Published:Updated:

`பிரபலங்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்!’ ஆன்லைன் சூதாட்ட வழக்கில் உயர் நீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

`ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்காக விளம்பரம் செய்யும் பிரபலங்களை, பல லட்சக்கணக்கானவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்களையே எதிர்காலமாகக் கருதுகின்றனர்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

`ஆன்லைன் சூதாட்டம்’ தமிழகத்தை அச்சுறுத்தும் சொல்லாக மாறிவிட்டது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் அதிகரித்தபடியே இருக்கி?றது. பலரும் தங்களின் ஸ்மார்ட்போன் வழியே விளையாடிவந்த இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள், தற்போது பலரையும் அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிட்டன. அதேபோல் வீட்டிலுள்ள சிறுவர்கள்கூட தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் ஆன்லைன் விளையாட்டு மூலம் பணத்தை ஏமாறும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் நீலமேகம், வழக்கறிஞர் முகமது ரஷ்வி, முத்துக்குமார் ஆகியோர் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை கோரி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

வழக்கறிஞர் ரஷ்வி தாக்கல் செய்திருந்த மனுவில், ``ஆன்லைனில் விளையாடக்கூடிய சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் தங்களது அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து, கடைசிக்கட்டத்தில் தற்கொலை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுவரை 13 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சூதாட்ட விளையாட்டு, நமது நாட்டில் பல மாநிலங்களில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தடையில்லாமல் இந்த விளையாட்டு நடைபெற்றுவருகிறது. மேலும், இந்த விளையாட்டை ஊக்குவிக்க புகழ்பெற்ற சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களையும் பயன்படுத்துகின்றனர். எனவே, அனைத்து ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டுக்கு விளம்பரத் தூதுவர்களாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு நினைத்தால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய முடியுமா... என்ன சொல்கிறது சட்டம்? #Gambling Act

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணை வந்தபோது, முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகை தமன்னா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி

அப்போது நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்காக விளம்பரம் செய்யும் பிரபலங்களை, பல லட்சக்கணக்கானவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்களையே எதிர்காலமாகக் கருதுகின்றனர். இந்தநிலையில், இது போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்காக இவர்கள் விளம்பரத்தில் நடித்துவருகின்றனர். இது போன்ற ஆன்லைன் விளையாட்டால் பலரும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். ஆகவே, பிரபலமானவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, வழக்கில் பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரியதால், கால அவகாசமளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவனை நியமனம் செய்து உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு