Published:Updated:

`குற்றவாளிகளாக வழக்குகளை வாதாடினோம்!' - மனம் திறக்கும் வழக்கறிஞர் மேனகா குருஸ்வாமி

மேனகா குருஸ்வாமி - அருந்ததி கட்ஜூ
மேனகா குருஸ்வாமி - அருந்ததி கட்ஜூ

சட்டம், பால்புதுமையினர்களுக்கு ஏற்படுத்திய நெருக்கடியால் 2013-க்குப் பிறகு தாங்கள் பாதிப்புக்குள்ளானதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான மேனகா குருஸ்வாமியும், அருந்ததி கட்ஜூவும் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான முனைவர் மேனகா, நியூயார்க்கின் கொலம்பியா சட்டப் பள்ளியின் விரிவுரையாளர்; ஆராய்ச்சி அறிஞர். சர்வதேச மனித உரிமைகள் குறித்த தனது ஆலோசனைகளை ஐ.நா-விற்கு வழங்கியிருக்கிறார். அருந்ததி கட்ஜூவும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். பாலியல் குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இலவசமாக கோர்ட்டில் வாதாடியுள்ளார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-ஐ வகுக்க தேசியக் குழந்தை உரிமைப் பாதுகாப்பு அமர்வோடு பணியாற்றியிருக்கிறார். இவர் ஒரு யோகா ஆசிரியரும்கூட. சர்வதேச ஊடகமான சி.என்.என்., தொலைக்காட்சியின் ஃபரித் சக்காரியா நடத்தும் ஜீ.பி.எஸ். என்னும் நிகழ்ச்சியில் தங்களது அனுபவங்களை அண்மையில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

157 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவை, உச்ச நீதிமன்றம் 2013-ல் முதலில் முறையென அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவல்லது. தங்களுடைய பாலினச் சார்பை (Sexual orientation) குற்றமென அறிவித்த உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடி, அந்தப் பிரிவை எதிர்க்க மிகுந்த உள்ளத்துணிவுடன் வெகுசிலரே வெளியில் வந்தார்கள் என்று பதிவுசெய்யும் இவர்கள், உச்ச நீதிமன்றமே தங்களை இரண்டாம்தரக் குடிமகன்களாகக் கருதியது கடுமையான நாள்கள் என்கிறார்கள்.

மேனகா குருஸ்வாமி அருந்ததி கட்ஜூ
மேனகா குருஸ்வாமி அருந்ததி கட்ஜூ

அதுமட்டுமன்றி, 2013-ல் அப்போதைய வழக்கின் நடவடிக்கைகளின்போது, வழக்கை விசாரித்த முன்னணி நீதிபதி ஒருவர் ஒரு சட்ட அலுவலரைப் பார்த்து, "உங்களுக்கு ஓரினச்சேர்க்கையாளர் எவரையாவது தெரியுமா?" என்று கேட்டதற்கு அவர் பலமாகச் சிரித்து, "நான் அவ்வளவு மாடர்ன் இல்லை, மை லார்ட்" என்று சொன்னதாகவும், அன்றிலிருந்துதான் ‘இனி தன்பால் ஈர்ப்பாளர்கள் எந்த நீதிமன்றத்திலும் அடையாளம் மறைக்கப்படக் கூடாது’ என்று முடிவு செய்ததாகவும் கூறுகிறார்கள். அதே உச்ச நீதிமன்றம்தான் பின்னாளில் ஒருவரின் அடையாளம் என்பது தெய்வத்துக்குச் சமானம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டார்கள் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.

நம் சட்டங்கள் சமகாலத் தேவைகளுக்கும் சூழலுக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர, பல தசாப்தங்களுக்கு முன்னதாக இருந்த சமத்துவ தரநிலைகளுக்கானதாக இருக்கக் கூடாது என்று இவ்வழக்கில் முத்தாய்ப்பாய்ச் சொன்னது நீதிமன்றம். அத்துடன் ‘வரலாறு, LGBTQ+ என்றழைக்கப்படும் பால்புதுமையின சமூகத்திற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் மன்னிப்புக்கோர கடமைப்பட்டிருக்கிறது’ என்றும் சொன்னது.

மேனகா குருஸ்வாமி அருந்ததி கட்ஜூ
மேனகா குருஸ்வாமி அருந்ததி கட்ஜூ

தீர்ப்பு தங்கள் இருவருக்குமான தனிப்பட்ட வெற்றியும்கூட என்று கூறி நெட்டிசன்களை ’ஆவ்வ் ஸோ,,, கியூட்’ என்று லைக்கிட வைத்துள்ளது, இந்த வழக்கறிஞர்கள் இணை. அது ஒருபுறமிருக்க, இரு வழக்கறிஞர்கள் தங்களை இணையர்களாக உலகுக்கு அறிவித்தது, பால்புதுமையினர் சமூகத்திற்கு ஓர் ஊக்கத்தைத் தந்திருக்கிறது. மனதைரியத்துடன், நம்மீது பூட்டப்பட்ட கதவுகளை உடைத்து தமது அடையாளங்களை மக்கள் வெளிக்கொணரும்போது, சக மனிதனுக்கும் அது உதவி செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு