Published:Updated:

2019-ல் நீதி மேயாத மான் - அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் இல்லையா உச்ச நீதிமன்றம்?

2019-ல் நீதி மேயாத மான்
பிரீமியம் ஸ்டோரி
News
2019-ல் நீதி மேயாத மான்

ஜூ.வி 2020

- மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் கே.சந்துரு

2020 புத்தாண்டுக்கான புதிய ஆட்டம் தொடங்கிவிட்டது. `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று கூறினாலும் 2019-ம் ஆண்டில் நீதித் துறையில் நடந்த செயல் பாடுகளை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது நல்லது. ஏனெனில், அவை எல்லாம் நீதித்துறை வரலாற்றிலேயே நிகழாதவை!

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரண்டு தலைமை நீதிபதிகளைக் கண்டது. மேனாள் தலைமை நீதிபதி கோகாய், குறுகிய காலமே பதவி வகித்தார் என்றாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன்பே மூன்று நீதிபதிகளுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பகிரங்க பேட்டியளித்ததன் மூலம் அனைவரையும் திகைக்கவைத்தார். அந்த நான்கு நீதிபதிகளும் தங்கள் வீட்டுப் புல்வெளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை; ஒளிவு மறைவற்ற செயல்பாடுகளே நீதித்துறையின் மாண்பைக் காக்கும்’ என்றார்கள். மேலும், ‘நீதிபதிகளுக்கு ஒதுக்கப் படும் வழக்குகள் பட்டியலில் சார்புத் தன்மை இருக்கிறது. எனவே, தலைமை நீதிபதி மட்டுமே வழக்கின் இறுதி முடிவை உறுதி செய்ய முடியும்’ என்றார்கள். இவர்கள் இப்படி எல்லாம் பேசியதால், நீதிபதி கோகாய் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு நீதித்துறையில் வியக்கத்தகு மறுமலர்ச்சிகள் ஏற்படலாம் என்று நினைத்தவர்களுக்கு கிடைத்ததென்னவோ பெருத்த ஏமாற்றமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாலியல் புகாரில் தலைமை நீதிபதி!

கோகாய் மீது பாலியல் புகார் ஒன்று குற்றம் சாட்டப்பட்டது. அதன்மீதான விசாரணைக் காக அமர்வு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அந்த அமர்வில் அவரே கலந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தவிர, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியது அவர் மட்டுமே. பின்னர் பொதுவெளிகளில் எழுந்த விமர்சனங்ளைச் சமாளிக்கும்விதமாக அவர் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தியதுடன், நீதிபதிகள் உள் விசாரணைக்குழு ஒன்றையும் ஏற்பாடு செய்தார். இதுபோன்ற சூழ்நிலைகளில் மூத்த நீதிபதி ஒருவரிடம் இப்படிப்பட்ட பொறுப்பை அவர் ஒப்படைக்கத் தவறினார். மேலும், தனக்கு எதிராக சர்வதேச சதி தீட்டப்படுவதாகவும் தனது நடுநிலை பொறுப்புக்குக் களங்கம் விளைவிக்கும் செயலில் சிலர் ஈடுபடுவதாகவும் கூறினார். அதை எல்லாம் சிறப்பு விசாரணை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக்கை நியமனம் செய்தார். பட்நாயக் அறிக்கை ஏற்கெனவே ஒப்படைக்கப் பட்டிருந்தாலும் இன்றுவரை அதன் சாராம்சம் ரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அக்கறை காட்டப்படாத காஷ்மீர் விவகாரம்

அடுத்த விவகாரம்... காஷ்மீர். அந்த மாநிலத்துக்கு அளிக்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மத்திய அரசு. பிரிக்கப்பட்ட லடாக் மாநிலத்துக்குச் சட்டமன்ற அமைப்புகள் கிடையாது என்றும் பகிரங்கமாக ஜனநாயகப் படுகொலை செய்தது. அதையொட்டி எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுவதைத் தடுக்கும்விதமாக அலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் ரத்து செய்யப்பட்டன. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப் பட்டார்கள். கல்விக் கூடங்கள் மூடப் பட்டன. மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியானது. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்தது.

2019-ல் நீதி மேயாத மான்
2019-ல் நீதி மேயாத மான்

இந்தச் சூழ்நிலையில், சட்ட விரோதமான கைதுகளை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை விரைவில் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் எவ்வித அவசரத்தையோ அக்கறையையோ காட்டவில்லை. காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் மகள், தன் தாயைச் சந்திப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நீதிபதி கோகாய் முன்பாக விசாரணைக்கு வந்தது. தாயை மட்டுமன்றி தனது தாய் நாட்டையும் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்ட அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம், ‘காஷ்மீர் கடுங்குளிரில் பாதிக்கப்பட்டுள்ளதால், வெளியே செல்ல வேண்டாம்’ என்று அறிவுரை யும் வழங்கியது. என்னே ஒரு தாய் உள்ளம்!

இதைப் பார்க்கும்போது மிசா காலம்தான் நினைவுக்கு வருகிறது... 1975-ல் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் மிசா சட்டத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டனர். அப்போது இதுகுறித்து உச்ச நீதிமன்றத்துக்குப் புகார் சென்றது. அன்றைய தலைமை நீதிபதி எம்.எச்.பெக் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். மேலும், ‘சிறைக்கைதிகள் ஒரு தாயின் பரிவுடன் நடத்தப்படுகிறார்கள்’ என்று கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். அன்றைக்கு நெருக்கடி நிலைமை அமலில் இருந்ததால், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட முடியாது என்று கூறிய தீர்ப்பு இன்று வரை உச்ச நீதிமன்றத்தின் அவமானகரமான செயல்பாடாகக் கருதப்படுகிறது. இன்று நெருக்கடி நிலைமை அமலில் இல்லாதபோதும், உச்ச நீதிமன்றம் காஷ்மீர் வழக்குகளை விரைவில் விசாரிக்க மறுப்பது மீண்டும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது.

ராமர் கோயில்... கேள்விக்குறியான நீதி!

1992-ம் வருடம் பாபர் மசூதி காவி சேனைகளால் இடிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. ராமர் பிறந்த இடம் அந்த மசூதியின் நடுக்கூடம் என்று கோரி தொடரப்பட்ட வழக்குகள் 70 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராகப் போடப்பட்ட மேல்முறையீடுகள் திடீரென்று தூசி தட்டப்பட்டு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டன. தலைமை நீதிபதி கோகாய் ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருப்பினும், தானே அந்த அமர்வின் நடுநாயகமாக வீற்றிருந்ததுடன், வழக்குகளுக்கு ஒத்திவைப்பு கேட்டவர்களை எல்லாம் கடிந்துகொண்டார்.

2019-ல் நீதி மேயாத மான்
2019-ல் நீதி மேயாத மான்

அதுவரை, ‘நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைகுறித்த பிரச்னைகளைத் தீர்க்க முடியாது’ என்று மேடைக்கு மேடை கூறி வந்த சங் பரிவார அமைப்புகள், தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரம் முன்பாக, ‘தீர்ப்பு எப்படி இருப்பினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தங்களது பிரசார யுக்தியை மாற்றிக் கொண்டன. அதற்கு ஒருபடி மேலே சென்று தீர்ப்பு அளிப்பதற்கு ஒருநாள் முன்னதாக உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளரையும் தலைமை காவல் அதிகாரியையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை நீதிபதி கோகாய் தெரிந்துகொண்டார். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு அதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசமைப்பு சட்டப் பிரிவு 144-ன் கீழ் அரசாங்கத்தைச் சார்ந்தது. இந்தப் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இல்லை. ஆனால், இந்த வழக்கில் நாட்டில் அதற்கும் சேர்த்து கவலைப்பட்டது நீதிமன்றம்.

பாபர் மசூதியை இடித்தவர்கள்மீது கண்டனக் கணைகளை வீசிய உச்ச நீதிமன்றம், இடிபட்ட மசூதி இருந்த இடத்தை இடித்தவர்களுக்கே வெள்ளித்தட்டில் வைத்து வழங்கியது. இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு தரப்பாக இல்லாதபோதும், மத்திய அரசுக்குச் சொந்தமான நிலங்களைத் தாரை வார்த்ததுடன், மத்திய அரசையே அறக்கட்டளை ஏற்படுத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு தனது சிறப்பு அதிகாரத்தின் மூலம் உத்தரவிட்டது. இது நீதித்துறையின் செயல்பாட்டையே கேள்விக்குறி ஆக்கியது. மேலும், வழக்குகளை இந்துக்களுக்கும் இஸ்லாமியர் களுக்கும் உள்ள பிரச்னையாகக் கருதியதுடன், நம்பிக்கையின் அடிப் படையில் சர்ச்சைக்கு உட்பட்ட நிலங்களிலேயே ராமர் கோயில் கட்ட உத்தரவிட்டது. இதன்மூலம் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்திய மதச் சார்பற்ற குடியரசின் நடுநிலைத் தன்மையையும் கேள்விக்குறி ஆக்கியது. இந்த வழக்கில் போடப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் விசாரணை இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டன.

2019-ல் நீதி மேயாத மான்
2019-ல் நீதி மேயாத மான்

சபரி மலை... பாதுகாப்பு மறுப்பு!

அதேவேளையில், ‘சபரிமலையில் வயது வித்தியாசமின்றிப் பெண்களும் வழிபடலாம். நம்பிக்கைகளின் அடிப்படையில் நீதிமன்றங்கள் செயல்பட முடியாது. அரசமைப்பு சட்ட விதிகளின்கீழ் மட்டுமே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்’ என்று அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பின்மீது போடப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. என்னே ஒரு முரண்பாடு! சபரி மலையில் பெண்கள் வழிபாடு பற்றிய தீர்ப்பு இன்னும் அமலில் இருக்கும்போதே, அங்கு வழிபடச் சென்ற பெண்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று கோரிய பெண் பக்தர்களின் கோரிக்கையை நிராகரித்தார் இன்றைய தலைமை நீதிபதி பாப்டே. அதுமட்டுமன்றி பாதுகாப்பு கேட்ட பெண்ணிடமே, ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்’ என்றும் அறிவுறுத்தினார்.

அடுத்ததாக, குடியுரிமை திருத்தச் சட்டம். இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய டெல்லி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப் பட்டார்கள்.

அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம், ‘காஷ்மீர் கடுங்குளிரில் பாதிக்கப் பட்டுள்ளதால், வெளியே செல்ல வேண்டாம்’ என்று அறிவுரையும் வழங்கியது. என்னே ஒரு தாய் உள்ளம்!
மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் கே.சந்துரு

அந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது அவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், ‘போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என்றால், நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரிக்காது’ என்று ஒரு புதிய குண்டையும் தூக்கிப்போட்டார் பாப்டே. அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினரை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறி, மக்களைப் பாதுகாக்கும் கடமையி லிருந்து தங்களை விடுவித்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். டெல்லி உயர்நீதிமன்றமோ அந்த வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க மறுத்ததுடன், பிப்ரவரி மாதத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தது. அவசர சிகிச்சைக்குக்கூட காத்திருப்பை தேவையாக்கிவிட்ட நீதிபதிகள், தாங்களே அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற நினைவையே இழந்துவிட்டனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்... குழப்பமோ குழப்பம்!

அடுத்த அம்பு... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மீது பாய்ந்தது. பதவியேற்ற வேகத்தில் தலைமை நீதிபதி பாப்டே, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் அச்சுறுத்துவதுடன் கொள்கை முடக்கத்தை உண்டாக்கு கிறது’ என்ற தனது கவலையை வெளியிட்டார். இதேசமயத்தில்தான் மத்திய அரசும் அவசர அவசரமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்ததுடன், தலைமை தகவல் ஆணையர்களின் பணிப் பாதுகாப்பையும் கேள்விக்குறி யாக்கியது. ‘உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளில் எத்தனை பேர் தங்களது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் அளித்துள்ளனர்?’ என்று ஒரு வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டார். அந்தத் தகவலை அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதில் குழப்பத்துக்கு மேல் குழப்பம். அதற்கும் மேல் குளறுபடிகள்!

அந்த வழக்கறிஞர் கேட்ட விவரங்களை ரத்து செய்த தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றமே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது விசித்திரத்திலும் விசித்திரம். இன்னொரு பக்கம், ‘உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்கக் கடமைப்பட்டுள்ளது’ என்று நீதிபதி ரவீந்திர பட் (தற்போது இவரே உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்) தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய அமர்வு அந்த மேல்முறை யீட்டை தள்ளுபடி செய்தவுடன், அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றமே தனது நீதிமன்றத்திலேயே ஒரு மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தது. தலைசுற்றுகிறது அல்லவா!

தலைமை நீதிபதி கோகாய், பதவியில் இருக்கும்வரை நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு பற்றிய கொலிஜியம் முடிவுகளின் சுருக்கமான குறிப்புகள்... இவை எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் வலைதளத்தில் உடனடியாகப் பதிவேற்றப்பட்டன. இந்த வெளிப்படைத்தன்மை சிறிது காலமே நீடித்தது. மறுபடியும் கொலிஜியம் முடிவுகள் வலை தளத்தில் ஏற்றப்பட மாட்டாது என்ற முடிவு செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் பழைய பாணி ரகசிய செயல்பாடுகளுக்குத் திரும்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

2019-ல் நீதி மேயாத மான்
2019-ல் நீதி மேயாத மான்
பாதிக்கப்பட்ட தரப்பினரை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறி, மக்களைப் பாதுகாக்கும் கடமை யிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டது உச்ச நீதிமன்றம்.

இப்படி உச்ச நீதிமன்றத்தின் முரண்பட்ட நடவடிக்கைகளையும் தீர்ப்புகளையும் பார்க்கும்போது, ‘டெல்லியில் உச்ச நீதிமன்ற கட்டடம் ஒன்றுதான் உள்ளது. ஆனால், அதற்குள் 34 நீதிமன்றங்கள் இருக்கின்றன’ என்று மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. நீதிபதிகள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக் கலாம். அதனால், ஒரே பிரச்னையில் இருவிதமான தீர்ப்புகள் வரலாம். ஆனால், வெவ்வேறு அமர்வுகளில் வெவ்வேறு தீர்ப்புகள் வருவது நீதிமன்றங்களின் நிச்சயமற்ற தன்மைகளின் வெளிப்பாடாகவே அறியப்படும்.

நீதிபதிகள் நியமனம்... பரம ரகசியம்!

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ‘அந்தச் சட்டம் நீதிமன்றங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்’ என்றும் காரணம் சொன்னது. ஆனால், நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக்கொள்ளும் அதிகாரம் உலகில் எந்த நாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கொலிஜியம் நடைமுறை நீதிமன்றமே உருவாக்கிய தீர்ப்புகளின் அடிப்படை யிலேயே ஏற்படுத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் இத்தகைய நடைமுறை அமைப்புக்கு எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. ஆனால், இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால் ரத்த அழுத்தமே வந்துவிடும்.

மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்றம் அளித்த பரிந்துரைகள் அரசு அலுவலகங்களில் காத்துக் கிடப்பது ஒரு புறம். புதிய நீதிபதி களுக்கான பரிந்துரைகளைச் செய்ய மறந்த உயர் நீதிமன்றங்கள் மறுபுறம். உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை ஏற்க மறுத்த மத்திய அரசைத் தட்டிக் கேட்க முடியவில்லை. மத்தியப்பிரதேச தலைமை நீதிபதியாக ஒருவரைப் பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம், காரணம் கூறாமலேயே மறுபடியும் அவரை திரிபுரா உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க வேண்டிய வெட்கக்கேடு எல்லாம் நீதித்துறை வரலாற்றிலேயே 2019-ல்தான் ஏற்பட்டிருக்கிறது. ‘தலைமை நீதிபதி பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை’ என்று சிலரை பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம், அவர்களில் சிலரையே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முன்வந்தது. இதன் பின்னணி எல்லாம் யாருக்கும் தெரியாத ரகசியம். இப்படி நீதிபதிகள் நியமன விவகாரங்கள் மிக மிக ரகசியம் பேணக்கூடியதாக மாறியுள்ளது கவலைக்குரியது.

ப.சிதம்பரத்துக்குப் பிணை அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்தது.
2019-ல் நீதி மேயாத மான்
2019-ல் நீதி மேயாத மான்

சமீபத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்தது. ‘மத்திய புலனாய்வுத் துறையின் சீலிடப்பட்ட உறைகளிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் அமையக் கூடாது’ என்று அறிவுறுத்தியது. ஆனால், தலைமை நீதிபதி கோகாய் பல வழக்குகளில், அரசுத் தரப்பில் அளிக்கப்படும் சீலிடப்பட்ட உறைகளிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுத்ததை மறக்க முடியாது. குறிப்பாக, ரஃபேல் விமானம் வாங்கிய விவகாரத்திலும் அவர் அவ்வாறு தீர்ப்பளித்தது பொதுவெளிகளில் விமர்சனத்துக்கு உள்ளானது.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகனுக்கு தீங்கு இழைக்கப் பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நீதி கேட்க முடிகின்ற வாய்ப்பு நம் நாட்டில் உள்ளது. ஆனால், 2019-ல் ஆண்டில், இத்தகைய அதிகாரம் பெற்ற அந்த உச்ச நீதிமன்றம் ‘அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்’ என்ற தனது அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டதா என்று கேட்டால்... அதற்கான பதில் ஏமாற்றத்தையே அளிக்கும். 2020-ம் ஆண்டில் மாற்றம் காணுமா இந்த நீதித்துறை?