Published:Updated:

கொடைக்கானல் மலையில் ஆயுதப் பயிற்சி: `குற்றம் நிரூபிக்கப்படவில்லை!’ - 7 பேர் விடுதலை

திண்டுக்கல் நீதிமன்றம்
திண்டுக்கல் நீதிமன்றம்

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி செய்த மாவோயிஸ்ட்கள் ஏழு பேரை, போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கூறி, திண்டுக்கல் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில் உள்ளது பொய்யாவெளி வனப்பகுதி. இங்கு, கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாகவும், வனப்பகுதிக்குள் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கே சென்ற சிறப்பு அதிரடிப் படை போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த நவீன் பிரசாத் என்பவர் பலியானார்.

கொடைக்கானல் மலைப்பகுதி
கொடைக்கானல் மலைப்பகுதி
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பயிற்சியில் ஈடுபட்ட மற்ற மாவோயிஸ்டுகளான கண்ணன், காளிதாஸ் , பகத்சிங், ரீனா ஜாஸ்மேரி, செண்பகவல்லி, ரஞ்சித், நீலமேகம் ஆகிய ஏழு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பாக கொடைக்கானல் காவல்துறையினர் 16 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய ஏழு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இவர்கள் மீதான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. காவல்துறை தரப்பில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 67 சாட்சியங்களில் 44 பேர் மட்டுமே சாட்சியளித்தனர். இதில், தமிழக முன்னாள் உள்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்டினும் ஒருவர்.

திண்டுக்கல் நீதிமன்றம்
திண்டுக்கல் நீதிமன்றம்
தேனி முதல் ஒடிசா வரை! - மாவோயிஸ்ட் வேல்முருகனின் கதை...

வழக்கு தொடர்பாக, சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 17 ஏ.கே 47 துப்பாக்கிகள், 210 தோட்டாக்கள் உள்ளிட்ட 33 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்து நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, வேலூர் சிறையிலிருந்த மாவோயிஸ்ட் ரீனா ஜாஸ்மேரி பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். ஜாமினில் இருந்த ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதி நால்வர், பல்வேறு வழக்குகளில் சிறையில் இருப்பதால், காணொலிக் காட்சி மூலம் ஆஜராகினர். இந்தநிலையில், குற்றவாளிகள் மீது அரசுத் தரப்பில் முறையாக குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக நீதிபதி செல்வி ஜமுனா தீர்ப்பளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு