நாளை மறுநாள் தண்டனை விவரம் அறிவிப்பு!- அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்ஸோ நீதிமன்றம் #LiveUpdates
குற்றம் சாட்டபட்ட 17 பேரில், பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததால், 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்ஸோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நாளை மறுநாள் தண்டனை விவரம்!
குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் மோகன்தாஸ் நம்மிடம் பேசுகையில், ``பரபரப்பாக பேசப்பட்ட அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சுமத்தப்பட்ட 17 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 16 பேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மற்ற 15 பேரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை மறுநாள் (பிப்ரவரி 3ம் தேதி) தெரிவிக்கப்படும். குற்றவாளிகளுக்கு அறிவிக்கப்படும் தண்டனைக்கு பிறகு மேல்முறையீடு செய்யப்படும். குற்றவாளி தரப்பில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்" என்றார்.
தீர்ப்பு வாசிப்பு!
11 மணி அளவில் கூடிய நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை வாசித்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்பதை அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்றுக் கூறினார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
16 பேரும் நீதிமன்றம் வந்தனர்!
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 16 பேரும் பலத்த பாதுகாப்புக்கு இடையே நீதிமன்றம் அழைத்துவரப்பட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படவுள்ளனர். தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்தனர்.
இந்நிலையில், இவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர் நீதிமன்றம் ரத்துசெய்து. ஆனாலும் 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையைக் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகிளா நீதிமன்றம் தொடங்கியது.

இந்த வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றம் சாட்டபட்ட 17 பேருக்கும் தனித் தனியாக வக்கீல்கள் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் 7பேர் தரப்பு சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, (இன்று )பிப்.1-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக போக்ஸோ நீதிமன்றம் அறிவித்தது.

குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில், பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததால், 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்ஸோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.