Published:Updated:

பாலியல் தாக்குதல் வழக்குகள்... ஊடகங்களின் கடமை என்ன?

இது போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை எவ்விதத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற ஊடக வழிகாட்டுதல்கள் நிறைய உள்ளன.

‘புதுக்கோட்டையில், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுமி மரணம்’ என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சிக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது, சிரித்த முகமும் சிதைந்த உடலுமாக வெளியாகியிருந்த அந்த ஏழு வயது சிறுமியின் புகைப்படங்கள்!

`பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தையோ, பெயர் உள்ளிட்ட அடையாளங்களையோ பகிரங்கமாக வெளிப்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை’ என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். ஏனெனில், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண் அல்லது குழந்தை இந்தச் சமூகத்தால் கேலிக்கு உள்ளாகிறார்கள்; வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள்; அவமானப்படுத்தப் படுகிறார்கள்; ஒட்டுமொத்த குடும்பத்தாரும்கூட ஒதுக்கப்படுகிறார்கள் என்பதுதான் நம் சமூக எதார்த்தம்! எனவேதான், பாதிக்கப்பட்டவரின் நலனைப் பாதுகாப்பதற்காக இத்தனை நடவடிக்கைகள்.

பாலியல் தாக்குதல் வழக்குகள்... ஊடகங்களின் கடமை என்ன?

அயனாவரம் சிறுமி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய வழக்கறிஞர் என்.ரமேஷிடம் இது குறித்துப் பேசியபோது, ‘‘பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட 18 வயதுக்குக் கீழிருக்கும் குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்துவதும், போக்சோ (POCSO) சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இப்படிப்பட்ட வழக்கில் வழங்கப்படும் தீர்ப்புகளில்கூட பாதிக்கப்பட்டவரின் பெயரையும் அடையாளத்தையும் மறைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. (பார்க்க... பாக்ஸ் செய்தி)

‘பாலியல் தாக்குதலுக்குள்ளான நபரின் அடையாளங்கள் மறைக்கப்படும்போது, அது சம்பந்தப்பட்ட வழக்கில் நீதி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்துமா...’ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை மறைப்பதாலேயே நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், பாலியல் தாக்குதலுக்கு உள்ளான நபரின் பெயர், புகைப்படம் மற்றும் ஊர் விவரங்கள் உள்ளிட்ட அடையாளங்களைத் தான் மறைக்க வேண்டுமே தவிர, குற்றம்சாட்டப் பட்டுள்ள நபரின் அடையாளங்களை மறைக்கத் தேவையில்லை.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், அனைத்துக் குற்றச் சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்டவர்தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றில்லை. சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டவர்களும்கூட வழக்கு தொடுக்கலாம். நீதிமன்றம் தனது கவனத்துக்கு வரக்கூடிய இது போன்ற சம்பவங்களில் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து நடத்தியிருக்கிறது. ஆனால், எல்லாச் சம்பவங்களிலும் நீதிமன்றமே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துவிட முடியாது’’ என்றார் தெளிவாக.

பாலியல் தாக்குதல் வழக்குகள்... ஊடகங்களின் கடமை என்ன?

இந்த விஷயத்தில் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இன்றைய ஊடக நிலவரம் பற்றி மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங், ‘‘இது போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை எவ்விதத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற ஊடக வழிகாட்டுதல்கள் நிறைய உள்ளன. செய்தித் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், இது போன்ற ஒழுங்குமுறையெல்லாம் கவனிக்கப்படாமலேயே போய்விட்டன.

அதிலும் செய்தி நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மனப்பான்மையில், ‘நீ இந்தச் செய்தியை இப்படி வெளியிட்டுவிட்டாயா... நான் இதோடு இன்னும் கூடுதல் தகவல்களைச் சேர்த்து வெளியிடுகிறேன்’ என்ற மனப்பான்மையில் பணியாற்றும்போது, ஊடக விதிகளையும் ஒழுங்குமுறை களையும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். மிக மோசமான பயிற்சியாகவே இது மாறிப்போய்விட்டது.

இது போன்ற சம்பவங்களின்போது செய்தி சேகரிக்கும் நிருபரில் ஆரம்பித்து, உதவி ஆசிரியர், ஆசிரியர் என அனைவருக்குமே இதில் பொறுப்பு இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் அல்லது குழந்தை நம் குடும்ப உறுப்பினராக இருந்தால், இந்தச் செய்தியை நாம் எப்படிக் கையாள்வோம் என்ற எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.

ரமேஷ் - பகவான் சிங் - வாசுகி
ரமேஷ் - பகவான் சிங் - வாசுகி

எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் நுகர்வோர் என்பது பொதுமக்கள்தான். தரம் குறைந்த ஒரு பொருளை அதிக விலைக்கு ஒருவர் நம்மிடம் விற்றுவிட்டால் எப்படியெல்லாம் கொதித்தெழுந்து நடவடிக்கைகளை எடுக்கிறோமோ அதேபோல, தரக்குறைவான ஜர்னலிஸத்தை எதிர்த்தும் பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தையே புறக்கணிக்கவும் வேண்டும்’’ என்றார் அழுத்தமாக.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவரும், மகளிர் உரிமைக்கான போராட்டங்களில் தீவிரக் களப்பணியாற்றி வருபவருமான தோழர் உ.வாசுகி, ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை மாற்றம் செய்து எழுதும்போதும் கூட ஒரு சில அறிகுறிகளோடு எழுதும் பழக்கம் இங்கே இருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண் பெயர் கண்ணகி என்றால், ‘கோவலனின் மனைவி’ என்ற க்ளூ கொடுத்து எழுதுகின்றனர். அடையாளத்தை நேரடியாகச் சொல்லவில்லையே தவிர, இதுவும் சட்டப்படி தவறான விஷயம்தான். கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது, தற்போது பத்திரிகைத்துறையினர் கவனத்தோடுதான் செயல்பட்டுவருகிறார்கள். ஆனால், தொலைக்காட்சித்துறையில், இந்த விஷயம் குறித்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் யார் என்ற அடையாளத்தை எவரும் கண்டுபிடித்துவிட முடியாத அளவுக்குச் செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்று போக்சோ சட்டப் பிரிவிலேயே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அண்மையில், ‘மீடூ’ புகார் வந்தபோதுகூட, புகார் சொன்ன பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே செய்திகள் வெளிவந்தன. புகாரில் கூறப்பட்ட ‘குற்றம்சாட்டப் பட்டவர்’ குறித்தல்லவா செய்திகள் வெளிவர வேண்டும்.

பாலியல் தாக்குதல் வழக்குகள்... ஊடகங்களின் கடமை என்ன?

நிர்பயா மரணத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட வர்மா கமிஷனிலும்கூட, ‘குற்றத்தைச் செய்தவர்களின் பெயர்கள் தான் வெளியிடப்பட வேண்டும். தான் செய்த செயலுக்காகக் குற்றவாளிகள்தான் அவமானப்பட வேண்டுமேயொழிய, பாதிக்கப்பட்ட பெண் அவமானப்படத் தேவையில்லை. சமூகமும் அப்படியான உணர்வுடன் அவர்களைப் பார்க்கக் கூடாது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண்ணையே பழிசொல்லக்கூடிய சமூக அமைப்பாகத்தான் நாம் இன்னமும் இருக்கிறோம். எனவே, ஊடக அறம் - சட்டவிதிகளை மீறாமல் செய்தி வெளியிடுவது அவசியமாக இருக்கிறது. இல்லையெனில், ஏற்கெனவே பாதிக்கப் பட்ட அந்தக் குடும்பம் மீண்டும் சமூக ஒதுக்குதல், அவமானப்படுத்துதலால் இரட்டிப்பு வேதனையை அடைய நேரிடுகிறது. எனவே, ஊடகத்தினர் மட்டுமல்லாமல் சமூக ஊடகம் வழியே செய்தி வெளியிடுவோரும்கூட, இதை உணர்ந்து சுய மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்பட வேண்டும்!

இது போன்ற விவகாரங்களில், அரசுதான் எல்லோருக்குமான முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும். ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசுத் தரப்பே வெளிப்படையாக அறிவித்தது எல்லோரையுமே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இது போன்ற தவறுகளை இனிவரும் காலங்களிலாவது அரசுத் தரப்பு திருத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

பாலியல் தாக்குதல் வழக்குகள்... ஊடகங்களின் கடமை என்ன?

செய்திகளை முந்தித் தருவதன் அவசரத்திலும், எக்ஸ்க்ளூசிவ் சுழலிலும் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படங்கள் உள்ளிட்ட அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடுவது அந்தப் பெண்ணுக்கும் அவர் குடும்பத்துக்கும் செய்யும் அநீதி என்றே சொல்லலாம். மற்ற எல்லோரையும்விட நமக்கு - ஆம் - ஊடகங்களுக்குப் பொறுப்பு மிக மிக அதிகம். நாம் இப்படியான செய்திகளை வெளியிடுவதைப் பின்பற்றித்தான் சமூக ஊடகங்களில் அவர்கள் பெயர் முதற்கொண்டு பலவும் பேசுபொருளாகின்றன. இதுவரை எப்படியோ, இனியாவது எந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தையும் வெளிப்படுத்தும்விதமாகப் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட எதையும் வெளியிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஊடக நேர்மை மட்டுமல்ல - கடமையும்கூட.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களும் தண்டனைகளும்!

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228(A)-ன்படி `பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அடையாளத்தையும் வெளிப்படுத்துவது இரண்டாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும். 18 வயதுக்குக் கீழ் உள்ள பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தையோ அல்லது அடையாளம் காணும்படியான செய்தியையோ ஊடகங்களில் வெளியிடுவது போக்சோ சட்டம் பிரிவு 23-ன்படி ஒரு வருடம் வரை தண்டிப்பதற்குரிய குற்றம். சட்டப்படி குழந்தைக்கு எதிரான குற்றத்தில் ‘கற்பழிப்பு’ என்பதற்கு பதில் ‘பாலியல் தாக்குதல்’ என்றே சொல்லப்பட வேண்டும். குற்றம் இழைத்தவரைப் பற்றிச் செய்தி வெளியிட எந்தத் தடையுமில்லை.

இதைத் தவிர, 2018-ல் நிபுன் சக்ஸேனா என்ற வழக்கில், `பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது குழந்தையின் பெயர் அல்லது அடையாளத்தை வெளியிடக் கூடாது’ என்று தடைவிதித்து, இது தொடர்பாக எல்லா வகையான பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்பது வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. அவற்றில் பத்திரிகை தொடர்பான இரண்டு வழிகாட்டுதல்கள்:

1. பாதிக்கப்பட்டவரின் பெயர் அல்லது தொலைதூர முறையில்கூட பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்படுவதற்கு வழிவகுக்கும் மற்றும் அடையாளத்தைப் பொதுமக்களுக்கு பெருமளவில் தெரியப்படுத்தும் எந்த உண்மையையும் எந்தவொரு நபரும் வெளிப்படுத்தவோ அச்சு, மின்னணு, சமூக ஊடகம் முதலானவற்றில் அச்சிடவோ வெளியிடவோ கூடாது.

2. பாதிக்கப்பட்டவர் இறந்துவிடும் அல்லது மனநலம் குன்றியிருக்கும் சந்தர்ப்பங்களில் அவரின் உறவினர் அனுமதி கொடுத்தால்கூட பாதிக்கப்பட்டவரின் பெயர் அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகள் காரணமாக அடையாளத்தை வெளிப்படுத்தலாமா என்பதை உரிய அதிகாரியான அந்த வழக்கின் செஷன்ஸ் நீதிபதிதான் தீர்மானிப்பார்.

இவற்றையும் மீறிச் செய்தியை, சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் பாதிக்கப்பட்ட பெண் அல்லது குழந்தையின் அடையாளத்தையோ அல்லது அடையாளம் காணும்படியான செய்தியையோ ஊடகங்களில் வெளியிடுபவர், பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆகியோருக்கு எதிராக மேற்கண்ட சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம். செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் இந்தச் சட்ட வரம்புக்குள் வருவர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வெளியிடப்படுமாயின், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் புகார் தெரிவித்து அந்தச் செய்தியை நீக்கக் கோரலாம். புகார் அளிக்கப்பட்ட பிறகும் குறிப்பிட்ட செய்தி நீக்கப்படவில்லையெனில், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்சொன்னபடி குற்றத்துக்குப் பொறுப்பாகும்.

உதாரணமாக, தெலங்கானா மாநிலத்தில் 2019, நவம்பர் 27 அன்று ஒரு பெண் மருத்துவர் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் அடையாளமும் ஊடகங்களில் வெளியானது. அப்படி வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகம்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ‘ட்விட்டர் நிறுவனம்’ மன்னிப்பு கோரி அஃபிடவிட் தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- வழக்கறிஞர் என்.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு