Published:Updated:

மேலவளவு கொலைக் குற்றவாளிகளுக்கு நன்னடத்தை விதிகள் எப்படிப் பொருந்தும்?

பட்டியல் சமூகத்தினர்மீது ஆதிக்கச் சாதியினர் எந்த அளவுக்கு அடக்குமுறையைக் கையாண்டிருக்கின்றனர் என்பதற்கு, மேலவளவு கொலை வழக்கு மிகப்பெரிய சாட்சி.

பிரீமியம் ஸ்டோரி

ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிரவைத்த இந்தக் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த 13 பேரும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப் பட்டிருப்பது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

17.02.2019 தேதியிட்ட ஜூ.வி இதழ்...
17.02.2019 தேதியிட்ட ஜூ.வி இதழ்...

1996-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ‘தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது’ என்ற ஆதிக்கச் சாதியினரின் மிரட்டல்களால் மேலவளவு பஞ்சாயத்துத் (தனி) தேர்தல்களம் பரபரப்பாகி இருந்தது. ஆனால், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் முருகேசன் என்பவர் தேர்தலில் போட்டியிட்டு தலைவர் ஆனார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதியினர், 1997, ஜூன் 30-ம் தேதி முருகேசன் உட்பட ஏழு பேரையும் பேருந்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் 40 பேர் கைதுசெய்யப்பட்டனர். நீண்டநாள்களாக நடந்த இந்த வழக்கில், 17 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 17 பேரில் ஒருவர் சிறையிலேயே இறந்துபோனார். 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதும் தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மூவருக்கும் 60 வயதுக்குமேல் இருந்ததால், வயது மூப்பைக் காரணமாகச் சொல்லி விடுதலை செய்தனர். மீதம் உள்ள 13 பேரைத்தான் நவம்பர் 9-ம் தேதி விடுதலை செய்துள்ளது தமிழக அரசு.

மேலவளவு கொலைக் குற்றவாளிகளுக்கு நன்னடத்தை விதிகள் எப்படிப் பொருந்தும்?

இவர்களின் விடுதலை நடவடிக்கைக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார் மேலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான பெரியபுள்ளான். இதுகுறித்து 17.02.2019 தேதியிட்ட, ஜூ.வி இதழில் ‘மேலவளவு கொலையாளிகள் விடுதலையா? பரிந்து பேசும் எம்.எல்.ஏ... வரிந்துகட்டும் அமைப்புகள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கொலை செய்யப்பட்ட முருகேசனின் மனைவி மணிமேகலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, ‘குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது’ என மனு அளித்தார். முதல்வரும் அதை பரிசீலிப்பதாகக் கூறினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு வாக்குகள் குறைந்தன. அதனால், ‘குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளைப் பெறவே, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான 9-ம் தேதி, இந்தக் குற்றவாளிகளை சத்தமில்லாமல் விடுதலை செய்து விட்டார்கள்’ என்று சர்ச்சை வெடித்திருக்கிறது.

இதையடுத்து வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான ரத்தினம், நவம்பர் 11-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ‘கொலை, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை அனுபவித்துவருகிறவர்களுக்கு சிறை நன்னடத்தை விதிகள் பொருந்தாது. இவர்கள் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான அரசாணையைப் பெற முடியவில்லை. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் கோரினார். அதற்கு நீதிபதிகளும் அனுமதி அளிக்க, இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கறிஞர் ரத்தினத்திடம் பேசினோம். “கொலை, பாலியல் கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களுக்கு, சிறையின் நன்னடத்தை விதிகள் பொருந்தாது. அப்படி இருக்கும்போது, தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் தண்டனை பெற்றவர்களுக்கு நன்னடத்தை விதிகள் எப்படிப் பொருந்தும்? ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க உருவாக்கப் பட்ட சட்டத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி னால், அந்த மக்களை எப்படிப் பாதுகாக்க முடியும்? சாதிய பாகுபாடு நிறைந்த தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்களை கொலை செய்தால் பத்து வருடங்களுக்குள் வெளியே வந்துவிடலாம் என்ற மோசமான எண்ணம் இதன்மூலம் ஆதிக்கச் சாதியினருக்கு உருவாகிவிடும்.

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தை, தமிழக அரசு எப்படிப் பார்க்கிறது எனத் தெரியவில்லை. மேலூர் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் 13 பேரின் விடுதலையை வலியுறுத்திப் பேசியவுடனேயே அரசு அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டது. எனவே, அப்போதே இவர்களை விடுவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். ஆனால், நீதிமன்றம் அப்போது அந்த மனுவை நிலுவையில் வைத்துவிட்டது. இப்போது விடுதலை செய்து விட்டார்கள். எதன் அடிப்படையில் விடுதலை செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பாணையை அரசு இன்னும் வெளியிடவில்லை. அந்த ஆணைகளைக் கேட்டு மனு செய்துள்ளேன். உயர் நீதிமன்றத்திலும் இந்த விடுதலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்” என்றார்.

மேலூர் எம்.எல்.ஏ-வான பெரிய புள்ளானிடம் இதுபற்றிக் கேட்டோம். “என் தொகுதி மக்கள் வைக்கும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அப்படித்தான் இதைப் பற்றியும் பேசினேன். விடுதலை செய்தது அரசுதான். சட்டவிதிகளின்படி என்ன செய்ய முடியுமோ அதைத்தான் அரசு செய்துள்ளது. மற்றபடி இதில் என் பங்கு ஏதுமில்லை. நான் அனைத்து தரப்பினருக் கும் பொதுவானவன்” என்றார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதை உயர் நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு