Published:Updated:

நல்லகாமன் சித்ரவதை வழக்கு... 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

நல்லகாமன்
பிரீமியம் ஸ்டோரி
நல்லகாமன்

அப்பா மிலிட்டரியில சுபேதாரா இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா வாடிப்பட்டியில டீச்சரா வேலை பார்த்தாங்க. நாங்க பைரவ் சிங் என்பவர் வீட்டுல ஐயாயிரம் ரூபா லீஸுக்குக் குடியிருந்தோம்.

நல்லகாமன் சித்ரவதை வழக்கு... 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

அப்பா மிலிட்டரியில சுபேதாரா இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா வாடிப்பட்டியில டீச்சரா வேலை பார்த்தாங்க. நாங்க பைரவ் சிங் என்பவர் வீட்டுல ஐயாயிரம் ரூபா லீஸுக்குக் குடியிருந்தோம்.

Published:Updated:
நல்லகாமன்
பிரீமியம் ஸ்டோரி
நல்லகாமன்

‘‘மனுதாரரும் எதிர்மனுதாரரும் இறந்துவிட்டதாலும், காவல்துறைமீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாலும், இழப்பீடு வழங்கவேண்டியதில்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்தேகத்தின் பலனை வழங்கி, உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்திருக்கிறது. அதற்காக அப்பாவிகள்மீது காவல்துறை நடத்தும் வன்முறையை ஆதரிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள்மீது அரசு அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர் இப்போது உயிருடன் இல்லாததால், அவரின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு, 40 ஆண்டுக்காலமாக நடந்துவரும் நல்லகாமன் வழக்கை மீண்டும் பேசவைத்திருக்கிறது.

2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற அத்துமீறல்களை தமிழக காவல்துறை நேற்று, இன்று அரங்கேற்றவில்லை... காலம் காலமாகக் கொடுமைகள் தொடர்கின்றன. அந்த வகையில் பெரிதாக ஊடக வெளிச்சம் இல்லாத 1982-ம் ஆண்டிலேயே தமிழக மக்களை அதிரவைத்தது நல்லகாமன் வழக்கு!

நல்லகாமன் சித்ரவதை வழக்கு... 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வசிக்கும் நல்லகாமனின் குடும்பத்தினரைத் தேடிச் சென்றோம். அவரின் இரண்டாவது மகன் மதிவாணன் நம்மிடம் பேசினார்... ‘‘எத்தனை வருஷமானாலும் அந்த வலியை மறக்க முடியாதுங்க. அன்னைக்கு போலீஸ் என்னை அடிச்சதுல இப்பவரைக்கும் என்னால சரியா நடக்க முடியலை. இன்னைக்கு மாதிரி அன்னைக்கு செல்போன், இன்டர்நெட் வசதியெல்லாம் இருந்திருந்தா, எங்களுக்கு நடந்த கொடுமை இன்னும் பெருசா பேசப்பட்டிருக்கும்... நீதி கிடைக்க இவ்வளவு தாமதமாகியிருக்காது. போலீஸை எதிர்த்து 40 வருடம் கேஸை நடத்தி ஜெயிக்குறது சாதாரண விஷயம் இல்லை’’ என்றவர், துயரமான பழைய நினைவுகளில் மூழ்கியபடி அந்தச் சம்பவங்களை விவரித்தார்...

மதிவாணன்
மதிவாணன்

‘‘அப்பா மிலிட்டரியில சுபேதாரா இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா வாடிப்பட்டியில டீச்சரா வேலை பார்த்தாங்க. நாங்க பைரவ் சிங் என்பவர் வீட்டுல ஐயாயிரம் ரூபா லீஸுக்குக் குடியிருந்தோம். அப்போ ஐயாயிரம் ரூபாய்ங்கறது பெரிய தொகை. ஆனா, லீஸுக்கு டாக்குமென்ட் எழுதித் தராமலேயே வருஷக்கணக்குல பைரவ் சிங் இழுத்தடிச்சாரு. இதை அப்பா விடாம கேட்க, கடைசியில புரோ நோட்டு மாதிரி எழுதித் தந்து, உடனே வீட்டை காலி பண்ணச் சொன்னார். முழுப் பணத்தையும் கொடுத்தாத்தான் வீட்டை காலி செய்யுறதா அப்பா சொல்ல... 1982-ல பைரவ் சிங் போலீஸ்ல புகார் கொடுத்தார். எஸ்.ஐ பிரேம்குமார் தலைமையில வந்த போலீஸ்காரங்க அப்பாவையும் என்னையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூல்ல இருந்த அம்மாவையும் வரவெச்சாங்க. என்ன ஏதுன்னுகூடக் கேட்காம, என்னையும் அப்பாவையும் கண்மூடித்தனமா அடிச்சாங்க. அம்மாவையும் அசிங்கப்படுத்தினாங்க.

நல்லகாமன் சித்ரவதை வழக்கு... 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

அதோட விடலை... இரும்புச்சங்கிலியால அப்பாவோட கை கால்களைக் கட்டி வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஊர்வலமா இழுத்துட்டுப் போனாங்க. சோழவந்தான்ல இருந்து கூடுதல் போலீஸை வரவெச்சு, சங்கிலியால கட்டப்பட்டிருந்த அப்பாவை அடிச்சாங்க. அப்புறம் நாங்க போலீஸைத் தாக்கினதா கேஸ் எழுதி, நிலக்கோட்டை கோர்ட்டுல ஆஜர்படுத்தினாங்க. மதுரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக கோர்ட் உத்தரவிட்டும் அங்கே சேர்க்காம மதுரை ஜெயில்ல அடைச்சாங்க. அம்மாவுக்கு ஆதரவா மற்ற ஆசிரியர்கள் முறையிட்டதால, அவங்களை மட்டும் சொந்த ஜாமீன்ல விட்டாங்க.

எங்க மேல பொய் கேஸ் போட்டு, போலீஸ் தாக்கின விஷயம் தெரிஞ்சு வாடிப்பட்டியில அனைத்துக் கட்சியினரும் கடைகளை அடைச்சு ரெண்டு நாள் போராட்டம் நடத்தினாங்க. அதுக்கு அப்புறம்தான் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, பிரேம்குமார் உட்பட நாலு போலீஸ்காரங்க குற்றவாளிகள்னு ஆர்.டி.ஓ ரிப்போர்ட் கொடுத்தார். அதன் அடிப்படையில, அவங்களை சஸ்பெண்ட் செஞ்சு, அரசுத் தரப்பு அவங்க மேல வழக்கு பதிவுசெஞசுது. அது மட்டுமில்லாம போலீஸ்காரங்க 11 பேர் மேல அப்பா பிரைவேட் வழக்கு போட்டார். ஆனா, சஸ்பெண்ட் ஆகியிருந்த காலத்துலேயே விதிகளை மீறி குரூப் ஒன் தேர்வு எழுதி பாஸாகியிருந்தார் பிரேம்குமார். அரசாங்கமும் இதைக் கண்டுக்கலை.

பிரேம்குமார்
பிரேம்குமார்

இந்த எல்லா வழக்குகளையும் மதுரை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரிக்கணும்னு 1989-ல உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், 2002 வரை பிரேம்குமார் வழக்குல ஆஜர் ஆகல. ‘தலைமறைவு குற்றவாளி’னு பிரேம்குமாரை கோர்ட் அறிவிச்சப்ப, அவர் எஸ்.பி-யாகியிருந்தார். அதுக்குப் பிறகு அவர் ஒரு பிரபல வழக்குல அ.தி.மு.க அரசோட செல்வாக்கோட இருந்ததால வழக்கு இழுத்துக்கிட்டே போச்சு. இந்த நிலையிலதான் 25 வருஷம் கழிச்சு 2007-ல பிரேம்குமார் உட்பட நான்கு போலீஸ்காரர்களை பணிநீக்கம் செஞ்சு, ஒரு மாதச் சிறை தண்டனைனு தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து பிரேம்குமார் உச்ச நீதிமன்றத்துல அப்பீல் செஞ்சாரு. கடந்த 2010-ல அவர்மீதான வழக்கு ரத்துசெய்யப்பட்டது. தொடர்ந்து அவர் இறந்தும் போனார். ஆனாலும் அப்பா நியாயம் கிடைக்காம ஓய மாட்டேன்னு மீண்டும் இழப்பீடு கேட்டு 2012-ல தாக்கல் செஞ்ச வழக்குலதான் இப்போ தீர்ப்பு வந்திருக்குது. அப்பா 2016-ல மரணமடைஞ்ச பிறகு, தம்பி சுந்தரபாண்டியன்தான் இந்த வழக்கை நடத்தினார். அப்பாவோட சட்டப் போராட்டம் எங்களுக்கு பெருமையா இருக்கு” என்றார்.

சுந்தரபாண்டியன்
சுந்தரபாண்டியன்

போலீஸாரின் அத்துமீறல்களைப் பல பாகங்கள்கொண்ட புத்தகங்களாகத் தொகுத்து, போலீஸ் பயிற்சிப் பள்ளியில் வைத்தாலாவது இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?