Published:Updated:

வேகமெடுக்குமா சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் வழக்கு?

சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் வழக்கு, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு இரண்டையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறோம்.

பிரீமியம் ஸ்டோரி

‘சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்கும் விழுப்புரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அதை தினசரி விசாரித்து, வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து வைக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, டெல்லி உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. இந்தத் தீர்ப்பு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிறப்பு டி.ஜி.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் விழுப்புரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடித்துவைக்கும்படி ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்தும், தன்மீதான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியும், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு டி.ஜி.பி மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 18-ம் தேதி நடந்தபோது, ‘தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ என்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ‘விழுப்புரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டது. அதையடுத்து, வேறு மாநிலத்துக்குத் தன் வழக்கை மாற்றக் கோரிய மனுவை சிறப்பு டி.ஜி.பி வாபஸ் பெற்றார்.

இதையடுத்து, விழுப்புரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்கவிருக்கிறது. ‘‘சில உயரதிகாரிகள் செய்த சதிவலையும் இந்த வழக்கின் பின்னணியில் இருக்கிறது. அது தொடர்பான உண்மைகளை நீதிமன்ற விசாரணையில் வெளிக்கொண்டு வருவோம்’’ என்கிறார்கள் சிறப்பு டி.ஜி.பி தரப்பினர்.

வேகமெடுக்குமா சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் வழக்கு?

“இது போன்ற வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமாரி. ‘‘சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் வழக்கு, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு இரண்டையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறோம். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சிறப்பு டி.ஜி.பி மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் தினசரி நடக்க வேண்டும்’ என்று சமூக அக்கறையோடுதான் சொல்லியிருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஏனென்றால், விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி இந்த ஒரு வழக்குக்காகத் தனி கவனம் செலுத்தி தினமும் உயர் நீதிமன்றத்துக்கு ரிப்போர்ட் கொடுப்பதென்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. தினசரி விசாரிக்காவிட்டாலும், முழு கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து விசாரித்து, வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்குவார் என்று நம்புகிறோம்.

இந்த வழக்கு விசாரணையை வெளி மாநிலத்துக்கு மாற்றும்படி சிறப்பு டி.ஜி.பி உச்ச நீதிமன்றத்தில் கேட்டிருந்தார். குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு வழக்கு நடைபெறும் இடத்தில் நியாயம் கிடைக்காது என்றாலோ, வழக்கு நடைபெறும் பகுதியில் பிரச்னை ஏற்படும் என்றாலோதான் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றலாம். அதற்கான தேவை இந்த வழக்கில் ஏற்படவில்லை. அதனால்தான், வேறு மாநிலத்துக்கு விசாரணையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடியானது. பொதுவாக பாலியல் வழக்குகளில் காலதாமதம் ஏற்படுவதால் ஆதாரங்கள் அழியவும், சாட்சிகள் மறதியைக் காரணமாகச் சொல்லவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யான சைலேந்திர பாபுவிடம், ‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவான சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பு பதிவான ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழக காவல்துறை சட்டரீதியாகச் சந்திப்பதில் சுணக்கமாக இருப்பது ஏன்?’’ என்று கேட்டோம். ‘‘அது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நேரத்தில் அதுபற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது’’ என்றார்.

விரைவில் நீதி கிடைக்கட்டும்.

*****

கிடப்பில் ஐ.ஜி முருகன் மீதான வழக்கு!

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஐ.ஜி முருகனுக்கு எதிராகப் பதியப்பட்ட பாலியல் வழக்கு கிடப்பில் இருக்கிறது. ‘இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றலாம்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முருகன் தரப்பு தடையாணை வாங்கியிருக்கிறது. அந்தத் தடையை விலக்க தமிழக அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி முதல்வரை நேரில் சந்தித்து இது பற்றி முறையிட்டிருக்கிறார். முதல்வரும் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அதன் பிறகும், வழக்கில் முன்னேற்றம் இல்லை. எனவே, பெண் அதிகாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்திலுள்ள தடையை உடைக்கத் தயாராகிவருகிறார்கள். அரசுத் தரப்பில் விசாரித்தால், ‘‘தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீதித்துறையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் இப்போதுதான் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார்கள். நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். விரைவில் அந்த வழக்குகள் முடிவுக்கு வரும்’’ என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு