செவித்திறன் குறைபாடு உடையவர் என்பதால், வேலை தர மறுத்த மருத்துவமனை, அப்பெண்ணிற்கு 180,000 அமெரிக்க டாலரை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மேப்பிள் குரோவ்வில் வசித்து வருபவர் 26 வயதான கைலா வோக்ட். இவருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. ஜூலை 2020-ல் நார்த் மெமோரியல் ஹெல்த் என்ற மருத்துவமனையில் வரவேற்பாளர் பதவிக்கு இவர் விண்ணப்பித்துள்ளார்.

மருத்துவமனைக்கு வருபவர்களை வரவேற்பது, முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது, கோவிட் தொற்று அறிகுறிகளைச் சரிபார்க்க ஸ்கிரிப்டை படிப்பது போன்றவை வரவேற்பாளர் பணியின் தன்மை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேனேஜருடன் இவருக்கான ஆன்லைன் இன்டர்வியூ நடைபெற்றது. செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் 'வீடியோ ரிலே சர்வீஸ்' மூலமாக அமெரிக்க சைகை மொழிப்பெயர்ப்பாளருடன் இவரது இன்டர்வியூ நடந்தது.
இன்டர்வியூவில், `தனக்கு செவித்திறன் குறைப்பாடு இருக்கிறது. காது கேட்கும் கருவிகளை அணிந்திருப்பதால், வாய் மொழி மற்றும் சைகை மொழி மூலமாக என்னால் மற்றவர்களோடு எந்தவித சிரமமும் இன்றி தொடர்பு கொள்ள முடியும்' என்று கைலா வோக்ட் தெரிவித்துள்ளார்.

ஆள்சேர்ப்பு மேலாளர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவித்த பிறகு, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் தன்னுடைய நிலையைக் குறித்து கேள்விப்பட்ட பின், வேலை வழங்குவதில் பாகுபாடு காட்டியதாக நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்தார்.
நீதிமன்ற விசாரணையில், மருத்துவமனை நிர்வாகம் அப்பெண்ணின் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளது. இருந்தபோதும் இயலாமை பாகுபாடு தொடர்பான அதன் பணியமர்த்த நடைமுறைகளை மருத்துவமனை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, 180,000 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 1,45,19,214) அப்பெண்ணுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.