மருத்துவப் படிப்பில் இருக்கும் LGBTQ+ மக்கள் குறித்த அறிவியலுக்கு எதிரான, தவறான குறிப்புகளை நீக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மதுரையைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பினப் பெண்கள் குறித்த வழக்கில் LGBTQ+ மக்களின் பாதுகாப்பு குறித்த முக்கியத் தீர்ப்பை ஆனந்த் வெங்கடேஷ் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் தற்போது, மத்திய மருத்துவக் கல்வி வாரியத்தின் (Central Board of Medical Education - CBME) கீழ் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புப் பாடத்திட்டத்தில் LGBTQ+ மக்களை அவமதிக்கும் விதமாக அமைந்திருக்கும் கருத்துகளை நீக்கச் சொல்லி, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (The National Medical Council (NMC) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனைத்து மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தடயவியல் மருத்துவம், நச்சுயியல் பாடங்கள் மற்றும் உளவியல் பாடங்களில் LGBTQ+ மக்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளும், கன்னித்தன்மை குறித்து அறிவியலுக்கு எதிரான தகவல்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது என்றும், அதை நீக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாடம் நடத்தும் போது பேராசிரியர்கள் மாணவர்களுக்கு LGBTQ+ சமூகத்தினர் பற்றிய தரக்குறைவான, பாரபட்சமான அல்லது அவமானகரமான எண்ணம் ஏற்படாமல் இருக்குமாறு வகுப்பு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவக் கல்விப் பாடப் புத்தகங்களில் நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் அரசு உத்தரவின் படி திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமுதாயத்தில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் LGBTQ+ சமூகம் நிமிர்ந்து நிற்க நீதிமன்ற தீர்ப்புகள் வழிவகுக்கும். LGBTQ+ மக்கள் குறித்த விழிப்புணர்வு பொதுச் சமூகத்திடம் குறைவாக உள்ள நிலையில், அவர்களைப் பற்றிய தவறான கருத்துகளும், கேலி கிண்டல்களும் அனைத்து தளங்களிலும் நிறைந்திருக்கின்றன. இந்த அவலத்தின் மீதான கல்லடிகளாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புகள் உள்ளன.
முன்னதாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூன் மாதம் வழங்கிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த தீர்ப்பில், மத்திய, மாநில அரசுகள் LGBTQ+ மக்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குக் கட்டாய பாலின மாற்று சிகிச்சை வழங்கத் தடை விதிக்க வேண்டும், சிறைகளில் LGBTQ+ மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும், பள்ளி அவர்களுக்குக் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டளைகளை வழங்கினார். தற்போது, மருத்துவப் படிப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் வழி செய்துள்ளது LGBTQ+ மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.