``தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது’’ - டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு தன்பாலினச் சேர்க்கை குற்றம் எனக் கூறும் சட்டப்பிரிவு 377-ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பையடுத்து, தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் மேக்னா மிஸ்ரா மற்றும் தாஹிரா ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசைக் கருத்து தெரிவிக்க உத்தரவிட்டது.

இன்று மத்திய அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ` `தன்பாலின உறவு சட்டவிரோதம்’ என்னும் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டிருந்தாலும், அதைக்கொண்டு தன்பாலின திருமணத்துக்கான அடிப்படை உரிமையைக் கோர முடியாது. திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதையும், தன் பாலினத்தவரோடு பாலியல் உறவுகொள்வதையும், கணவன், மனைவி, குழந்தை என்ற இந்தியக் குடும்ப அமைப்போடு ஒப்பிட முடியாது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ``பல மதங்களைச் சேர்ந்த மக்களின் கலாசாரம், நம்பிக்கைகளை கருத்தில்கொண்டே, திருமணச் சட்டங்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுகின்றன. தன்பாலினத்தவர் ஒன்றாக வாழ்வதும், திருமணம் செய்துகொள்வதும் இந்தியத் திருமண கலாசாரத்தின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" என்று அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தனது வாதத்தை வைத்தது மத்திய அரசு.