Published:Updated:

பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல... சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?

சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?
பிரீமியம் ஸ்டோரி
சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?

வயதுக்கு வராத குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.

பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல... சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?

வயதுக்கு வராத குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.

Published:Updated:
சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?
பிரீமியம் ஸ்டோரி
சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?

“ஒருவர் தாமாக முன்வந்து செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல. அதுவும் ஒரு புரொஃபஷன்தான்” என்று சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தியாவில் பாலியல் தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கின் பின்னணி

கடந்த 2011-ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர்மீது போலீஸார் வழக்கு பதிந்த முறை சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து இப்படி வழக்குகள் வருகின்றனவே என்று இந்த வழக்கை, தாமாக விசாரிக்க முன்வந்தது உச்ச நீதிமன்றம். ஒரு தனிச் சம்பவத்தை மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், நாடு முழுவதும் உள்ள இது தொடர்பான பிரச்னைகள் எல்லாவற்றையும் விரிவாக விசாரிக்க முடிவெடுத்த நீதிமன்றம், 19.7.2011 அன்று ஒரு குழுவை உருவாக்கியது. இந்தக் குழுவின் தலைவராக மூத்த வழக்கறிஞர் பிரதீப் கோஷை நியமித்த நீதிமன்றம், உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே ஓர் அறையை இந்தக் குழுவுக்கான அலுவலகமாக ஒதுக்கிக் கொடுத்தது.

மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷண், உஷா பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம், தர்பார் மகிளா சமன்வாயா கமிட்டி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு பாலியல் தொழிலாளர்கள் குறித்து இந்தியா முழுவதும் ஆய்வு நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல... சமூகத்துக்கு நன்மை பயக்குமா நீதிமன்றத் தீர்ப்பு?

தீர்ப்பின் அம்சங்கள்

பாலியல் தொழிலாளர்கள் அந்தத் தொழிலைக் கண்ணியத்துடன் தொடரும் சூழ்நிலை, அவர்களுக்கான மறுவாழ்வு உட்பட விசாரணைக் குழு அளித்திருந்த பல்வேறு பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதனடிப்படையில் கடந்த மே மாதம் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பில்,

* வயதுக்கு வராத குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அது தன் மகன் அல்லது மகள் என்று அந்த விடுதியில் உள்ள பாலியல் தொழிலாளி நிரூபித்தால், அந்தக் குழந்தையை அவரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கக் கூடாது.

* 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முழுச் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபடும்போது, அதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. அவர்கள்மீது காவல்துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது.

* தாமாக முன்வந்து பாலியல் தொழில் செய்வது சட்டப்படி குற்றம் கிடையாது. ஆனால், பாலியல் கூடங்கள் நடத்துவது குற்றமாகும்.

* பாலியல் தொழில் நடக்கும் கூடங்களில் சோதனை நடத்தும்போது, பாலியல் தொழிலாளர்களைக் கைதுசெய்வதோ, துன்புறுத்துவதோ, அபராதம் விதிப்பதோ கூடாது. அவர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை எக்காரணத்தைக்கொண்டும் ஊடகங்களில் வெளியிடக் கூடாது.

* ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்வது கிரிமினல் குற்றம் என்பதில் நீதிமன்றத்துக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு பாலியல் தொழிலாளி தமக்கு எதிராகப் பாலியல் குற்றம் இழைக்கப்பட்டதாகப் புகார் கொடுத்தால் அந்தப் புகார் பாகுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது.

* பாலியல் தொழிலாளர்களிடம் போலீஸ் முரட்டுத் தனத்துடனும், வன்முறை வழியிலும் பல நேரங்களில் நடந்துகொள்வது தெரியவருகிறது. காவல்துறையினர் அவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

கிருபாகரன்
கிருபாகரன்

போலீஸுக்கு இது புரியுமா?

தீர்ப்பு பற்றி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனிடம் கேட்டோம். ``உண்மையில் இது மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பு. வேண்டுமென்றே யாரும் இந்தத் தொழிலுக்கு வருவதில்லை. வாழ வழியில்லாமல்தான் வருகிறார்கள். அப்படி வாழ்வாதாரத்துக்காக வருபவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அவசியம். பல நாடுகளில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தொழில். நம் சங்க இலக்கியங்களில்கூட, இங்கே பாலியல் தொழில் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. எனவே, நமது தார்மிக மதிப்பீடுகளை இந்தத் தீர்ப்போடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது” என்கிறார் அவர்.

சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவரிடம் இந்தத் தீர்ப்பு குறித்துக் கேட்டோம். ``தீர்ப்பைக் கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால், நான் ஒரு நாள் உழைக்கும் பணத்தில் போலீஸுக்கும், எனக்கு மேல் இருப்பவர்களுக்கும் கொடுத்ததுபோகக் கால்வாசிகூட என் கைக்கு வருவதில்லை. இந்தத் தீர்ப்பாவது அந்த அவலத்தை மாற்றுமா என்று தெரியவில்லை. காவல்துறைக்குப் போகும் பணம் குறையும் என்றால் மகிழ்ச்சிதான். பெரும்பாலானவர்கள் இந்தத் தொழிலை விருப்பத்தின்பேரில் செய்வதில்லை. மாற்று வருமானமோ, வழியோ இல்லாமல்தான் இதைச் செய்கிறோம். தொழிலுக்குப் போகும்போது எங்களுக்கு ஏதேனும் வன்முறை நடந்தாலும் எங்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. இந்தத் தீர்ப்பு மூலம் எங்களுக்குச் சட்ட பாதுகாப்பு கிடைத்தால் அதைவிடச் சந்தோஷம் என்ன இருக்கப்போகிறது... ஆனால், இந்தத் தீர்ப்பை போலீஸார் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த வேண்டுமே..?” என்றார்.

கொற்றவை
கொற்றவை

ஆண்களின் முரட்டுத்தனத்தைக் குறைக்க உதவலாம், ஆனால்...

எழுத்தாளர் கொற்றவையோ, ``பாலியல் தொழிலாளிகளைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்னும் தீர்ப்பின் ஒரு பகுதியாக, விருப்பத்தின்பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் சட்டத்துக்குப் புறம்பானதல்ல எனும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூற்றினால், பாலியல் சேவையும் ஒரு தொழிலே என்று கொண்டாடப்படுகிறது. பாலியல் தொழிலாளிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பாலியல் தொழிலை ஒழிப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். பாலியல் தொழில் ‘உழைப்பு’ ஆகாது. ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்களின் தேவைக்காக உருவானதே இந்தத் தொழில். அதை அங்கீகரிப்பது தவறு. பாலியல் தொழில் ஒன்றும் சமூகத்துக்கு அவசியமான, பொருள் உற்பத்திக்குத் தேவையான உழைப்பில்லை. உழைக்காமல் சொகுசாக வாழ்வதற்கும், பாலியல் சுரண்டலுக்குமே இது வழிவகுக்கும். பதின்பருவப் பெண்களும் இதற்கு பலியாவார்கள். பால்வினைநோய், மனநோய் உள்ளிட்ட சிக்கல்களும் இருக்கின்றன” என்கிறார்.

இறுதியாக மனநல மருத்துவர் ஷாலினியின் கருத்தைக் கேட்டோம். “பல்வேறு உலக நாடுகளில் பாலியல் தொழில் குற்றம் கிடையாது. அது இயல்பான வாழ்க்கையின் ஓர் அங்கமாகத்தான் பார்க்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்போக்கானது. பாலியல் தொழில் எங்கெல்லாம் நடைமுறை வழக்கத்தில் இல்லையோ, அங்கெல்லாம் பாலியல்ரீதியாக விரக்தியடைந்த ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது அதிகரித்துக் காணப்படுவதாகத்தான் மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாலியல் தொழிலை வணிகப்படுத்துவது, பாலியல்ரீதியாக விரக்தியடைந்த ஆண்களின் முரட்டுத்தனத்தைக் குறைக்க உதவும். அதேசமயத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களோ, ஆண்களோ தனிப்பட்ட விருப்பத்தில் செய்வது வேறு. கட்டாயத்தின்பேரில் ஈடுபடுவது வேறு. இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள், மிரட்டப்பட்டு அல்லது கடத்திவரப்பட்டு இந்தத் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்டறிய இங்கு எந்த வழிமுறையும் இல்லை. இதனால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பெண்களை மிரட்டியும், கடத்தியும், கட்டாயப்படுத்தியும் இந்தத் தொழிலில் தள்ள அதிக வாய்ப்புள்ளது. இதில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணுக்கு, தான் செய்யும் தொழிலில் தனக்கு விருப்பம் இருக்கிறதா... இல்லையா என்பதைச் சொல்ல இங்கு சுதந்திரம் இருக்கிறதா... அதற்கான இடம் உருவாக்கப் பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இப்படிப் பல்வேறு விஷயங்களைக் கருத்தில்கொள்ளாமல், சுயவிருப்பத்தில் யார் வேண்டு மென்றாலும் பாலியல் தொழில் செய்யலாம் என்று சொன்னால் அது குற்றத்தைத்தான் அதிகரிக்கும்” என்றார் முத்தாய்ப்பாக.

ஷாலினி
ஷாலினி

பலர் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இது பாலியல் தொழிலாளர்களின் நலனை மையப்படுத்திய தீர்ப்புதானே ஒழிய, பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் தீர்ப்பல்ல என்ற புரிதல் தேவை. இந்தியாவில் பாலியல் கல்வி கொண்டுவருவதற்கான விவாதமே பல ஆண்டுகளாக நீண்டுகொண்டிருக்கும் சூழலில், பாலியல் தொழிலை அங்கீகரிப்பதற்கு அரசு இன்னும் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism