Published:Updated:

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கு - எதிர் வினைகள் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கு
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கு

நீதித்துறையைப் பொறுத்த வரையில், ஒரு வழக்கின் முடிவை ஊடகங்களோ அல்லது பொதுமக்களின் கவனமோ தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது.

பிரீமியம் ஸ்டோரி
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

2016-ம் ஆண்டு... காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் - கௌசல்யா தம்பதியரை உடுமலைப்பேட்டை கடைவீதியில் வைத்து பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்தது ஒரு கும்பல். இந்த கொடூரத் தாக்குதலில் சங்கர் உயிரிழக்க, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார் கௌசல்யா. சங்கரையும் கெளசல்யாவையும் துரத்தித் துரத்தி வெட்டும் சி.சி.டி.வி காட்சிகள் நாடெங்கும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கில் கெளசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விரைந்து விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன், குற்றம்சாட்டப்பட்ட 11 பேர்களில் கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரையும் விடுவித்தார். கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய ஆறு பேருக்கு மரண தண்டனை யும் தன்ராஜ் என்பவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், வழக்கின் முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, 9-வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11-வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், தூக்கு தண்டனை பெற்ற மற்ற ஐந்து பேருக்கு `குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

``இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’’ என்று கெளசல்யா தெரிவித்துள்ள நிலையில், தனது விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தன் தரப்பு வாதத்தைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி.

இந்த வழக்கு குறித்து விவாதிப்பவர்கள், ‘பொதுமக்களின் கவனம் பெறாமல் போகும்போது, வழக்கின் மீதான நிர்பந்தமும் மறைந்துபோகிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தத் தீர்ப்பு’ என்கின்றனர்.

மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம், “நீதித்துறையைப் பொறுத்த வரையில், ஒரு வழக்கின் முடிவை ஊடகங்களோ அல்லது பொதுமக்களின் கவனமோ தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. சட்டத்தின் அடிப்படையில் மட்டுமேதான் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பைப் படிக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்கள் கொடுக்கப்படவில்லை என்றுதான் தெரிகிறது. ஸ்பெஷல் பப்ளிக் ப்ராஸிக்யூட்டரை நியமித்து, கூடுதல் கவனத்துடன் இந்த வழக்கைக் கையாண்டிருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசுத் தரப்பிலிருந்து கூடுதலாக வழக்கறிஞர் யாரேனும் நியமிக்கப்படாமல் இருந்திருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டவர் கள் தரப்பிலிருந்து ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடியிருந்தால் வழக்கைச் சிறப்பாக நடத்தியிருக்க முடியும். எனவே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்கிறபோதாவது சம்பந்தப்பட்டவர்கள் இதைச் செய்ய வேண்டும். அதுமட்டு மல்லாமல் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குகளை விசாரிப்ப தற்கென்றே பிரத்யேகமாகக் காவல்துறை யினரை நியமித்தால்தான் அவர்களால், திறம்பட வழக்கை நடத்திச் செல்ல முடியும்!’’ என்றார் விளக்கமாக.

சங்கர் - கௌசல்யா
சங்கர் - கௌசல்யா

திராவிடர் கழகம் மற்றும் திராவிடக் கட்சிகளும்கூட, இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தாதது குறித்து திராவிட இயக்க பிரசார செயலாளரும், வழக்கறிஞரு மான அருள்மொழியிடம் பேசினோம். “ `இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று உரிய நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள் ளார். மேலும், களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொள்கை - கருத்து ரீதியான உதவிகளையும் செய்து வருகிறோம். ‘களப்பணியிலும் கைகோத்து செயல்படு கிறோம்’ என்று நாங்கள் இறங்கினால், அது தேவை யற்ற குழப்பங்களை ஏற்படுத்திவிடும் என்பது என் கருத்து.

அடுத்ததாக, அரசியல்ரீதியாக அ.தி.மு.க-வை நோக்கி இது போன்ற கேள்விகளை யாரும் கேட்ப தில்லை. தி.மு.க-வை நோக்கி மட்டுமே கேட்கப்படு கின்றன. பொதுவாக, இது போன்ற சமயங்களில், ஓர் அரசியல் கட்சியானது சாதிப் பாகுபாடின்றி ஒரு தவற்றை, ‘தவறு’ என்று கருத்துச் சொல்ல வேண்டும். அந்த வகையில், கண்டிப்பாக தி.மு.க-வும் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பும்’’ என்றார்.

பெண்கள் உரிமைக்காகப் போராடிவரும் இயக்கங்களும்கூட இந்த வழக்கில் உரிய கவனம் செலுத்தாததன் காரணம் என்ன? பெண்கள் உரிமை பயிற்றுநரும் வழக்கறிஞருமான அஜிதாவிடம் கேட்டபோது, “கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றபோது, ‘குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று நாங்கள் மனுத்தாக்கல் செய்ததன் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முறைகூட ஜாமீன் வழங்கப்படவில்லை. சங்கர் படுகொலை வழக்கு என்பது சாதி அரசியல் சார்ந்த வேறொரு தளத்தைக்கொண்டது. எனவே, இதைப் பெண்கள் பிரச்னையாக மட்டுமே சுருக்குவது சரியல்ல.

சுதா ராமலிங்கம் - அருள்மொழி - அஜிதா
சுதா ராமலிங்கம் - அருள்மொழி - அஜிதா

கடந்த இருபது ஆண்டுகளாக இந்துத்துவ மனப்பான்மையும், சாதியக் கட்சிகளின் ஆதிக்கமும் சமூகத்தில் ஆழ ஊடுருவியிருப்பதன் கோர வெளிப்பாடுதான் இந்த ஆணவப் படுகொலைகள். பள்ளிக்கூடங்களிலேயே சாதி அடையாளமாக பல்வேறு வண்ணக் கயிறுகளைக் கட்டியபடி மாணவர்கள் வலம்வருகின்றனர். பட்டியலின மக்கள் மீதான சாதிய வெறுப்பு உணர்வு என்பது ஆதிக்க சாதியினரின் பொதுப்புத்தியிலேயே ஊறி யிருக்கிறது. நாடு முழுக்க இத்தனை எண்ணிக்கையில் ஆணவப் படுகொலைகள் அரங்கேறிவந்தாலும்கூட, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு சட்டமும் இன்னும் இயற்றப்படவில்லை. `ஆணவக் கொலை’ என்ற வார்த்தைகூட சட்டப் புத்தகத்தில் இல்லை. இப்படியொரு சூழலில்தான் இந்த வழக்கு மேல்முறை யீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்கிறது. அங்கே யாவது, சமூகத்தின் மனசாட்சியைப் பிரதிபலிப்பார் களா என்று பார்க்கலாம்!’’ என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்தடுத்து அதிரடி சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுவரும் மத்திய அரசு, ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை எப்போது கொண்டுவரப்போகிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு