Published:Updated:

`தமிழ் மொழிக்காகத்தானே சத்தம் போட்டார்கள்; இதற்கெல்லாம் ரிமாண்டா?' - தஞ்சை நீதிமன்றம் கேள்வி

தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

`தமிழ் மொழிக்காகத்தானே சத்தம் போட்டார்கள். இதற்கெல்லாம் 15 நாள் காவலா?' என போலீஸாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது. குடமுழுக்கு முழுவதையும் தமிழிலேயே நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழியிலும் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

`தமிழ், சம்ஸ்கிருத மந்திரங்கள்!' - யாகசாலை பூஜையுடன் தொடங்கிய தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா  #NowAtVikatan

இந்த நிலையில், குடமுழுக்கை தமிழ் மொழியில் மட்டுமே நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பெரியகோயில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழர் விடுதலைக் கொற்றத்தின் மாநிலத் தலைவர் வியனரசு அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று அவரும் தங்கராஜ் என்பவரும் ராஜராஜசோழன் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், இருவரையும் நீதிபதி நீதிமன்றத்தின் சொந்த ஜாமீனில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வியனரசுவிடம் பேசினோம். ``உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு வருவதற்கு முன்பே நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தோம். அவர்கள் தராததால் தடையை மீறி, அதேநேரம் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக 2 பேர் மட்டும் சோழன் சிலை நடைமேடையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றோம். ஆனால், அதற்குள் போலீஸார் எங்களைக் கைது செய்ததுடன் சட்டம் ஒழுங்கை கெடுக்க முயன்றதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், மறியல் செய்ததாகவும் வழக்கு பதிந்தனர். ஆனால், சம்பந்தபட்ட காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

அதன்பின்னர் தஞ்சை குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி முன் எங்களை ஆஜர்படுத்தினர். அத்துடன் எங்களை 15 நாள்கள் காவலில் வைக்க வேண்டும் எனவும் கூறினர். அதற்கு நீதிபதி, `நீதிமன்றம்தான் தீர்ப்பளித்து விட்டதே? அப்புறம் ஏன் போராட்டம் நடத்தீனீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு, `குடமுழுக்கு முழுமையாகத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்றே போராட்டம் நடத்தினோம்' என்றோம். `சரி, குடமுழுக்கு முடியும்வரை இனி எந்தப் போராட்டமும் நடத்தக் கூடாது' என எழுதிக் கொடுங்கள் எனக் கூறிவிட்டு, எங்களை நீதிமன்றத்தின் சொந்த ஜாமீனிலேயே வெளியே அனுப்பினார். அத்துடன், `தமிழ் மொழிக்காத்தானே போராட்டம் நடத்துறாங்க; சத்தம் போடுறாங்க? இதற்கெல்லாமா 15 நாள் ரிமாண்ட் செய்வது?' என போலீஸாரிடம் நீதிபதி கடிந்துகொண்டார்.

`எவ்வளவு அழகு தஞ்சை பெரிய கோயில்!' - தீயணைப்பு வாகனத்தின் உதவியால் மெய்சிலிர்த்த மக்கள்

நாங்கள் பெரியகோயில், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட பத்து கோயில்களில் தமிழ் மொழியில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும் என 1998-ம் ஆண்டே கோரிக்கை வைத்ததுடன், பொதுமக்களிடம் வாக்கெடுப்புப் போராட்டமும் நடத்தினோம். அதில் 98 சதவிகித மக்கள், தமிழ் மொழியிலேயே வழிபாட்டு முறையை செய்ய வேண்டும் என வாக்களித்திருந்தனர். குடமுழுக்கு வரை இனி எந்தப் போராட்டமும் நடத்த மாட்டோம். அதன் பிறகு வழிபாட்டை தமிழிலேயே நடத்த வேண்டும் என போராட இருக்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு