இதன்மூலம், தமிழகத்தில் நடந்துவரும் ஆணவக்கொலைகளைத் தடுக்க அரசு எந்த அளவுக்கு ஆர்வம்காட்டுகிறது என்பது தெரியவந்துள்ளது.
ஆணவக்கொலைகளைத் தடுக்க, மாநில அரசுகள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விவரங்களை ஆறு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி, கடந்த வருடம் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅறிக்கை அளிக்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், தமிழகத்தில் சமீபகாலமாக நடந்த ஆணவக்கொலைகள் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் அமர்வு தாமாக முன்வந்து வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்கத் தொடங்கியது. ‘ஆணவக்கொலைகள் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதற்கு, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்துக்குப் பிறகு நீதிபதிகள், ‘‘ஆணவக்கொலைகளைத் தடுக்க, தனி காவலர்களை நியமிக்க வேண்டும். ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தவறும் காவல்துறை அதிகாரிகள்மீது, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி அடிப்படையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட கௌரவத்துக்காகவும் ஆணவக்கொலைகள் நிகழ்கின்றன. இதுபோன்று எத்தனை ஆணவக்கொலைகள் நிகழ்ந்துள்ளன, அவற்றில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரா என்ற எந்தத் தகவலும் அறிக்கையில் இல்லை’’ என்று மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தி வழக்கைத் தள்ளிவைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், ‘‘தமிழகத்தில் கடத்த பத்து வருடங்களில் நிகழ்ந்துள்ள ஆணவக்கொலைகள் பற்றிய அறிக்கையை நீதிமன்றம் கேட்டதற்கு, 23 வழக்குகளைப் பற்றிய விவரங்களை மட்டும் சமர்ப்பித்துள்ளது அரசு. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆணவக்கொலைகளைத் தடுக்க மாவட்டம்தோறும் காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது.
தற்போது செயல்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் தனிப்பிரிவினர், இதுவரை எத்தனை ஆணவக்கொலைகளைத் தடுத்துள்ளனர், யார்மீதெல்லாம் வழக்குப் பதிவுசெய்துள்ளனர், யாருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர், உதவி கேட்டு வந்த எத்தனை காதலர்களைச் சேர்த்து வைத்துள்ளனர், யார் யாருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர் என்பதையெல்லாம் கூறவில்லை. இதையெல்லாம் முறையாகச் செய்து, சிறப்புச் சட்டம் இயற்றி உண்மையான இலக்கோடு அரசு செயல்பட்டால்தான் ஆணவக்கொலைகளைத் தடுக்க முடியும்’’ என்றார்.