Published:Updated:

‘காவலர்களின் நண்பன்’

சட்டவிரோத அமைப்பு கலைக்கப்பட வேண்டும்!

பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளத்தில் இரு வணிகர்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்த காவலர்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவரும் இந்த நேரத்தில், காவலர்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு துணை நின்ற ஒரு கூட்டத்தைப் பற்றியும் அச்சத்துடன் பேசுகிறார்கள் மக்கள். சீருடை அணியாத ‘காவலர்களின் நண்பன்’ (Friends of Police) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தக் கூட்டத்தினர். `இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா, இந்த அமைப்பு சட்டபூர்வமானதா?’ என்றால் இல்லை. நாடு முழுவதும் இந்த அமைப்பினரைப் பயன்படுத்தி காவல்துறையினர் செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
கே.சந்துரு, 
மேனாள் நீதிபதி, 
சென்னை உயர்நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ‘காவலர்களின் நண்பன்’ என்று சிலருக்கு அடையாள அட்டை கொடுத்துவைத்திருக் கிறார்கள். அந்தந்த மாவட்ட/மாநகர காவல்துறை தலைமை அதிகாரி இந்த அடையாள அட்டையை விநியோகித்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களது தலைமை நிலையம், `தமிழக காவல்துறை தலைவர் அலுவலகம்’ என்றும் கூறப்படுகிறது. ‘காவலர்களின் நண்பன்’ குழுவினர் தன்னார்வலர்கள்போலச் செயல்படுகிறார்கள் என்று காவல்துறை தரப்பில் சொல்கிறார்கள்.

இவர்களை யார் தேர்ந்தெடுக்கிறார்கள், இவர்களின் வேலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. கேட்டால், `தன்னார்வ சமூகப் பணி’ என்பார்கள். சமுதாயக் காவல் பணிபுரிவதற்காக இந்த அமைப்பை அன்றைய காவல்துறை தலைவர் பிரதீப் பிலிப் (இ.கா.பணி) தொடங்கி வைத்ததாக விக்கிபீடியாவில் தகவல் உள்ளது. இந்த அமைப்பு 1888-ம் வருடத்திய சென்னை போலீஸ் சட்டத்தின்கீழ் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் ‘காவலர்களின் நண்பன்’ என்ற அமைப்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை.

‘காவலர்களின் நண்பன்’

லஞ்சத்தில் இயங்கும் படை!

அதேசமயத்தில் இந்த அமைப்பின் நோக்கத்தைப் பற்றி காவல்துறையின் வலைதளத்தில் ‘சமுதாயக் காவல்பணியில் ஒரு கூடுதல் படையாகச் செயல்படுபவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில்/தமிழகத்தில் இதுவரை காவலர்கள் வன்முறையில் ஈடுபட்ட பல சம்பவங்களில் சீருடையே அணியாமல் சிலர் அதில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. அதைவைத்துப் பார்க்கும்போது காவல்துறையினர் மாமூல் வசூலித்தல், வழக்குகளில் லஞ்சம் பெறுதல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் தங்களுக்குப் பிடிக்காத பொதுமக்களைத் தாக்குதல் உள்ளிட்ட தங்களது இன்ன பிற சட்ட விரோத நடவடிக்கை களுக்காக இப்படியொரு படையை உருவாக்கிச் செயல்படுவது தெரியவருகிறது. தமிழகத்தில் ‘காவலர்களின் நண்பன்’ படையில் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவலும் இல்லை. ஆனால், இந்த அமைப்பு 25 வருடங்களாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு காவல் படைக்காக அரசு அளிக்கும் மானியம் பற்றிய தகவல்களிலும் இந்தப் படையினர் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. அப்படியெனில் ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் உள்ள சிறப்பு செலவீனத்திலிருந்து அவர்களுக்கு ‘படி’ வழங்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது அவர்களும் மக்களிடம் மிரட்டி காசு வாங்குகிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

திருப்பத்தூரில் நக்சல்கள் வேடையாடப் பட்டபோது பொதுமக்கள் அடைந்த துன்பங்கள் சொல்லி மாளாது. அதை விசாரிக்க உண்மை அறியும் குழுவினர் திருப்பத்தூர் சென்றபோது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சீருடை அணியாத ஆட்கள் புகுந்து தாக்கினர். பெட்டி படுக்கைகளை எடுத்து தெருவில் வீசினர். ஒருவேளை அந்த ஆட்கள் அதிகாரபூர்வமற்ற ‘காவலர்களின் நண்பர்’களாக இருக்கக்கூடும். அப்போது அந்த மண்டல காவல்துறை தலைவராக இருந்த தேவாரம் ஐ.பி.எஸ், ‘தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் பொதுமக்கள்’ என்று சமாளிக்க முயன்றார்.

ஆனால், இப்போது ‘காவலர்களின் நண்பன்’ என்ற ஒரு படையை அதிகாரபூர்வமாக அமைத்து காவல்துறை தனது சட்டவிரோத நடவடிக்கை களை நிறைவேற்றிக்கொள்கிறது. இதற்காக எந்தச் சட்டத்திருத்தமோ அல்லது சட்டப்பேரவையின் ஒப்புதலோ பெறப்படவில்லை. ஒரு சீருடைப் படை தனது காரியங்களுக்கு உதவுவதற்காக வேறு தனி நபர்களையோ அல்லது அமைப்பையோ நிறுவ வேண்டும்/பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்குச் சட்ட அங்கீகாரம் தேவை.

மிருகவதை தடுப்பு சட்டத்தின்கீழ் மிருகங்களைத் துன்புறுத்துவோரைக் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வர, தனியார் அமைப்புகளுக்கு தமிழ்நாடு காவல்துறை சட்டப் பிரிவு 24-ல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ‘காவலர்களின் நண்பன்’ என்ற படை சட்ட அங்கீகாரம் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. அப்படியே சட்ட அங்கீகாரம் வழங்கினாலும், அந்தச் சட்டப் பிரிவுகள் அரசமைப்பு சட்டப் பிரிவு 14 (சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்; வேறுபாடு பார்க்க முடியாது; அரசமைப்பு சட்டத்துக்கு மாற்றாகத் தன்னிச்சையாக எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது) மற்றும் 21 (மக்கள் சுதந்திரமாக இருக்கும் உரிமை) பிரிவுகளுக்கு விரோதமாக இருக்கக் கூடாது.

சட்டவிரோத அமைப்பு உச்ச நீதிமன்றம் தடை

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க அந்த மாநில அரசு ‘சல்வா ஜுடும்’ (Salwa Judum) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. அந்த அமைப்பின் நோக்கம் ‘அமைதி யாத்திரை’ மற்றும் ‘சுத்திகரிக்கும் வேட்டை’ என்று கூறப்பட்டது. இதற்காக சத்தீஸ்கர் மாநில காவல் சட்டத்தின்கீழ் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப் பட்டன. இந்தப் படையைச் சேர்ந்தவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, துப்பாக்கிகளும் தோட்டாக்களும் வழங்கப்பட்டன.

‘காவலர்களின் நண்பன்’

தொல்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறி ‘சல்வா ஜுடும்’ படையில் ஆட்கள் சேர்க்கப்பட்டனர். இந்தப் படையினர் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்குச் சென்று, யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ள முடியும். அப்படித்தான் அரச படைகளுக்கு ஆதரவாக இவர்கள் மக்களை, சமூகச் செயற் பாட்டாளர்களை `நக்சல்கள்’ என்று கூறி வேட்டை யாடினார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இவர்கள் சுட்டுத்தள்ளியதில் பலரும் நக்சல்கள் அல்ல; தங்களது தனிப்பட்ட விரோதிகளைத் தீர்த்துக்கட்டவும், பலரிடம் மிரட்டிப் பணம் பறிக்கவுமே இந்த அமைப்பினர் பலரை சுட்டுக் கொன்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

` ‘சல்வா ஜுடும்’ அமைப்பைத் தடை செய்ய வேண்டும்; அது அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது’ என்று டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் நந்தினி சுந்தர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 5-7-2011 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. சத்தீஸ்கர் மாநில அரசையும் மத்திய அரசையும் சாடிய உச்ச நீதிமன்றம், ‘இன்று நீங்கள் ஆயுதப்பயிற்சி அளித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் இளைஞர்கள், அதே ஆயுதங்களை உங்களை நோக்கித் திருப்புவதற்கு எவ்வளவு நாள்களாகும்? அரசமைப்பு சட்டத்தில் இப்படியான முறைகேடான செயல்களுக்கு இடம் இல்லை. நீங்களே தன்னிச்சையாக ஆட்களைத் தேர்ந்தெடுத்து மனம் போன போக்கில் பயன்படுத்தத் தயார் செய்யப்பட்ட படைக்கு சட்டத்தில் இடமில்லை. அது அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 21-க்கு விரோதமானது’ என்று தீர்ப்பளித்தனர். மேலும், மாநில அரசுத் தரப்பில், ‘சமூகக் காவலுக்கான கூடுதல்படை’ என்று கூறப்பட்ட வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

காவலர்களின் நண்பன்... மக்களின் எதிரி!

சாத்தான்குளம் கொடூர சம்பவத்திலும் இந்தச் சட்டவிரோதப் படையினரின் பங்கு நிறைய இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அங்கு இவர்கள் உட்பட காவலர்கள் மிருகவெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டுபிடிக்க முடியாதபடி கண்காணிப்பு கேமரா பதிவுகள் 24 மணி நேரத்தில் அழிந்துபோகும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கையாண்டுள்ளனர். மேலும், கேமராக்கள் இல்லாத பகுதியை அவர்களது சித்ரவதைக் கூடமாக மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்து நடத்திவரும் வழக்கில் காவலர்களின் சித்ரவதைகளைப் பட்டியலிட்டுக் கண்டித்ததுடன், இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் கூண்டோடு ஊர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவரையே ‘‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று கொச்சையாக எடுத்தெறிந்து பேசும் காவலர்களை நீதித்துறை இதுவரை கண்டதில்லை.

`அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது’ என்று நடத்தை விதிகள் உள்ளன. ஆனால், ‘காவலர்களின் நண்பன்’ படையினருக்கு அப்படியெல்லாம் தடைகள் எதுவும் இல்லை. எனவே, எளிதாக இப்படையினர் அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவ முடியும். இதனால், காவல்துறையின் கடமைகள் அரசியல் ஆக்கப்படுவதுடன், அது ஜனநாயகத்துக்கே ஆபத்தை விளைவிக்கும்.

தற்போது அனைவரும் பரவலாக காவல்துறை சீர்திருத் தங்கள் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். சீர்திருத்தங்களில் முதல் கோரிக்கை ‘காவலர்களின் நண்பன்’ என்கிற சட்டவிரோதப் படையைக் கலைக்க வேண்டும் என்பதாகவே இருக்கட்டும். அப்போதுதான் இது போன்ற கொடூரங்களை ஓரளவாவது குறைக்க இயலும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு