Published:Updated:

“அரிசிக் கடத்தல் வழக்கில் அப்பாவி தமிழர்!”

வாணிஸ்ரீ - ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
வாணிஸ்ரீ - ரவிச்சந்திரன்

ஆந்திர போலீஸ் மீது அதிரடி குற்றச்சாட்டு

“அரிசிக் கடத்தல் வழக்கில் அப்பாவி தமிழர்!”

ஆந்திர போலீஸ் மீது அதிரடி குற்றச்சாட்டு

Published:Updated:
வாணிஸ்ரீ - ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
வாணிஸ்ரீ - ரவிச்சந்திரன்
அரிசிக் கடத்தல் வழக்கில், குற்றத்தில் ஈடுபடாத ஒரு தமிழரை கைதுசெய்திருப்பதாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஆந்திர போலீஸ்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு வாணிஸ்ரீ என்கிற மனைவியும் கிஷோர் என்கிற மகனும் இருக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் லாரி இயக்கிவந்த ரவிச்சந்திரனை, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற ஆந்திர போலீஸார், அரிசிக் கடத்தல் வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டனர். ‘என் கணவர் குற்றமற்றவர்’ என்று சொல்லும் வாணிஸ்ரீ, அவரை மீட்பதற்காகப் போராடிவருகிறார்.

அவரிடம் பேசினோம். ‘‘நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அதனால், இரண்டு குடும்பங் களிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உதவி இல்லை. என் கணவர் உள்ளூரில் மினிடோர், ஈச்சர் உள்ளிட்ட வாகனங்களை இயக்கிவந்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்து நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கினார். அவரை ஏமாற்றிவிட்டு நண்பர்கள் ஓடிவிட்டனர். அதில் பெரிய நஷ்டமடைந்து விட்டோம். வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், ஒப்பந்த அடிப்படையில் லாரி வாங்கலாம் என முடிவுசெய்தோம்.

சரவணக்குமார் - ராசாமணி
சரவணக்குமார் - ராசாமணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரோக்கர் மூலம் திருப்பூரில் கடன் கட்டாததால் கைப்பற்றப்பட்ட லாரியைப் பார்த்தோம். அதன் உரிமை யாளர் ஈஸ்வரி மற்றும் அவரின் கணவர் சிவாஜியிடம் பேசினோம். அவர்கள் கடன் வாங்கிய ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் பேசி, உரிய ஆவணங்கள் எல்லாம் ஒப்படைத்து, 2019 நவம்பர் முதல் ஒப்பந்த அடிப்படையில் என் கணவர் அந்த லாரியை இயக்கி வந்தார். லாரிக்கு மூன்று இ.எம்.ஐ கட்டியதோடு, எஃப்.சி-யையும் நாங்கள்தான் வாங்கினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திடீரென ஒருநாள் ஆந்திரப் போக்குவரத்துக்கழகத்தினர் மற்றும் போலீஸார் என் கணவருக்கு போன்செய்து, ‘ராஜமுந்திரி அருகே ஒரு ரைஸ் மில்லில் ஏற்றிய 501 அரிசி மூட்டைகளை (தலா 50 கிலோ) சம்பந்தப்பட்ட இடத்தில் இறக்கவில்லை. ரைஸ்மில்லில் இருந்து புகார் அளித்துள்ளனர்’ என்று கூறியுள்ளனர். அவர்களிடம், ‘நீங்கள் சொல்லும் சம்பவம் பற்றி எனக்குத் தெரியவில்லை’ என்று என் கணவர் பதிலளித்துள்ளார்.

ஆந்திர போலீஸார் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு, ‘நாங்கள் கோவை வருகிறோம். உங்கள் லாரியைப் பார்க்க வேண்டும்’ என்று கூறினர். ‘நாம்தான் எந்தத் தவறும் செய்யவில்லையே’ என்று நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். ஆனால், கோவை வந்த ஆந்திர போலீஸ், என் கணவரை கைதுசெய்து அழைத்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டனர். அந்த வழக்கில் உத்தமன் என்பவரை ஏ1 ஆகவும், என் கணவரை ஏ2 ஆகவும் இணைத்து வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஜனவரி 29-ம் தேதி, என் கணவர் கோவையில் தான் இருந்தார். லாரியும் இங்கேதான் இருந்தது. சென்னையிலிருந்து ஒரு வாடகை சவாரியை முடித்துவிட்டு ஜனவரி 28-ம் தேதி அதிகாலைதான் என் கணவர் வீட்டுக்கே வந்தார். ஆந்திர போலீஸாருடன் வந்த ஆந்திரப் போக்குவரத்துக் கழகத்தினரும், திருட்டு நடந்தபோது என் கணவர் அங்கு வரவில்லை என்றே கூறினர். என் கணவர் தவறு செய்தவராக இருந்தால், ஆந்திர போலீஸ் அழைத்த உடனேயே தலைமறைவாகியிருப்பார். ஆனால், அவர்களின் அனைத்து அழைப்பு களையும் ஏற்று பேசிக்கொண்டுதானே இருந்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் லாரி வாங்கிய ஈஸ்வரி, சிவாஜியை தொடர்பு கொண்டோம். அவர்களது செல்போன் எண்கள் சுவிட்ச் ஆஃபில் உள்ளன. வீட்டையும் காலி செய்திருக்கி றார்கள். பிறகுதான், எங்களின் லாரி எண்ணை போலியாக மற்றொரு லாரியில் மாட்டி கொள்ளையடித்திருக் கின்றனர் என்பது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக ஆந்திரப் போக்குவரத்துக்கழகத்தில் பேசினால் ‘போலீஸிடம் பேசுங்கள்’ என்கின்றனர். போலீஸிடம் கேட்டால், ‘நீதிமன்றம் செல்லுங்கள்’ என்கின்றனர். தமிழகத் தில் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கச் சென்றபோது, ‘டி.ஜி.பி-யைப் பாருங்கள்’ என்றனர். டி.ஜி.பி-யைப் பார்த்தால், ‘இது வேறு மாநில விவகாரம். தமிழகத்தில் ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்கள். உடனடி யாக விசாரிக்கிறேன்’ என்கிறார்.

என் கணவர் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாதவர். அவரை நம்பித்தான் குடும்பம் இருக்கிறது. இப்போது குடியிருக் கும் வீட்டையும் காலி செய்யச் சொல்கின்றனர். பத்து வயதுக் குழந்தையுடன் என்ன செய்வ தெனத் தெரியாமல் தவிக்கிறேன். தமிழக அரசு தலையிட்டு, எப்படி யாவது என் கணவரை மீட்டுத்தர வேண்டும்’’ என்றார்.

அரிசிக் கடத்தல்
அரிசிக் கடத்தல்

ரவிச்சந்திரனின் வழக்கறிஞர் சரவணக்குமார், ‘‘உத்தமன் மற்றும் சிவாஜி பெயரில் லோடு எடுத்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற பரிவர்த்தனையில் லோடு ஏற்றும் வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேஸ் நம்பர் போன்ற முழுத்தகவல்களையும் எடுக்க வேண்டும். ஆனால், இதில் அதுபோன்ற எந்தத் தகவலும் எடுக்கப்படவில்லை. போலி ஆவணங்களைத்தான் அவர்களிடம் ஒப்படைத் துள்ளனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்கேப்பாகிவிட்டனர். அப்பாவியான ரவிச்சந்திரனை கைதுசெய்துவிட்டனர். அதோடு, ‘குற்றத்தை ஒப்புக்கொள்’ என்று சொல்லி ரவிச்சந்திரனை கடுமையாகத் தாக்கி, அவரின் கால்களையும் உடைத்துள்ளனர்.

சி.சி.டி.வி பதிவில் இருக்கும் லாரியின் தோற்றத்தைப் பார்த்தால் அது ஆந்திர மாநில லாரி போலவே தெரிகிறது. ரவிச்சந்திரனின் லாரிக்கும் அதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நவம்பர் மாதத்திலிருந்து ஒருமுறைகூட அவரின் லாரி ஆந்திரா செல்லவில்லை. சிவாஜி மற்றும் உத்தமனைப் பிடிக்க ஆந்திர போலீஸார் முயற்சி செய்யாமல், ரவிச்சந்திரனை வைத்தே இந்த வழக்கை முடிக்கப்பார்க்கிறார்கள். இத்தனைக்கும் ரவிச்சந்திரன் குற்றமற்றவர் என்பது ஆந்திர போலீஸாருக்கு நன்கு தெரியும். ரவிச்சந்திரன் சார்பாக யார் பேசினாலும், அவர்களிடமிருந்து சரியான பதில் வருவதில்லை’’ என்றார்.

இதுதொடர்பாக வாணிஸ்ரீ தரப்பில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான ரோஜாவின் உதவியை நாடியுள்ளனர். ரோஜாவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி இவர்களுக்கு உதவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் பேசினோம். ‘‘என் மனைவி லோக்கல் போலீஸில் பேசியுள்ளார். சம்பவம் நடந்த தினத்தில் இவர்களின் லாரிதான் ஆந்திராவில் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். `எந்தக் குற்றச்செயலிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று ரவிச்சந்திரன் தரப்பு உறுதியளித்ததையடுத்து, அவருக்கு ஜாமீன் பெற்றுத்தர முயற்சிசெய்து வருகிறோம்’’ என்றார்.

ஆந்திர போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘இந்த வழக்கில் ரவிச்சந்திரன் மட்டும்தான் கிடைத்துள்ளார். முக்கியக் குற்றவாளிகள் யாரும் கிடைக்காதபோது, இவரை வெளியில் விட்டால், அது விசாரணையை பாதிக்க வாய்ப்புள்ளது. ரவிச்சந்திரன் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கினால்தான் நாங்கள் ஏதாவது செய்ய முடியும்’’ என்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் பேசியபோது, ‘‘ரவிச்சந்திரன் தரப்பினர் சொல்வதை வைத்து மட்டுமே நாம் முடிவுக்கு வர முடியாது. முதலில் நம் போலீஸ் மூலம் என்ன நடந்தது என்று வழக்கின் பின்னணி விசாரிக்க வேண்டும்.

இவர்கள் மீது எந்தத் தவறும் இல்லாதபட்சத்தில், அடுத்தகட்டமாக சட்டப்படி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’
என்றார்.

செய்கின்ற உதவியை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism