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய தில்லை. மேலும், என்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அனைத்தும் இரு தரப்பின் ஒப்புதலுடன் நிகழ்ந்தவை’ எனக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அவரின் விளக்கம் எடுபடவில்லை.

அவர்மீது மேலும் சிலர் புகார் தெரிவித்தனர். 1985-ம் ஆண்டு முதல் அவர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக சில நடிகர்கள் குற்றம்சாட்டினர். ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலிருந்தும் அவர் விலக்கிவைக்கப் படுவதாக அறிவிப்புகள் வெளியாகின. இயக்குநர் வூடி ஆலன், லேட் நைட் ஷோ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் கோர்டான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஹார்வியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மிராமாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆவணப்படம் எடுத்துவந்த நடிகர் சானிங் டேட்டம், தன் படத்தை இனி ஹார்வியின் நிறுவனம் தயாரிக்காது என அறிவித்தார். அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, ஹார்வியை வாழ்நாள் முழுவதும் விலக்கி வைப்பதாக அறிவித்தது. 2017-ம் வருடம் நவம்பர் மாதம் ஹார்வியின் மீது அடையாளம் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளதாக நியூயார்க் நகர காவல்துறை அறிவித்தது. கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவரும் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

ஹார்வி மீதான குற்றச்சாட்டு பிரிட்டன் வரை பரவியது. அந்த நாட்டைச் சேர்ந்த அடையாளம் வெளியிட விரும்பாத பெண் ஒருவரும் ஹார்வியின் மீது புகார் கொடுத்தார். தொடர்ந்து குவிந்த புகார்களையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2018 மே மாதம் நியூயார்க் நகர காவல்துறையிடம் ஹார்வி சரணடைந்தார். அதற்கு அடுத்த நாளே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீனாகச் செலுத்திய தொகை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர். மொத்தம் 11 பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், நியூயார்க் நகர நீதிமன்றம் ஒவ்வொரு வழக்காக விசாரித்தது. ஹார்வியின் வழக்கறிஞரான டோன்னா ரொட்டன்னொ, ‘குற்றம்சாட்டியவர்களின் சம்மதத்துடன்தான் ஹார்வி அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். பொருளாதாரரீதியாக உயரவும் புகழ்பெறவும் அவர்கள் ஹார்வியை உபயோகித்துக்கொண்டனர்’ என்று வாதிட்டார்.

ஜனவரி 6-ம் தேதியன்று ஹார்வி மீதான வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. வழக்குகளின் மீதான இறுதிவாதம் பிப்ரவரி 13 அன்று முடிந்த நிலையில், தீர்ப்பு பிப்ரவரி 24 அன்று வழங்கப்பட்டது. தீர்ப்பின்படி, 67 வயதான ஹார்வி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேம்ஸ் புரூக், ஹார்வியை ‘Series Sexual Predator’ என காட்டமாக விமர்சித்தார். மார்ச் மாதம் ஹார்விக்கான தண்டனை விவரம் வெளியாக இருக்கும் நிலையில், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

‘ஹாலிவுட் நடிகர்களின் தைரியமும் ஒற்றுமையும்தான் ஹார்வி குற்றவாளியாக அறிவிக்கப்பட காரணம்’ என சர்வதேச ஊடகங்கள் பாராட்டிவருகின்றன. எத்தனையோ சினிமாக்களில் ஹாலிவுட்டைக் காப்பியடிக்கும் கோலிவுட், ‘மீ டூ’ விவகாரத்தில் அவர்களின் இந்த ஒற்றுமையை எப்போது கற்றுக்கொள்ளும்?