Published:Updated:

`அயோத்தி தீர்ப்பு!' - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி சொல்வதென்ன?

அயோத்தி தீர்ப்புகுறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி கருத்து வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி

ராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நிறையவே விமர்சனங்களும் எதிர்ப்பான கருத்துகளும் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டுமென்று கூறியுள்ளது. இஸ்லாமிய அமைப்புக்கு மசூதி கட்டிக்கொள்ள அயோத்தி நகருக்குள்ளேயே ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தி வயர் நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``27 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், தற்போது மசூதியை இடித்துவிட்டு அதில் ராமர் கோயில் எழுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா? '' என்பது அதில் முக்கியமான கேள்வியாக உள்ளது.

அயோத்தி பாபர் மசூதி
அயோத்தி பாபர் மசூதி

''நான் தீர்ப்பளிக்கும் இடத்தில் இருந்திருந்தால், அதே இடத்தில் மசூதியைக் கட்ட உத்தரவிட்டிருப்பேன். அப்படி என்னால் தீர்ப்பு அளிக்க முடியவில்லையென்றால், அந்த இடத்தில் நிச்சயம் கோயில் கட்ட தீர்ப்பளித்திருக்க மாட்டேன். சமுதாயத்துக்கு உதவும் வகையில் மருத்துவமனை, கல்லூரி அல்லது பள்ளி கட்ட அனுமதி அளித்திருப்பேன்.

அயோத்தி தீர்ப்பு... வரவேற்பும் எதிர்ப்பும்!

மசூதியின் கீழே உள்ள பகுதியில், இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், ஒன்று இந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால், பொதுப்பணிகளுக்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே, மசூதி இருந்தது எல்லோருக்கும் தெரியும். அது உடைக்கப்பட்டதை அனைவரும் பார்த்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட விஷயத்தில், உச்ச நீதிமன்றமே 'சட்டத்தை மீறிய செயல்' என்று கடுமையாகக் கண்டித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்ட தயாராக உள்ள தூண்கள்
அயோத்தி ராமர் கோயில் கட்ட தயாராக உள்ள தூண்கள்

ஆனால், இடித்தவர்களிடமே மறுபடியும் நிலத்தை ஒப்படைத்தது சரியானதா? மசூதியை உடைத்ததுகூட இந்து மதத்துக்கு விரோதமானது. இந்து மதத்தில், எங்காவது பிற மதத்தின் வழிபாட்டு ஸ்தலங்களை இடிக்குமாறு சொல்லப்பட்டுள்ளதா? சட்ட நிபுணர் ஃபாசல் கான், 'உச்ச நீதிமன்றம் இந்து மத நம்பிக்கையைத் தூக்கிப்பிடித்துள்ளது' என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். இரு நபர்களுக்கிடையே வழக்கு நடைபெறுகிறது. ஒரு நபரின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பது சரியானதா?'' என ஏ.கே. கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி, கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். 2008 –ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அதற்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சிறிது காலம் பணியாற்றினார்.