Published:Updated:

நீதிபதிகள் பற்றாக்குறை... திணறும் கீழமை நீதிமன்றங்கள்... என்ன செய்ய வேண்டும் அரசு?

நீதிமன்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றங்கள்

இந்தியா முழுவதும் நான்கரைக் கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் ஏழு லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளன.

நீதிபதிகள் பற்றாக்குறை... திணறும் கீழமை நீதிமன்றங்கள்... என்ன செய்ய வேண்டும் அரசு?

இந்தியா முழுவதும் நான்கரைக் கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் ஏழு லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளன.

Published:Updated:
நீதிமன்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றங்கள்

சாமானியர்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்! தங்களுக்கு நடந்த அநீதிகளுக்குக் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பலரும் நீதிமன்றங்களை நாடுகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கு ஆகும் காலம்தான் இங்கு பலரையும் சோர்வடையச் செய்கிறது. தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் 250-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழல், பல நீதிமன்றச் செயல்பாடுகளைத் தாமதப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நீதிபதிகள் பற்றாக்குறை...

தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில், மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள், சிவில் நீதிபதிகள் உட்பட மொத்தம் 1,328 பணியிடங்கள் உள்ளன. இன்றைய தேதியில் இவற்றில் 249 இடங்கள் காலியாக இருக்கின்றன. அயல் பணியில் சென்றவர்கள், பணியிடைநீக்கம், காத்திருப்புப் பட்டியலையும் சேர்த்தால் சுமார் 280 பணியிடங்கள் காலியாக இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 14 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பவை. இப்படி, நிலுவை வழக்குகள் அதிகரிக்க நீதிபதிகள் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

நீதிபதிகள் பற்றாக்குறை... திணறும் கீழமை நீதிமன்றங்கள்... என்ன செய்ய வேண்டும் அரசு?

இது குறித்து கீழமை நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். ``பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் கிடையாது. பக்கத்து கோர்ட் நீதிபதிகள், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டும் அங்கே செல்வார்கள். அப்படிச் செல்லும் நீதிபதிகளும், சிறிய வழக்குகள் மற்றும் பெயில் தருவது போன்ற நடைமுறைகளை மட்டுமே மேற்கொள்வார்கள். பெரும்பாலான வழக்குகளுக்கு வாய்தா மட்டும்தான் போடப்படுகிறது. ஒரு நீதிபதி வேறொரு நீதிமன்றத்துக்குச் செல்வதால், அவர் பணியாற்றும் கோர்ட்டிலும் வழக்குகள் தேங்குகின்றன. இப்படி ஏற்படும் தாமதத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்” என்றார்.

இது குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துருவிடம் பேசினோம். ``இந்தியா முழுவதும் நான்கரைக் கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் ஏழு லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளன. சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிப் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தேக்கநிலை ஏற்படுவதாகக் கூறியிருக்கிறார். அது உண்மையின் ஒரு பகுதிதான். கீழமை நீதிமன்றங்களிலுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு. உரிமையியல் நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு என்றாலும், அவர்களின் கடமையை நிறைவேற்ற உரிய முறையில் கண்காணிக்கும் பொறுப்பு உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்ததே. அதேபோல் மாவட்ட நீதிபதிகளை நேரடியாக நியமனம் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடம் மட்டுமே இருக்கிறது. கீழமை நீதிமன்றங்களிலுள்ள பணியிடங்களைக் கணக்கிட்டு, அதற்கான செலவினங்கள் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட பிறகு பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்விதச் சட்டத் தடையுமில்லை.

புதிதாக உரிமையியல் இளநிலை நடுவர்கள் பதவிக்கான தேர்வுக்கு, நேற்று சட்டம் முடித்த மாணவர்களைக் கூட அனுமதிக்கலாம் என்று இருக்கிறது. இப்படி வக்கீல் தொழில் அனுபவம் இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தும்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்களைப் பணியில் அமர்த்துவதற்கு முன்னால் தகுதிகாண் பருவத்தில் கொடுக்கவேண்டிய பயிற்சி முறைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும் அதற்கான போதுமான முதிர்ச்சி, அனுபவம் இல்லாததால் வழக்குகளை விசாரித்து முடிப்பது தாமதப்படுகிறது. ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று கூறுவது உண்மைதான். உரிய காலத்தில் நீதி கிடைக்கவில்லையென்றால், மக்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் தங்களது வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள முற்படுகிறார்கள். மேலும் நீதித்துறையிலுள்ள லஞ்ச லாவண்யங்கள், மக்களை நீதிமன்றங்கள்பால் ஈர்ப்பதற்கு பதிலாக அவற்றின்மீது வெறுப்பு ஏற்படச் செய்யும் சூழலும் இருக்கிறது.

நீதிபதிகள் பற்றாக்குறை... திணறும் கீழமை நீதிமன்றங்கள்... என்ன செய்ய வேண்டும் அரசு?

இதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், தொடர்ந்து நீதிபதிகள் பணிகளுக்கான தேர்வு நடைபெற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து அவ்வப்போது காலியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம். அனுபவம் பெற்ற வக்கீல்களை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்க, விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்கு முன்வர வேண்டும். பயிற்சிக் காலம் முற்றுப் பெறுவதற்கு முன்பே காலச் சூழ்நிலைகளைக் கருதி, தலைமை நீதிபதியின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களது பயிற்சி காலவரையறையைக் குறைப்பது சரியல்ல. உயர் நீதிமன்ற நீதிபதிகளும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மரியாதையுடனும், சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் நடத்த முன்வர வேண்டும். சமீபத்தில் ஒரு மாவட்ட நீதிபதி, தன்னுடைய மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் உரையில், அவரது பெயரை எழுதியதற்காகக் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப் பட்டிருக்கிறது. மற்றொரு நீதிபதி தனிப்பட்ட காரணங்களுக்காக மாவட்டத்துக்குச் சென்றபோது அவருக்கு உரிய உணவகத்திலிருந்து சாப்பாடு பெற்றுத் தராததால் அலுவலக ஊழியர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி புரோட்டோகால் வேலைகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் அவர்களது நீதிமன்ற வேலைகளைச் செய்ய அனுமதித்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்” என்று விரிவாக எடுத்துரைத்தார்.

நல்லாட்சிக்கான அளவுகோல்களில் ஒன்று, விரைவான நீதி என்பதை உணருமா அரசு?!