அலசல்
Published:Updated:

தாலுகா ஆபீஸ் குமாஸ்தாக்களா தலைமை நீதிபதிகள்?

நீதிபதிகள் மாற்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீதிபதிகள் மாற்றம்

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி

கொல்கத்தாவிலிருந்து வந்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பத்து மாதங்களில் பந்தாடப்பட்டிருக்கிறார் சஞ்ஜிப் பானர்ஜி. அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்குத் தலைமை நீதிபதியாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 237 வக்கீல்கள் கையெழுத்திட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியிருக்கிறார்கள். இந்த மாற்றத்தின் பின்னணி என்ன?

உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவர்கள் வெளிமாநில நீதிபதியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கொள்கை முடிவு எடுத்தது. நீதிபதிகள் விருப்பு வெறுப்பற்று செயல்படவே இந்த முடிவு. சஞ்ஜிப் பானர்ஜி 22.6.2006 அன்று கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் 72 நீதிபதிகள் அடங்கிய அந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகப் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றவுடன் அந்த இடத்தில் சஞ்ஜிப் பானர்ஜி 4.1.2021 அன்று நியமிக்கப்பட்டார். அவரது பெயரை அன்றைய கொலிஜியம் பரிந்துரைத்த பின்னரே ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை அளித்தது.

கே.சந்துரு
கே.சந்துரு

சஞ்ஜிப் பானர்ஜிக்கு மீண்டும் பதவி உயர்வு ஏதும் இல்லையென்றால் அவர் ஓய்வூதிய வயதை 1.11.2023 அன்று அடைவார். இன்னும் அவருக்கு இரண்டு வருட பணிக்காலம் உள்ளது. அவர் பொறுப்பேற்றது கொரோனா தொற்றுக் காலம் என்பதால் காணொலி மூலமே வழக்குகள் விசாரிக்கப்பட்டன. பல வழக்குகளில், குறிப்பாக, பொதுநல வழக்குகளில் சிறப்பாகத் தீர்ப்பளிக்க முயன்றார். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

தி.மு.க பதவியேற்றதைச் சகித்துக்கொள்ள முடியாத வலதுசாரிகள் சிலர் நீதிமன்றத்தில் தங்களது திறமையைப் பொதுநல வழக்குகள் மூலம் காண்பிக்க ஆரம்பித்தனர்; மதப் பிரச்னையைக் கையிலெடுத்தனர். மதவெறியைத் தூண்டிவிடும் வகையில் போடப்பட்ட வழக்குகளை ஆரம்பகட்டத்திலேயே தள்ளுபடி செய்ததுடன், ‘மதச்சார்பின்மையே அரசியல் சட்டத்தின் ஆதார சுருதி’ என்பதை நிலைநாட்டினார் சஞ்ஜிப் பானர்ஜி. இது அவர்களுக்கு உறுத்த ஆரம்பித்தது. டெல்லி வரை அவர்களது புலம்பல் ஒலிக்க ஆரம்பித்தது.

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையில் நீதிமன்றத்தை நடத்துவதே கடினமானதாக இருந்தபோதும், அதைத் திறம்பட நடத்திக் காட்டினார் சஞ்ஜிப் பானர்ஜி. தேர்ந்தெடுக்கப்பட்ட வக்கீல் சங்கங்களும் அவர்மீது குறை ஏதும் கூறவில்லை. இருப்பினும், அவரை ஊர்மாற்றம் செய்வதற்கு இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் தலைமையிலான கொலிஜியம் 16.9.2021 அன்று பரிந்துரைத்துள்ளது. ஒன்றரை மாதத்துக்கு முன்னால் இந்த முடிவு எடுக்கப்பட்டபோதும் அதை வெளியிடுவதற்குக் காலதாமதம் ஏன் என்று தெரிவிக்கப் படவில்லை.

பதவியிலிருக்கும் தலைமை நீதிபதியை வேறொரு மாநிலத்துக்கு மாற்றுவதற்கு முன்னால், அந்த நீதிபதி தற்போது பணியாற்றும் உயர் நீதிமன்றத்திலிருந்து, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற நீதிபதிகளிடம் கலந்தாலோசனை நடைபெறும். அந்தவகையில் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால், மூத்தவர்களைத் தவிர்த்துவிட்டு, அந்த நால்வரில் இளையோர் ஒருவரிடம் மட்டுமே கருத்துகள் பெற்றதாகத் தெரியவருகிறது. அதற்கான காரணமும் கூறப்படவில்லை.

தாலுகா ஆபீஸ் குமாஸ்தாக்களா தலைமை நீதிபதிகள்?

75 நீதிபதி பதவிகள்கொண்ட 159 வருட பாரம்பர்ய சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து, 2013-ல் ஏற்படுத்தப்பட்ட நான்கு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு சஞ்ஜிப் பானர்ஜியை மாற்றப் பரிந்துரைத்தது ஏன்? சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றதிலிருந்து பைசல் செய்த வழக்குகளில் சுணக்கம் இருந்தது என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தவறு. அவர் இதற்கு முன் பதவி வகித்தவர்களைவிட விரைவில் விசாரிக்கும் திறமை பெற்றவர். அவர் அளித்த தீர்ப்புகளில் குறை இருப்பின் அதை ரத்து செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. இந்தப் பத்து மாதங்களில் அவரது தீர்ப்பு எதுவும் மாற்றி எழுதப்படவில்லை.

முனீஷ்வர் நாத் பண்டாரி என்பவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக 5.7.2007 அன்று நியமிக்கப்படுகிறார். அவர் பதவியிலிருந்த 12 வருடங்களில் எப்படிச் செயல்பட்டார் என்பதை நாம் அறியோம். இருப்பினும், 2019-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோகாயுடன் செயல்பட்ட கொலிஜியம், ‘நீதி நிர்வாகம் சிறப்பாகச் செயல்படவேண்டிய நலன்’ கருதி அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குப் பணிமாற்றம் செய்ய உத்தரவிட்டது. அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று 2019, ஜனவரி 18 மற்றும் 23-ம் தேதியிட்ட கடிதங்கள் மூலம் கொலிஜியத்துக்கு வேண்டுகோள் விடுத்தார் எம்.என்.பண்டாரி. அவற்றைப் பரிசீலித்த கொலிஜியம், தங்களது பரிந்துரையை மாற்றியமைக்கவோ ஒத்தி வைக்கவோ மறுத்துவிட்டது. வேறு வழியின்றி எம்.என்.பண்டாரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 15.3.2019 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

கொலிஜியம் ஒரு நீதிபதியை நிர்வாகநலன் கருதி மாற்றுகிறது என்றால், அடுத்து வரும் கொலிஜியம் அதற்கு நேர்விரோதமாக அதே நபரை மற்றொரு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ததுடன், மாற்றப்படப்போகும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பையும் வழங்குகிறது. அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்... முந்தைய கொலிஜியத்தின் முடிவு தவறா... அவர்களுக்குப் புதிய வாழ்வளிக்கும் ஏற்பாடா?

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட எம்.என்.பண்டாரியைத்தான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக மாற்றுவதற்கு அதே 16.9.2021 தேதியன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். எனவே, புதிதாக வரப்போகும் எம்.என்.பண்டாரி முதுநிலைப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்படுவார்.

ஒரு மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு முன்னால் அந்த மாநில அரசின் கருத்தும் கேட்கப்படும். ஆனால், பொறுப்பு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படும்போது யாருடைய கருத்தையும் கேட்கவேண்டிய அவசியம் சட்டத்தில் இல்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப்போல், ராஜஸ்தானிலிருந்து நிர்வாகநலன் கருதி கொலிஜியத்தால் மாற்றப்பட்ட நீதிபதி, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆவதற்கு புதிய கொலிஜியம் பரிந்துரைத்திருப்பது விசித்திரத்திலும் விசித்திரம். ஆகமொத்தம் கொலிஜியத்தின் முடிவுகள் நீதிபதிகளின் பணி சிறப்புக் கருதி எடுக்கப்படும் முடிவுகள் அல்ல என்பதை இந்த இரு மாற்றங்களிலிருந்தும் அறிய முடிகிறது.

ஒரு நீதிபதியின் செயல்பாடுகளை அறிந்துகொள்வதற்குப் பல வழிகள் உண்டு. விருப்பு வெறுப்பற்ற சீனியர் வக்கீல்களின் கருத்துகளை அறிவதுகூட அதில் ஒரு வழி. இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாநில நீதிமன்றத்திலிருந்து வேறொரு மாநில நீதிமன்றத்துக்கு நீதிபதி ஒருவரை மாற்றியதைத் தனது சுயவரலாற்றில் குறிப்பிட்டுள்ளார் அன்றைய தலைமை நீதிபதி பி.பி.கஜேந்திர கட்கர். 1960-களின் ஆரம்பத்தில், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த சந்திரா ரெட்டி மீது தனது சமூகத்தினருக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கி, நேர்மையற்று செயல்படுகிறார் என்று புகார்கள் எழுந்தன. இந்திய அரசமைப்பு சட்டத்தில் உயர் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும் உச்ச நீதிமன்ற நீதிபதி கஜேந்திர கட்கர் ரகசியமாக ஹைதராபாத்துக்கு வந்து, சில வழக்கறிஞர்களிடம் விசாரித்து, சந்திரா ரெட்டி மீதான புகார்களை உறுதி செய்து, அவரை ஊர் மாற்றம் செய்ய பரிந்துரைத்திருக்கிறார்.

தாலுகா ஆபீஸ் குமாஸ்தாக்களா தலைமை நீதிபதிகள்?

இந்தச் சம்பவத்தில் வக்கீல்களின் கருத்து பெறப்பட்டதை சூசகமாக அறியலாம். சஞ்ஜிப் பானர்ஜியின் மாற்றப் பரிந்துரைக்கு எதிராக மனு அனுப்பியுள்ள பல வக்கீல்கள், நேர்மைக்கும் திறமைக்கும் பெயர்பெற்றவர்கள். கொலிஜியப் பரிந்துரைகளை ஒன்றிய அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ள அவசியமில்லை. அவர்கள் விரும்பினால் மீண்டும் கொலிஜியத்தின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்ப முடியும்.

தாலுகா ஆபீஸ் குமாஸ்தாக்களை மாற்றுவதுபோல் தலைமை நீதிபதிகளை மாற்றுவது, நீதி நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடும். ஒன்றிய அரசு இப்போதாவது நடவடிக்கை எடுக்குமா என்பதே மக்களின் கேள்வி.