நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம், நீதித்துறையில் நடைபெற்றுள்ள ஊழல் குற்றங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் என எதிர்க்கட்சிகளின் பல கேள்விகளுக்கு மக்களவையில் எழுத்துபூர்வ விளக்கத்தை அளித்துள்ளார் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ.
அப்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 39 பெண் நீதிபதிகளில் 27 பேரை உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமித்துள்ளதாகவும், கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு நீதிபதிகளாக நியமிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் 12 பேரும் நியமனத்திற்கான பரிசீலனையில் இருப்பதாகவும் எழுத்துபூர்வ விளக்கத்தில் அமைச்சர் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும், 34 என்ற எண்ணிக்கையில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ பதிலளித்தபோது, 'நீதிபதிகளின் நியமனம் தொடர்பான தற்போதைய நடைமுறையின்படி, பட்டியலின, பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் முதன்மையாக உள்ளனர். உயர் நீதிமன்ற கொலீஜியம் அல்லது உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்யாத எவரையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக அரசு நியமிக்க முடியாது.
இருப்பினும், உயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பன்முகத்தன்மையை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளை அனுப்பும்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த தகுதியானவர்களை உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. பட்டியலின, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மூலம் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை. இந்த நிலையை மாற்ற எதேனும் திட்டம் உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-ல் இருந்து 33-ஆக உயர்த்திய பிறகு, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முன்மொழிவும் வரவில்லை' என அமைச்சர் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, 'தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி 95.24 என்ற மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 46 கோடி பேர் பெண்கள்' என பதிலளித்துள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 1098 நீதிபதிகள் பதவி வகித்து வருகின்றனர். அவர்களில், 83 பேர் மட்டுமே பெண்கள் என்பதும், சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகள் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.