Published:Updated:

`இதயம் சென்னையில் துடிக்கிறது; கண்கள் வேலூரைப் பார்க்கிறது!’ - 6 பேர் உடலில் வாழும் சிறுவன்

சுதீஷ்

அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மகன் நின்றிருந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒரு சிறுவன் மீது டூவீலர் மோதிவிட்டதாகவும், சிறுவன் பிழைக்க மாட்டான் என்றும் கூடியிருந்த மக்கள் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தனர்.

`இதயம் சென்னையில் துடிக்கிறது; கண்கள் வேலூரைப் பார்க்கிறது!’ - 6 பேர் உடலில் வாழும் சிறுவன்

அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மகன் நின்றிருந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒரு சிறுவன் மீது டூவீலர் மோதிவிட்டதாகவும், சிறுவன் பிழைக்க மாட்டான் என்றும் கூடியிருந்த மக்கள் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தனர்.

Published:Updated:
சுதீஷ்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் - அர்ச்சனா. இந்தத் தம்பதிக்கு 11 வயதில் சுதீஷ், 10 வயதில் கோகுல், 7 வயதில் ரோஹித் என மூன்று மகன்கள். மூத்த மகன் சுதீஷ் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்துவந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஜோலார்பேட்டை அருகேயுள்ள பகுதிக்கு சுதீஷை மட்டும் தன்னுடன் பேருந்தில் அழைத்துச் சென்றார் கோவிந்தராஜ். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக அங்கிருக்கும் பிரதான சாலையோரம் பேருந்துக்காக தந்தையும், மகனும் காத்திருந்தனர். அந்த சமயம், பக்கத்திலிருந்த கழிவறையில் சிறுநீர் கழிப்பதற்காக, மகனை ஓரமாக நிற்க வைத்துவிட்டு சென்றார் கோவிந்தராஜ். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மகன் நின்றிருந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒரு சிறுவன் மீது டூவீலர் மோதிவிட்டதாகவும், சிறுவன் பிழைக்க மாட்டான் என்றும் கூடியிருந்த மக்கள் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தனர். கோவிந்தராஜ் உடனே தன் மகனை அங்கும் இங்குமாக தேடிப் பார்த்தார். காணவில்லை.

சுதீஷ்
சுதீஷ்

கூட்டத்துக்கு நடுவே ரத்த வெள்ளத்தில் துடித்தபடி கிடந்த சிறுவனை ஆட்டோவில் தூக்கிப்போட்டுக் கொண்டு சிலர் மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். அவர்கள் தூக்கிச்செல்லும்போது தலை தொங்கிய நிலையில் இருந்தது. அப்போது முகத்தைப் பார்த்த கோவிந்தராஜ் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அது, அவரின் மகன் சுதீஷ். அவர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிமிடத்துக்குள், ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது.

அங்கிருந்த ஒரு நபரிடம், ‘சார், அது என் பையன். நான் இந்த ஊர் இல்ல. அந்த ஆட்டோ எங்க போகுதோ... அங்க என்ன கொஞ்சம் தயவு செஞ்சுவிட்டுடுங்க’ என்று கூறினார். டூ வீலரில் லிஃப்ட் கொடுத்து ஏற்றிச்சென்ற நபர், அவரை நாட்றம்பள்ளி அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் விட்டிருக்கிறார். அந்த மருத்துவமனையில்தான் சிறுவன் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். உள்ளே ஓடிச்சென்ற கோவிந்தராஜ் மகனின் உடலை கட்டித்தழுவி கதறி அழுதார். உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பிவைக்கப்பட்டான். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலையில் கொஞ்சம்கூட முன்னேற்றமில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரியிலிருந்து வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான சி.எம்.சி-க்கு மகனை தூக்கிவந்து அனுமதித்தார் கோவிந்தராஜ். சி.எம்.சி மருத்துவக்குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையும் பலனிக்காத நிலையில்,நேற்று முன்தினம் சிறுவனின் மூளை செயல் இழந்துபோனது.

`இதயம் சென்னையில் துடிக்கிறது; கண்கள் வேலூரைப் பார்க்கிறது!’ - 6 பேர் உடலில் வாழும் சிறுவன்

இதையடுத்து, சூழலை உணர்ந்த பெற்றோர், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து பிறரை வாழவைக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, சிறுவனின் இதயம், நுரையீரல் சென்னையிலிருக்கும் எம்.ஜி.எம்., அப்போலோ மருத்துவமனைகளுக்கும், சிறுவனின் கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள் சி.எம்.சி மருத்துவமனை பயனாளிகளுக்கும், வலது சிறுநீரகம் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றிருக்கிறார்கள். ‘‘எங்கள் மகன் மறைந்தாலும் இவர்கள் மூலம் இன்னும் 100 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பான்’’ என்று கதறித் துடிக்கின்றனர் பெற்றோர்.

உடல் உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றைய தினம் சிறுவனின் உடலுக்கு சடங்குகள் செய்து, எரியூட்டினர்.

சுதீஷ்
சுதீஷ்

மகனை இழந்த அதிர்ச்சியிலிருந்து கோவிந்தராஜ் குடும்பத்தினர் இன்னும் மீளவில்லை. அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, கோவிந்தராஜிடம் நடந்தது குறித்துக் கேட்டோம்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘என் புள்ள ஓரமாதான் நின்னுட்டு இருந்தான். இப்படி ஆகும்னு கனவுலகூட நாங்க நெனச்சு பார்த்ததில்ல. தவமா தவமிருந்து பெத்த... முதல் புள்ள அவன். டூவீலர் மோதுன அதிர்ச்சியில பையன் மூச்சி பேச்சியில்லாம போய்ட்டான். சின்னக் காயம் பட்டாலே தாங்க மாட்டான். தலையில அவ்ளோ ரத்தம் போயிடுச்சி. குழந்தை துடிச்சி துடிச்சி கடைசியில சுயநினைவில்லாம கிடந்தான்.

எப்போமே துறுதுறுனு விளையாடுற புள்ள சுதீஷ். ஆனா, கண்ணுல எதைப் பார்க்கிறானோ அதை அப்படியே வரைஞ்சிடுவான். இன்னைக்கு கண்ணையே தானமா கொடுத்திருக்கான். வீட்டுல எலெக்ட்ரானிக் பொருள்கள் ரிப்பேர்னா, அவனே சரி பண்ணிடுவான். இந்த வயசுலயே சீலிங் பேனை கழட்டி மாட்டுவான். நல்ல திறமைசாலி.

எனக்கு சொந்த பந்தம் கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பா உடல்நிலை சரியில்லாம இறந்துட்டாரு. அப்புறம் மனவளர்ச்சி சரியில்லாம இருந்த என் தம்பி விபத்துல சிக்கி இறந்துட்டான். அதுக்கு அப்புறம் என் பாட்டி காலமாகிட்டாங்க. இப்ப என் புள்ளையும் என்னை விட்டுட்டுப் போய்ட்டான். என் ஆயுள் முடிஞ்சிருந்தா கூட சந்தோஷமா போயிருப்பேன். அது, குழந்தை. கடவுளுக்கு இரக்கமே இல்லையா?

நான் சின்ன வயசுலருந்து ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தவன். ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம வயித்துல ஈரத்துணிய கட்டிக்கிட்டு படுத்த காலமெல்லாம் கடந்துவந்தேன். என் புள்ளைங்க அப்படி கஷ்டப்படக்கூடாது, எனக்கு கிடைக்காத எல்லாமே என் புள்ளைங்களுக்குக் கிடைக்கணும்னு நைட்டும் பகலும் கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, குழந்தையோட உயிர் இப்படி அநியாயமா போகும்னு கனவுலகூட நானும் என் பொண்டாட்டியும் நெனச்சுப் பார்க்கல.

அந்தப் பிஞ்சு உடலுக்கு என் கையாலேயே கொள்ளி வெச்சத நெனச்சாலே சாப்பிட முடியல. அவன் ஓடி, ஆடி விளையாண்ட இந்த வீட்டுல, இன்னைக்கு அவன் சாம்பல்தான் வைக்கப்பட்டிருக்கு. ஆனாலும் ஒரு நிம்மதி கிடைச்சிருக்கு. என் புள்ளையோட இதயம் சென்னையில் இருக்கிற ஒருத்தர் உடம்புல துடிக்குது; கண்கள் ரெண்டும் வேலூர்ல இருக்கிற யாரோருக்கோ பார்வைய கொடுத்திருக்குது; இப்படி 6 பேர் உடம்புல என் பையன் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கான்’’ என்றார் அடர் துயரத்துடன்.

சுதீஷ் வாழ்கிறான்.