Published:Updated:

தப்லீக் ஜமாத் வழக்கு: வெளிநாட்டினர் 36 பேரும் விடுவிப்பு! - போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்

தப்லீக் ஜமாத்
தப்லீக் ஜமாத் ( ANI )

இந்த வழக்கில் ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலைய விசாரணை அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கிய கடந்த மார்ச்சில் நடந்த டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டம் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில், மூடப்பட்ட ஓர் அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்ததால் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியது என போலீஸார் குற்றம்சாட்டினர். அதையடுத்து, டெல்லி நிஜாமுதீன் பகுதியிலிருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்ததாக 236 பேரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். மேலும், 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா முகமது சாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சூடான், துனிசியா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த, தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 952 பேர் மீது `கொரோனா பரவலுக்குக் காரணமானவர்கள்’ என வழக்கு தொடரப்பட்டது. இதில், 900-க்கும் மேற்பட்டோர் அவர்களது குடும்பத்தினருடன் இணைய விருப்பம் தெரிவித்து, நீதிமன்ற அனுமதியுடன் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

டெல்லி: 'கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடும் ஒரு காரணம்!’ - மத்திய உள்துறை அமைச்சகம்

44 பேர் மட்டும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருந்த நிலையில், அவர்களிலும் எட்டு பேர் ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 36 பேர் மீது மட்டுமே விசாரணை நடந்துவந்தது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி விசாரணை தொடங்கியது, டிசம்பர் 3 -ம் தேதி முதல் மூன்று நாள்களில் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

விசாரணையின்போது, சமூக விலகல் மற்றும் பிற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் பெரிய கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது. `கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அலட்சியமாக மசூதியில் கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவலுக்குக் காரணமாக இருந்தனர்’ என்று காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தப்லீக் ஜமாத்
தப்லீக் ஜமாத்
Photo: AP

வழக்கு விசாரணையின் முடிவில், மசூதி வளாகத்துக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்ததை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக டெல்லி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் கார்க் தெரிவித்தார். சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 36 வெளிநாட்டினரையும் விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல்நிலைய விசாரணை அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஃபாஹிம் கான் (Fahim khan) ``தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 36 பேரில், 10 பேர் கூட குறிப்பிட்ட அந்த இடத்தில் இல்லை என்று நாங்கள் வாதிட்டோம். இது தொடர்பாகக் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் முரண்பாடு இருந்தது. கொரொனா விதிமுறைகளை எங்கள் தரப்பினர் பின்பற்றவில்லை என்று கூறிய அரசுத் தரப்பால், அதை நிரூபிக்க முடியவில்லை” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு