Published:Updated:

`சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர்!’- உயர் நீதிமன்றம் கண்டனம்

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

``ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் ” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெயராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,``விவசாய நிலங்களை அடமானம்வைத்து நீண்டகாலக் கடனாக 50 லட்சம் மற்றும் வீட்டுக் கடனாக 15 லட்ச ரூபாயை திருச்சி சின்னக்கடை வீதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பெற்றோம். வீட்டுக் கடனுக்காக ரூ.18 லட்சமும் நீண்டகாலக் கடன் தொகையில் 25 லட்ச ரூபாயும் செலுத்தப்பட்டிருக்கிறது. தொழிலில் ஏற்பட்ட சரிவால் தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.

நீதிபதிகள் உத்தரவு
நீதிபதிகள் உத்தரவு

இதனால், எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட வங்கி மேற்கொண்டது. எனவே, விவசாய நிலத்தைக் காப்பாற்ற நீதிமன்றத்தை நாடிய போது ரூ.75 லட்சம் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து 75 லட்சத்துக்கான வரைவு காசோலையை சென்னையிலுள்ள சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் கொடுப்பதற்காக, கடந்த அக்டோபர் 7-ம் தேதி வங்கிக்குச் சென்றபோது வங்கி மேலாளர் அதை வாங்க மறுத்து, எங்கள் மீது வீசி எறிந்தார். எனவே நீதிமன்ற உத்தரவைக் கடைபிடிக்கக் கோரியும் தனியாரிடம் பணம் வசூலிப்பதற்காக விவசாய நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

தவறான ‘சிபில்’ ஸ்கோர்... என்ன சிக்கல்..? - நெல்லைக்காரரின் கடன் ‘ஷாக்’ அனுபவம்!

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வங்கிகள் பணம் வசூலிக்க மூன்று விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் பதிலைவைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பிறகே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும்,
பணம் செலுத்த முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன... தனியார் நிறுவனங்கள் குண்டர்களைவைத்துக் கடன் தொகையை வசூலிக்கின்றனர்.

கடன்
கடன்
Representational Image

இவ்வாறு செய்வதற்கு பதிலாக, வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் பணம் வசூல் செய்கிறோம் என்று கூறி துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி வரைவுக் காசோலையை தூக்கி எறிந்த வங்கியின் மேலாளர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அந்த வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு