Published:Updated:

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா?

Sexual-harassment
பிரீமியம் ஸ்டோரி
Sexual-harassment

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா?

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

Published:Updated:
Sexual-harassment
பிரீமியம் ஸ்டோரி
Sexual-harassment

சென்னை கிறிஸ்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் இருவர், கல்லூரி மாணவிகள் கொடுத்த பாலியல் தொந்தரவுப் புகாரில் சிக்கி, விசாகா கமிட்டி விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன். அதேசமயத்தில் அந்தத் தீர்ப்பில் வழக்குக்கு எந்த வகையிலும் ஒவ்வாத கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

`சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இருபாலருக்கும் கல்வி கற்பிப்பதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. பாலியல் சீண்டல் புகார்கள் அதிகம் வருவதாகப் பெற்றோர்களிடம் கருத்து நிலவுகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல... எந்தவித ஆதாரமும் இல்லாத, பொத்தாம்பொதுவான கூற்று. இப்படியெல்லாம் கூறுவதற்கு நீதிபதிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லாததுடன், சட்டவரையறைக்குப் புறம்பான செயலுமாகும்.

182 வருடங்களாகச் செயல்பட்டுவரும் சிறப்பான ஒரு கல்லூரியைப் பற்றியும் அதை நடத்திவரும் மத சிறுபான்மையினரைப் பற்றியும் கூறுவதற்கு நீதிபதிக்கு எப்படி மனம் வந்தது? இந்தியாவில் தலைசிறந்த அறிவுஜீவிகளையும், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், நீதிபதிகளையும் வெளிக்கொண்டுவந்த கல்வி நிறுவனம் அது. எல்லா கல்லூரிகளும் சென்னை நகரத்துக் குள் தொடங்கப்பட்டபோது, அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் அந்தக் கல்லூரி துணிச்சலாகத் தொடங்கப்பட்டது. தவிர, முதன்முறையாக இருபாலர் கல்வி நிறுவனமாக அது தொடங்கப்பட்டதுதான் அதன் சிறப்பே. தமிழகத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு 275 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தக் கல்லூரியில், 8,500 மாணவர்கள் படிக்கிறார்கள்; 300 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், மேற்குவங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சாந்தா ஷீலா நாயர், கிறிஸ்துதாஸ் காந்தி, இந்திய காவல் துறைப் பணியைச் சேர்ந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் முதல் விஜயகுமார் ஐ.பி.எஸ் வரை படித்த கல்லூரி அது. மேலும், பரிதிமாற்கலை ஞரில் தொடங்கி இன்றைய தமிழ் எழுத்தாளர் அம்பை (சி.எஸ்.லஷ்மி) வரை பயின்ற நிறுவனம் அது. இதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே.ராஜன், கே.சந்துரு, பி.டி.தினகரன், சுதந்திரம், எம்.ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரபாபு, பார்த்திபன், சி.வி.கார்த்திகேயன் முதலானவர்களை அந்தக் கல்லூரி வளர்த்து வழங்கியுள்ளது. இவையெல்லாம் நீதிபதி வைத்தியநாதனுக்குத் தெரியுமா?

1970-களில் நான் சென்னை கல்லூரி ஒன்றிலிருந்து இரண்டாவது வருடப் பட்டப்படிப்பில் வெளியேற்றப்பட்டபோது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரிதான் எனக்கு புகலிடம் வழங்கி, பட்டதாரி ஆக்கியது. அப்போது கல்லூரி மாணவிகள் விடுதி, கல்லூரி வளாகத்தில் இல்லாமல் கிண்டி ரயில் நிலையத்துக்கு அருகில் (தற்போது தென்சென்னை கோட்டாட்சியர் அலுவலகம் உள்ள இடத்தில்) இயங்கி வந்தது. இது, பெற்றோர்களை திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. ஏனென்றால், 275 ஏக்கர் பரப்பளவு உள்ள வளாகத்தில் அவர்களுக்குத் தனி விடுதி அமைப்பது ஒன்றும் சிரமமானதல்ல. அந்தச் சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் மாணவிகளின் நலனைக் கருதி அவர்களுக்கும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே விடுதி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, இன்றைக்கு மாணவிகள் விடுதியும் தாம்பரம் வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா?

உலகத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள், ‘இருபாலர் பயிற்சிப் பள்ளிகள்தான் சிறப்பான கல்வியைக் கற்பிக்க முடியும்’ என்று கூறியுள்ளனர். ஏனென்றால், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்துகொள்வதற்கு, அப்படிப்பட்ட நிறுவனங்கள்தான் உதவி செய்ய முடியும். நான் அந்தக் கல்லூரியில் படிக்கும்போது எங்களுடைய அரசியல் நடவடிக்கைக்கு எந்தவிதமான தடையும் இருந்ததில்லை. அந்தக் காலத்தில் மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக எந்தப் புகாரும் வந்ததில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல ஓர் உறவு இருந்த கல்லூரி ஒன்று உண்டென்றால், அது தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியாக மட்டுமே இருக்கும்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, கிறிஸ்துவ நிறுவனங்கள் தரமான பல கல்வியை சேவை மனப்பான்மையுடன் அளித்து வருகின்றன. இந்த வரலாற்றைச் சீர்குலைக்கும்விதமாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது தவறு.

தமிழ்நாட்டைத் தவிர்த்து இதர மாநில மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் விருப்பத்துடன் படித்த இடம் அது. பன்முகத்தன்மையுடன் விளங்கிய அந்தக் கல்லூரியில் சமய பூசல்களோ, சாதிச் சண்டைகளோ வந்ததில்லை. நான் படித்த சமயத்தில், கல்லூரிக்கு வெளியே நடைபெற்ற பல சமூகப் பிரச்னைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் கல்லூரியில் பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து உரையாற்று வதற்கான இடமாகவும் இருந்தது. ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட், பி.சுந்தரய்யா போன்ற இடதுசாரித் தலைவர்களும் கல்லூரியில் உரையாற்றியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்துக்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருந்தபோது, கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர்களாகப் பலர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டனர். அங்கு படித்த தோழர் பிரகாஷ் காரத் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, வரலாறு.

இப்படிப்பட்ட பாரம்பர்யம் மிகுந்த ஒரு கல்லூரியில், கடந்த 182 ஆண்டுகளில் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். அதில் நல்லதும் இருக்கலாம்... கெட்டதும் இருக்கலாம். அதற்காக நிறுவனத்தையும், அதை நடத்திவரும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் பொத்தாம் பொதுவாகத் தூற்றுவது எப்படி நியாயமாகும்? அவர் முன்னால் வந்த வழக்கில், மாணவிகளின் புகார் விசாரிக்கப்பட்டு அதன்படி கல்லூரி நிர்வாகம் அந்தப் பேராசிரியரை பணியிலிருந்து நீக்கியது சட்டப்படிச் செல்லும் என்று கூறிய நீதியரசர், அத்துடன் கோப்பை முடிக்காமல் தன்னுடைய சொந்தக் கருத்தை உலக உண்மை யாகப் பதிந்துள்ளது தவறான செயலாகும்.

மீரட் வளர்ச்சிக் குழும வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘நீதிபதிகள் தங்கள் முன்னால் வரக்கூடிய வழக்குகளில் கூறப்பட்ட பொருண்மைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு கூற வேண்டுமே தவிர, தங்களுடைய சொந்தக் கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது’ என்று கூறிய பிறகும், இப்படி பலர் செயல்பட்டுவருவது வருந்தத்தக்கது. சிறுபான்மையினர் மட்டுமின்றி, இதர சமயத்தைச் சேர்ந்தவர்களும் இருபாலர் பயிற்சிப் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள 672 பொறியியல் கல்லூரிகள், இருபாலரும் சேர்ந்து பயிலும் கல்லூரிகளாகத்தான் நடைபெற்றுவருகின்றன.

கல்லூரி மட்டுமின்றி மேனிலைப் பள்ளிகளிலும் இருபாலர் பயிலக்கூடிய பல பள்ளிகள் தமிழகத்தில் உண்டு. என்றைக்கு இருபாலருக்கும் பொதுவான நிறுவனம் செயல்படுகிறதோ அந்த நிறுவனத்தில் பாலியல் பிரச்னைகள் உருவாவது உண்டு. அப்படிப்பட்ட உளவியல் பிரச்னை களைத் தீர்ப்பதற்காகத்தான் பள்ளியிலிருந்தே பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள் கல்வி அறிஞர்கள். நிலைமை அப்படி இருக்கும்போது, பெற்றோர்களிடமிருந்து புகார் வருவதாகத் தனது தீர்ப்பில் நீதியரசர் பதிவிட்டு, அப்படிப் பட்ட பாலியல் புகார்கள் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அதிகமாக நடைபெறுவதாகக் கூறுவதற்கு, அவர் எந்தவித ஆதாரத்தையும் சுட்டிக்காட்ட வில்லை.

இந்தியா போன்ற மதசார்பற்ற ஒரு குடியரசுக்காக உருவாக்கப் பட்ட அரசமைப்புச் சட்டத்தில், மொழி மற்றும் சமயம் சார்ந்த சிறுபான்மையினர் தங்கள் விருப்பத்துக்கேற்ப கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அடிப்படை உரிமையாக 30-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நூற்றாண்டு களாக, கிறிஸ்துவ நிறுவனங்கள் தரமான பல கல்வியை சேவை மனப்பான்மையுடன் அளித்து வருகின்றன. இந்த வரலாற்றைச் சீர்குலைக்கும்விதமாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது தவறு. எனவே, நீதியரசர் வைத்தியநாதன் அவர்களை, டென்னிசன் என்கிற பேராசிரியர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த அதே நேரத்தில், தனது தீர்ப்புக்கு ஒவ்வாத கருத்தைப் பதிவு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பிலிருந்து அதை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்காக அவர் யாரிடமிருந்தும் மனுவை எதிர்பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், கனம் நீதிபதி அவர்கள் பல வழக்குகளில் தானே முன்வந்து வழக்கைப் பதிவுசெய்து தீர்ப்பளித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. நீதியரசர் செய்வாரா?