Published:Updated:

ஒவ்வொரு முறையும் தேசியப் பாதுகாப்பு என்று காரணம் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது!

உச்ச நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
உச்ச நீதிமன்றம்

மத்திய அரசைச் சாடிய உச்ச நீதிமன்றம்

ஒவ்வொரு முறையும் தேசியப் பாதுகாப்பு என்று காரணம் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது!

மத்திய அரசைச் சாடிய உச்ச நீதிமன்றம்

Published:Updated:
உச்ச நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
உச்ச நீதிமன்றம்

இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகார், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால், மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் நேரடியாகத் தரப்பட வில்லை. எனவே, பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணைக் குழுவைத் தாங்களே அமைத்துக்கொள்வதாக மத்திய அரசு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 27-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஒவ்வொரு முறையும் தேசியப் பாதுகாப்பு என்று காரணம் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது!

விசாரணையின்போது, “நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குத் தனிமனித உரிமைகளும் முக்கியம். பெகாசஸ் விவகாரத்தில் விரிவான தகவல்களோடு பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய மத்திய அரசுக்குக் கால அவகாசம் வழங்கியிருந்தோம். ஆனால், மத்திய அரசு எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. மத்திய அரசு அளித்த மறுப்புகளும் தெளிவாக இல்லாததால், அவர்கள் அமைத்த குழுவை அங்கீகரிக்க மறுப்பதோடு ‘தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இயங்கும் குழு அமைக்க வேண்டும்’ எனப் பிற மனுதாரர்கள் வைத்துள்ள கோரிக்கையை ஏற்கிறோம். அதனடிப்படையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவின் உதவியுடன் உண்மையைக் கண்டறிய குழு ஒன்று அமைக்கப்படுகிறது. தேசியப் பாதுகாப்பு என்று கூறிவிட்டால் மட்டும் நீதித்துறை அந்த விவகாரத்திலிருந்து விலகிவிடாது. ஒவ்வொரு முறையும் தேசியப் பாதுகாப்பு என்று காரணம் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருப்பதால், இதில் விசாரணை அவசியம் தேவை” எனக் குழுவை அமைத்து உத்தரவிட்டதோடு, மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான அந்தக் குழுவில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் ஜோஷி, தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சந்தீப் ஓபராய் ஆகியோர் கண்காணிப்பாளர்களாகவும், அவர்களுக்கு உதவியாகத் தொழில்நுட்பரீதியான விசாரணைகளுக்கு குஜராத் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் நவீன் குமார் சௌதாரி, கேரள மாநிலம் அமிர்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரபாகரன், மும்மை ஐஐடி பேராசிரியர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோரையும் நியமித்துள்ளது. “பெகாசஸ் தொடர்பாக விசாரணை அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் தேசியப் பாதுகாப்பு என்று காரணம் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். “பெகாசஸ் குறித்து மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பியபோது, நாடாளுமன்றத்தை முடக்கி இதற்கு விளக்கம் அளிப்பதிலிருந்து மத்திய அரசு தன்னைத் தற்காத்துக்கொண்டது. இந்த விவகாரத்தை இருட்டடிப்பு செய்துவிடலாம் என பா.ஜ.க நினைத்திருந்த சமயத்தில், உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக்குழு மூலம், இதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிக்கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது” என்றார்.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராமிடம் பேசினோம். “நாங்கள் என்ன கேட்டோமோ அதையே தீர்ப்பாக வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இது வரவேற்கக்கூடியது. பெகாசஸ் ஸபைவேரை யார் பயன்படுத்தினார்கள் என்ற உண்மையைக் கண்டறியும் மிகப்பெரிய கடமை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவுக்கு இருக்கிறது. அதைச் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஒருவருடைய செல்போனில் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை ‘சிட்டிசன் லேப்’ என்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய மென்பொருளை வைத்துத்தான் ஆய்வுசெய்யப் போகிறார்கள். எனவே, இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பெல்லாம் தேவையில்லை” என்றார்.

கோபண்ணா, என்.ராம், வானதி சீனிவாசன்
கோபண்ணா, என்.ராம், வானதி சீனிவாசன்

பா.ஜ.க மகளிரணி தேசியச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்தும் கேட்டோம். “நமது நாட்டின் முக்கியத் தலைவர்களின் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது. அந்தக் கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், தற்போது குழுவை அமைத்துள்ளது. ஆரம்பம் முதல் பா.ஜ.க அரசு பெகாசஸ் விவகாரத்தை மூடிமறைக்க விரும்பவில்லை. வெளியான செய்திகளில் மத்திய அமைச்சர்களின் பெயர்களே இருக்கும்போது, அரசே இதைப் பயன்படுத்தியது என்று எப்படிச் சொல்ல முடியும்? பிரதமர் மீதும், மத்திய அரசின் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் நோக்கில் இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் என்ற எதிர்க்கட்சிகளின் பாராட்டெல்லாம் பிரதமருக்குத்தான் போய்ச் சேரும்” என்றார்.

உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் அறிக்கையிலாவது பெகாசஸ் தொடர்பான மர்மங்கள் வெளிவருமா என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் அரசியல் நோக்கர்களும் மக்களும்!