Published:Updated:

அர்ச்சகர்கள் நியமனத் தீர்ப்பு... ஆதங்கமும் வரவேற்பும்!

அர்ச்சகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சகர்கள்

ஆகம விதிகளுக்கு முரண்பட்டு எதுவும் செய்யக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாகச் சொல்லியிருக்கிறது

அர்ச்சகர்கள் நியமனத் தீர்ப்பு... ஆதங்கமும் வரவேற்பும்!

ஆகம விதிகளுக்கு முரண்பட்டு எதுவும் செய்யக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாகச் சொல்லியிருக்கிறது

Published:Updated:
அர்ச்சகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சகர்கள்

தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 28 பேரை பல்வேறு கோயில்களில் அர்ச்சகராக நியமித்தது தமிழ்நாடு அரசு. அவர்களில் ஐந்து பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நியமனத்துக்குப் பெருமளவில் ஆதரவு எழுந்த நிலையில், அதை எதிர்த்து ஆகமப் பயிற்சிப் பள்ளி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ‘அரசின் 28 நியமனங்களும் செல்லும்’ எனத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு பக்கம் வரவேற்கப்பட, மற்றொரு பக்கம் ஆதங்கக் குரல்களும் எழுந்திருக்கின்றன!

அர்ச்சகர்கள் நியமனத் தீர்ப்பு... ஆதங்கமும் வரவேற்பும்!

‘தமிழ்நாடு அரசு நியமனம் செல்லும்!’

2020-ல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் ‘அர்ச்சகராகச் சேர்வோர் 18 - 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டு அர்ச்சகர்கள் நியமனத்துக்கென புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. ஓராண்டாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு 2022, ஆகஸ்ட் 22-ல் வெளியானது. அதில் ‘அர்ச்சகர் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும்’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோயில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோயில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களில் 197 மாணவர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அர்ச்சகர் பயிற்சியைத் தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரங்கநாதன்
ரங்கநாதன்

“தீர்ப்பை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!”

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன் “சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்டவர்களின் நியமனங்களில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், வருங்காலத்தில் நியமனம் செய்யும்போது சிக்கல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. `எல்லோரும் அர்ச்சகராகலாம்’ என்ற பிறகு ஆகமக் கோயில், ஆகமம் இல்லாத கோயில் எனப் பிரிக்க குழு ஏன் அமைக்க வேண்டும்... அப்படிப் பிரிப்பதன் மூலம் கோயில்களில் மீண்டும் சாதி வேற்றுமை உருவாகும். தமிழ்நாடு அரசு அந்தக் குழு அமைக்க ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது. அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைச் சட்டமாக இயற்ற வேண்டும். கோயிலில் சமத்துவம், சமூகநீதியை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு முதல்வர் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்” என்றார் ஆதங்கத்துடன்.

சதீஸ் பராசரன்
சதீஸ் பராசரன்

அழகான தீர்ப்பு!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆகம பாடசாலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஸ் பராசரனிடம் பேசினோம். “ஆகம விதிகளுக்கு முரண்பட்டு எதுவும் செய்யக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இது சட்டப் பிரிவு 16-ல், ‘அறங்காவலர்கள் மூலமாகவே அர்ச்சகர்கள் நியமனங்கள் நடக்க வேண்டும்’ என்பதைத் திருத்தி, ‘ஆகமக் கோயில்களில் நியமனக்குழு மூலம் நியமனம் செய்யலாம்’ எனக் கொண்டுவந்ததைத் தடை செய்திருக்கிறது. இனி, ‘ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களில் மரபை மீறி நியமனக்குழு எதுவும் செய்யக் கூடாது’ என்ற அழகான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தீர்ப்பின் நகல் இன்னும் முழுமையாகக் கைக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு அதை ஆய்வுசெய்து தேவை ஏற்பட்டால் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சேகர் பாபு
சேகர் பாபு

தீர்ப்பு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டோம். “அரசின் விதிகளை உறுதி செய்திருக்கிறது, எனவே இது மகிழ்ச்சியான, வரவேற்கக்கூடிய தீர்ப்பு. ஆகம விதிகளின்படி கோயில்களைக் கண்டறிந்து அதன்படி அர்ச்சகர்களை நியமிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பால் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் மீண்டும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பது தேவையற்ற அச்சம்” என்றார்.

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதற்கு ஆதரவாக நிற்பவர்களும், எதிர்ப்பவர்களும் இந்தத் தீர்ப்பைத் தங்களுக்குத் தகுந்தாற்போல விளக்குகிறார்கள். தீர்ப்பு நகல்கள் கிடைத்த பிறகே இது குறித்து ஒரு முழுமையான புரிதலுக்கு வர முடியும்!

அர்ச்சகர்கள் நியமனத் தீர்ப்பு... ஆதங்கமும் வரவேற்பும்!

“ஆகமத்தில், குறிப்பிட்ட சமூகத்தினர்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று இல்லை!”

“ஆகமம் என்பது கோயிலின் அமைப்பைவைத்து இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்வது. கண்ணப்பர் செய்ததும் வழிபாடுதான். கருவறையில் செய்வதும் வழிபாடுதான். வடமொழி வேதங்களுக்கும், தமிழில் சொல்லப்படும் ஆகமத்துக்கும் சிறு தொடர்பும் இல்லை. ஆகமம் என்றால் என்ன என்பதை வரையறை செய்ய நூல்கள் இருக்கின்றனவா என்பதுதான் இதில் மிகப்பெரிய கேள்வி. மொத்தம் 28 ஆகம நூல்கள் இருக்கின்றன. அவற்றில் 6 அல்லது 7 ஆகமங்களைத்தான் புதுச்சேரியிலுள்ள இந்தியவியல்துறை அச்சிட்டிருக்கிறது. கொன்றை மாநகரம் சண்முக சுந்தரமும், தேவகோட்டை சிவாகம சித்தாந்தப் பரிபாலன சபையும் சில ஆகமங்களைப் பதிப்பித்திருக்கிறார்கள். அவற்றைவைத்து எந்தக் கோயில், எந்த ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிவது சிரமம். இப்போது அனைத்துக் கோயில்களிலும் ‘அகோர சிவாச்சார்ய பத்ததி’ என்பதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள். பத்ததி என்பது பல்வேறு ஆகமங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பொது நூல். பத்ததியிலும் 18-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. எந்த ஆகமத்திலோ, பத்ததியிலோ ‘குறிப்பிட்ட சமூகத்தினர்தான் வழிபாடு நடத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்படவில்லை. என்ன நம்பிக்கை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், என்ன சாதியாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், வழிபாடு நடத்துவதற்கு ஆகமம் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் சிறப்பான வழிபாடு என்பதைத்தான் அவை சொல்கின்றன!”

- முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார், தமிழ் ஆகம அறிஞர்.