Published:Updated:

“இறைவன் அனுப்பிய திருடன்!”

கன்னியாஸ்திரீ அபயா
பிரீமியம் ஸ்டோரி
கன்னியாஸ்திரீ அபயா

கன்னியாஸ்திரீ அபயாவுக்கு நீதி கிடைக்கப் போராடிய அடைக்கா ராஜூ

“இறைவன் அனுப்பிய திருடன்!”

கன்னியாஸ்திரீ அபயாவுக்கு நீதி கிடைக்கப் போராடிய அடைக்கா ராஜூ

Published:Updated:
கன்னியாஸ்திரீ அபயா
பிரீமியம் ஸ்டோரி
கன்னியாஸ்திரீ அபயா
‘‘என் கையையும் காலையும் கட்டி, பெஞ்சுல படுக்க வெச்சு உள்ளங்கால்லயே அடிச்சாங்க. கையில இரும்பு வட்டைவெச்சு, அதுக்கு மேல ஸ்டூலைவெச்சு அமுக்கினாங்க. அப்போ என் உள்ளங்கையில ஓட்டை விழுந்து ரத்தம் வந்துச்சு. ரத்தக்களறியாக்கியும் என்னை விடலை, கூடவே நிறைய கேஸ்களும் போட்டாங்க. ரொம்ப நாள் ஜெயில்ல போட்டு சித்ரவதை செஞ்சாங்க’’ - போலீஸ் கஸ்டடியில், தான் அனுபவித்த சித்ரவதைகளை அடைக்கா ராஜூ விவரிக்கும்போதே நமக்கு நடுக்கமெடுக்கிறது. திருடனாக இருந்த அடைக்கா ராஜூ இத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டது, கன்னியாஸ்திரீ அபயாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அபயாவைக் கொன்றவர்களுக்கு 28 வருடப் போராட்டத்துக்குப் பிறகு தண்டனை கிடைத்திருக்கும் நிலையில், ‘இறைவன் அனுப்பிய திருடன்’ என்று அடைக்கா ராஜூவைக் கேரளமே கொண்டாடுகிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த ஐக்கரகுந்நு தாமஸ் - லீலா அம்மா ஆகியோரின் இளைய மகளான 19 வயது அபயா, கன்னியாஸ்திரீ ஆகும் ஆசையில் 1990-ம் ஆண்டு கோட்டயம் கத்தோலிக்க சபையின் கட்டுப்பாட்டிலுள்ள பயஸ் டென்த் கான்வென்ட்டில் சேர்ந்தார். அங்கிருந்தபடியே கல்லூரி சென்றுவந்தவர், 1992, மார்ச் 27 காலையில் கான்வென்ட் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். முந்தைய நாள் இரவு, சிரித்துப் பேசிவிட்டுத் தூங்கச் சென்ற அபயா, திடீரென மரணமடைந்தது எப்படியென்று புரியாமல் சக கன்னியாஸ்திரீகள் கலங்கி நின்றனர்.

அடைக்கா ராஜூ
அடைக்கா ராஜூ

அபயாவின் ஒரு செருப்பு சமையலறையிலிருந்த ஃபிரிட்ஜ் அருகே கிடக்க, மற்றொன்று கிணற்றுக்கு அருகே கிடந்திருக்கிறது. ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் கீழே கிடக்க, ஃபிரிட்ஜ் பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. அபயா தலையில் அணிந்திருந்த சமய வஸ்திரம், கதவில் தொங்கியபடி கிடக்க... கழுத்தில் நகக்கீறல்கள், தலையில் காயம் என அபயாவின் மரணம் கொலை என்பதைத் தெளிவாக உணர்த்தியது. ஆனாலும், கான்வென்ட் பொறுப்பாளரான கன்னியாஸ்திரீ செஃபி, ‘இது தற்கொலை’ என்று கூறினார். விசாரணைக்கு வந்த போலீஸாரும் தற்கொலை என்றே கூறினர். உள்ளூர் போலீஸ், க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரித்தும் தீர்வு கிடைக்காததால், பலத்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 1993, மார்ச் 23 அன்று வழக்கு சி.பி.ஐ கைகளுக்குப் போனது.

ஒருவழியாக, சிஸ்டர் அபயாவைக் கொலை செய்தது பயஸ் டென்த் கான்வென்ட் நிர்வாகியான கன்னியாஸ்திரீ செஃபி மற்றும் கத்தோலிக்க பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் என்பது தெரியவந்தது. தாமஸ் எம்.கோட்டூருக்கும் செஃபிக்கும் பாலியல்ரீதியான தொடர்பு இருந்திருக்கிறது. அதிகாலை நேரத்தில் படிப்பதற்காக எழுந்த சிஸ்டர் அபயா, தண்ணீர் குடிக்க கிச்சனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தாமஸ் எம்.கோட்டூரும் செஃபியும் ஒன்றாக இருந்ததைப் பார்த்திருக்கிறார். அபயா இதை வெளியே சொல்லிவிடுவார் என்று பயந்த பாதிரியாரும் கன்னியாஸ்திரீயும் அவரைக் கோடரிக் கைப்பிடியால் தலையில் அடித்திருக்கிறார்கள். மயங்கிய நிலையிலிருந்த அபயாவைக் கிணற்றில் வீசிக் கொன்றிருக்கிறார்கள்.

அபயா
அபயா

அபயா வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், டிசம்பர் 23-ம் தேதி, பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஆறரை லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. கன்னியாஸ்திரீ செஃபிக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தரை லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. கன்னியாஸ்திரீகள் மட்டும் இருக்கும் கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக, பாதிரியார் தாமஸ்

எம்.கோட்டூருக்கு ஒரு ஆயுள் தண்டனை கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. அபயாவைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் முக்கியச் சாட்சியாக விளங்கியவர், சம்பவத்தன்று அங்கு திருட வந்த அடைக்கா ராஜூ. இவரின் வாக்குமூலம்தான் வழக்குக்கு முக்கிய வலுசேர்த்தது.

‘‘வழக்கமா அதிகாலை 3:30 மணியிலருந்து 4:30-க்குள்ளதான் திருடுறதுக்காகப் போவேன். அதுதான் மக்கள் அயர்ந்து தூங்குற நேரம். அந்த கான்வென்ட்ல ஏற்கெனவே ரெண்டு வாட்டி திருடியிருக்கேன். மூணாவது முறையா அங்கே திருடப் போனேன். திருடுறதுக்கு முன்னாடி, அங்கே இருக்கும் பெரிய கொக்கோ மரத்துல ஏறி நின்னு நோட்டம் விட்டேன். கான்வென்ட் அடுக்களைப் பக்கத்துல ஒரு கன்னியாஸ்திரீயையும், வெள்ளை குப்பாயம் போட்டிருந்த அந்தப் பாதிரியாரையும் பார்த்தேன். மரத்துலருந்து உடனே இறங்கிப் போயிட்டேன்’’ - இதுதான் கோர்ட்டில் திருடன் அடைக்கா ராஜூ கொடுத்த வாக்குமூலம். இதற்காக அவர் பட்ட துன்பம் சொல்லி மாளாது.

தாம்ஸ் எம்.கோட்டூர் - செஃபி
தாம்ஸ் எம்.கோட்டூர் - செஃபி

இது குறித்து அடைக்கா ராஜூ நம்மிடம் விரிவாகப் பேசினார். ‘‘நான் உள்ளூர் திருடன்கிறதால ரெண்டு வாரத்துக்குப் பிறகு, என்னைப் பிடிச்சு விசாரிச்சாங்க. அதுமட்டுமில்லாம, ‘அந்தக் கொலையை நீதான் செய்தேன்னு ஒத்துக்க. ரெண்டு லட்சம் ரூபாய், உன் மனைவிக்கு வேலை, பிள்ளைங்க படிப்பு, தங்குறதுக்கான வீடு எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுக்குறோம்’னு சொன்னாங்க. ஆனா, நான் முடியாதுனு சொல்லிட்டேன். அதுக்கு அவங்க செஞ்ச கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல... அபயாவுக்கு நீதி கிடைக்கணும்கிறதுக்காக எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். சி.பி.ஐ விசாரணைக்கு வந்த பிறகுதான், கான்வென்ட்டுல பார்த்ததை விவரமா சொன்னேன். என்னை மூணாவது சாட்சியாக்கினாங்க. அபயா கேஸுல சாட்சியானதுலருந்து ஒரு குண்டூசிகூட நான் திருடுறது இல்லை. மரம் வெட்டுற வேலைக்குப் போயிட்டிருக்கேன். என் மகளுக்கு நீதி கிடைச்சதால ரொம்ப சந்தோஷமா இருக்கேன்’’ என்று சிரிக்கிறார் அடைக்கா ராஜூ.

தீய செயல்களில் ஈடுபடுபவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதுதான் கன்னியாஸ்திரீகளின் அடிப்படைப் பணி என்பார்கள். தனது மரணத்துக்குப் பிறகும் கன்னியாஸ்திரீ அபயா, தனக்காக நீதி கேட்கவைத்து, ஒரு திருடனை நல்லவனாக மாற்றியிருக்கிறார்!