Published:Updated:

பதியப்பட்ட வழக்குகள் 12,239... தண்டனை தரப்பட்டவை 1, 194 மட்டுமே...

‘ஆமை வேக’ போக்சோ வழக்குகள்... ஆர்.டி.ஐ சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!

பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தீர்க்கப்படாத ஒரு பிரச்னையாக வலுத்துக்கொண்டிருக்கின்றன. பாலியல் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள், சட்டத்தின் பிடியிலிருந்து மிக எளிதாகத் தப்பித்துவிடும் நிலை இருக்கிறது. வழக்கு விசாரணையின்போதே பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் மறைமுகமான அழுத்தங்களும் குற்றவாளிகள் தரப்பிலிருந்து கொடுக்கப்படுகின்றன. எனவே, இப்படியான சம்பவங்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தனியாக வரையறுக்கப்பட்ட சட்டம்தான் ‘போக்சோ.’ ஆனால், போக்சோ சட்டத்தில் பதிவுசெய்யப்படும் வழக்குகளும் விரைவாக விசாரிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதுதான் வேதனையின் உச்சம். இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன!

2015 ஜனவரி முதல் 2020 டிசம்பர் மாதம் வரையிலான ஆறு ஆண்டுக்காலத்தில் மட்டும் 12,239 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் மாவட்டவாரியாகப் புள்ளிவிவரங்களைத் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த ஆறு ஆண்டுகளில் மொத்தமாகவே 1,194 போக்சோ வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட இந்தப் பட்டியலில், காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் தரவுகள், நீதி கிடைக்கப்பெற்ற வழக்குகள், விடுதலை செய்யப்பட்டவர்களின் விவரம், விசாரணையிலிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்களும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

திலகவதி
திலகவதி

கடந்த 2015-ல் 1,544 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அந்த ஆண்டில் 104 வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 155 வழக்குகளில் பிறழ் சாட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தாலேயே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். முந்தைய ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளையும் சேர்த்து, அந்த ஆண்டின் இறுதியில் நிலுவையிலிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 1,516.

2016-ல் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் 1,583. தண்டனை கிடைக்கப்பெற்ற வழக்குகள் 199, விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் 535. அந்த ஆண்டின் இறுதியில் நிலுவையிலிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 2,711.

2017-ல் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் 1,587. அந்த ஆண்டில் தண்டிக்கப்பட்ட வழக்குகள் 154, விடுவிக்கப்பட்ட வழக்குகள் 630. அந்த ஆண்டு இறுதியில், நிலுவையிலிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 3,547.

2018-ல் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது. அந்த ஆண்டில் மட்டும் 2,039 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக் கின்றன. ஆனால், 275 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. 911 வழக்குகளில் குற்றவாளிகள் விடுக்கப்பட்டிருக் கிறார்கள். முந்தைய ஆண்டுகளின் விசாரணை வழக்குகளும் தேக்கமடைய, 2018 முடியும்போது 4,531 வழக்குகள் கோப்புகளுக்குள்ளேயே உறங்கின. அதேபோல, 2019-ல் 2,396 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 286 வழக்குகளில் தண்டனை கிடைக்க, 838 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டு இறுதியில் 5,599 என நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்தது.

உச்சபட்சமாக, கொரோனா காலகட்டமான 2020-ல்தான் அதிக போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. பதியப்பட்ட மொத்த வழக்குகள் 3,090. ஆனால், 176 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 541 வழக்குகளில் சிக்கியவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு இறுதியில் தேங்கிய மொத்த வழக்குகள் 7,293 எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது. ஆறு ஆண்டுகளில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 1,117 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில், இன்னொரு கொடுமை என்னவெனில், சென்னை ரயில்வேயில் தனியாக 14 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக, மாநகரக் காவல்துறையை உள்ளடக்கிய மதுரை, திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் வழக்குகள் அதிகம் பதிவாகியிருக்கின்றன. மதுரையில் 788, திருநெல்வேலியில் 771, சேலத்தில் 694, விழுப்புரத்தில் 546, வேலூரில் 530, தூத்துக்குடியில் 512, திண்டுக்கல்லில் 349 வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

சென்னை வண்டலூரைச் சேர்ந்த ‘சமூகக் கல்வி நிறுவனம்’ என்ற என்.ஜி.ஓ அமைப்பின் திட்ட மேலாளரான பிரபாகர் என்பவர்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மேற்கண்ட தகவல்களைப் பெற்றிருக்கிறார்.

பதியப்பட்ட வழக்குகள் 12,239... தண்டனை தரப்பட்டவை 1, 194 மட்டுமே...

இது தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதியிடம் பேசினோம். ‘‘கொடுங்குற்றமாகக் கருதப்படும் இம்மாதிரியான வழக்குகளை, விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்காக அதிக நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். காவல் நிலையங்களில் போக்சோ வழக்குகளை விசாரிக்க, தனிப் பெண் காவல் அதிகாரி வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒருமுறை மட்டுமே வீடியோ பதிவுசெய்யப்பட வேண்டும். விசாரிக்கச் செல்லும் பெண் காவல் அதிகாரி, சீருடையில் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கின்றன. விரைவாக விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் வேகம்காட்ட வேண்டும். சாட்சிகள், தடயங்கள் போன்ற பிரச்னைகளாலும் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சரும், காவல்துறைத் தலைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

இந்த உலகத்தின் ஒரே நம்பிக்கை குழந்தைகள்தான். அவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களுக்கான விசாரணையும் தண்டனையும் நொடித் தாமதம் இன்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு