பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நடந்தது என்ன? #Metoo

பத்திரிகையாளர் பிரியா ரமணி, பா.ஜ.க முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மீ டூ பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அன்று முதல் இன்று வரை என்ன நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தவர் எம்.ஜே.அக்பர். பிரபல பத்திரிகையாளரான பிரியா ரமணி, எம்.ஜே.அக்பரிடம் 1993-ம் ஆண்டு காலகட்டத்தில் பணியாற்றிவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளான புகார் #Metoo 'மீ டூ ஹேஷ்டேக்' மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது.

உலகம் முழுவதிலிமிருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் எழுதினர். அந்தநிலையில், பிரியா ரமணியும் எம்.ஜே.அக்பரின் கீழ் பணியாற்றும்போது, பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக எழுதியிருந்தார். இவரைத் தொடர்ந்து பலரும் எம்.ஜே.அக்பரால் பாதிக்கப்பட்டதாகத் தங்களின் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, எதிர்ப்புகள் அதிகரிக்கவே கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பத்திரிகையாளர் பிரியா ரமணியின் குற்றச்சாட்டால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பதாக, கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 2019, ஜனவரி மாதம் பிரியா ரமணிக்கு சம்மன் அனுப்பியது. வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இந்த வழக்கு, 2019, மே மாதம் டெல்லி முதன்மைப் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2019, நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்துவந்த ரோஸ் அவென்யு நீதிமன்ற நீதிபதி விஷால் பூஜா மாற்றப்பட்டு, அவருக்கு பதில் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே நியமிக்கப்பட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இரண்டு தரப்பினரும், தங்களின் இறுதி வாதத்தை முன்வைக்கும்போது, பிரியா ரமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், ``எனது கட்சிக்காரர் பொதுநல நோக்கத்திலேயே எம்.ஜே.அக்பர் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். எம்.ஜே.அக்பர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீதா லூத்ரா, `பிரியா ரமணியின் ட்வீட் மூலம் எனது கட்சிக்காரரின் நன்மதிப்புக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரியா ரமணியின் கட்டுரை புனையப்பட்டது, உண்மையற்றது மற்றும் உள்நோக்கம்கொண்டது" என்ற வாதத்தை முன்வைத்தார்.
பிப்ரவரி 1-ம் தேதி இந்த வழக்கின் இரண்டு தரப்பு வாதங்களும் கேட்டு முடிக்கப்பட்டு, நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே பிப்ரவரி 10- தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். பிப்ரவரி 10-ம் தேதி எம்.ஜே.அக்பர் தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்படாத நிலையில், தீர்ப்பு நேற்று (பிப்ரவரி 17-ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்று மதியம் மூன்று வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எம்.ஜே.அக்பர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே, ``ஒருவரின் மதிப்பைப் பாதுகாப்பதற்கு, இன்னொருவரின் மதிப்பை விலையாகக் கொடுக்க முடியாது. பாலியல் தொந்தரவு என்பது ஒருவரின் தன்னம்பிக்கையைக் குலைக்கக்கூடியது. பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்களின் பாதிப்பை இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தங்களின் குறைகளை முன்வைக்கவும், புகார் தெரிவிக்கவும் பெண்களுக்கு உரிமை உண்டு" என்று தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும், ``இந்த வழக்கில் பிரியா ரமணி அவதூறு பரப்பியதற்கான குற்றச்சாட்டை மனுதாரர் நிரூபிக்கவில்லை. இந்தச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட மாட்டார் என்று சொல்லிவிட முடியாது. இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய இரண்டு தரப்பினருக்கும் உரிமை உண்டு" என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என்றும், பிரியா ரமணி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு பெண் செயற்பாட்டாளர்களும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடிவருகிறார்கள். தீர்ப்புக்குப் பிறகு பேசிய பிரியா ரமணி, ``பாலியால் சீண்டலுக்கு ஆளானதாகப் புகார் தெரிவித்த நான் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன். இந்தத் தீர்ப்பு, பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை வெளிப்படையாகப் பேசுவதற்கான வாய்ப்பைத் தரும். இந்த வழக்கில் எனக்காகச் சாட்சி சொல்ல முன்வந்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருந்தார்.
பிரியா ரமணி சார்பில் இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், `` அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராகப் போராடும்போது பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அது போன்ற சம்பவம் இந்த வழக்கிலும் நடந்தது. அனைத்துத் தடைகளையும் மீறி இந்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது. என் வாழ்நாளில் பெரும் வழக்காக இந்த வழக்கைக் கருதுகிறேன்" என்று கூறினார்.
இந்த வழக்கில் தீர்ப்பு குறித்து பாடகி சின்மயி, ``நான் இந்திய நீதிமன்றங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரியா ரமணியின் இந்த போராட்டம் நம் அனைவருக்குமானது, நமது குழந்தைகளுக்கானது. அவள் என் ஹீரோ. எங்கள் ஹீரோ" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலரும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடியும், பிரியா ரமணியைப் பாராட்டியும்வருகிறார்கள்.