Election bannerElection banner
Published:Updated:

`கழிவுகளால் மோசமாகும் அமராவதி ஆறு; 5 இடங்களில் நீர் மாதிரி ஆய்வு!’- உயர் நீதிமன்றம் உத்தரவு

அமராவதி ஆறு
அமராவதி ஆறு

விசாரணையின்போது, ஆறுகளை மாசுபடுத்துவோர்மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அரசிடம் உரிய விளக்கம் பெற்று சமர்ப்பிக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலுள்ள அமராவதி ஆறு, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து இறுதியில் திருமக்கூடலூர் காவிரியில் கலக்கிறது. வாய்மடை தொடங்கி காவிரியில் கலக்கும் கடைமடைவரை அமராவதி ஆறு 282 கிலோமீட்டர் தூரம்கொண்டது. இந்த ஆறு மாசடைந்துவருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பிவருகின்றனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,``அமராவதி ஆறு சுமார் 282 கி.மீ தூரம் திருப்பூர், கரூர் வழியாகச் செல்கிறது. கரூர், திருப்பூர் ஆகிய நகரங்களிலுள்ள நிறுவனங்கள், கழிவுகளை ஆற்றுக்குள் கலக்கின்றன. மேலும், கரூர் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படுகிறது.

இதனால் அமராவதி ஆறு மிகவும் மோசமான நிலைக்கு மாறுகிறது. தூய்மையான ஆறு மாசடைவதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, சாயக்கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலக்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஆறுகளை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அரசிடம் உரிய விளக்கம் பெற்று சமர்ப்பிக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அமராவதி ஆற்றுப் பகுதியிலுள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் ஐந்து இடங்களில் நீரின் மாதிரிகளை எடுத்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சென்னை கிங்ஸ் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு