Published:Updated:

கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு: 6 வாரங்களுக்குப் பிறகு நல்ல செய்தி தருமா மத்திய அரசு?

இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையிலும், நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நிவாரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்குமாறும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்
``கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது!” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?

முதற்கட்ட விசாரணையின்போது, ``இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மாதிரியான கொள்கை ஏதும் வகுக்கப்பட்டுள்ளதா?” என்று மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டிலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ``முறையான ஆவணம் அல்லது இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான ஒரே மாதிரியான கொள்கை இல்லையெனில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எந்த இழப்பீட்டையும் பெற முடியாமல் போய்விடும். எனவே, கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சீரான கொள்கை குறித்தும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி நிவாரணம் வழங்குவது குறித்தும் மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 183 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது மத்திய அரசு. அதில், ``தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம்-2005 ஐப் பொறுத்தவரையில் வெள்ளம்,புயல் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நிவாரண நிதி வழங்கலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவது என்பது இயலாத விஷயம். கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றால் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் உள்ள நிதியைவிடக் கூடுதலான நிதி தேவைப்படும்.

அரசின் வரி வருவாய் குறைந்து, மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், கொரோனாவால் மரணமடைந்த எல்லோருக்கும் நிவாரணம் வழங்கினால் மற்ற நடவடிக்கைகளுக்கு நிதி இல்லாத சூழல் உருவாகும். ஆகையால் இந்தக் கோரிக்கை மாநில அரசுகளின் நிதிநிலைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க இயலாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்
இப்படித்தான் மறைக்கப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சி நிலவரம்; அரசின் பதில் என்ன?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ``கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்குத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து மத்திய அரசும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து ஆறு வாரக் காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையிலும், நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ரூ.4 லட்சம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட தொகை நிவாரணமாகக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான செய்தி வருமா அல்லது மீண்டும் இதே நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசு தெரிவிக்குமா என்பதுதான் மக்கள் மத்தியில் அலையடிக்கும் கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு