Published:Updated:

''அந்த வன்கொடுமை என் குழந்தையை அமைதியாக்கிவிட்டது!” - ஒரு தாயின் வலி மிக்கப் பகிர்வு

''அந்த வன்கொடுமை என் குழந்தையை அமைதியாக்கிவிட்டது!” - ஒரு தாயின் வலி மிக்கப் பகிர்வு
''அந்த வன்கொடுமை என் குழந்தையை அமைதியாக்கிவிட்டது!” - ஒரு தாயின் வலி மிக்கப் பகிர்வு

''அந்த வன்கொடுமை என் குழந்தையை அமைதியாக்கிவிட்டது!” - ஒரு தாயின் வலி மிக்கப் பகிர்வு

28 ஜனவரி 2018. எந்த வார இறுதியையும்போல ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் சுட்கியின் அம்மாவும் அப்பாவும் சுட்கியையும் அவளுடைய அக்காவையும் தங்களது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் உறவினர்களிடம் பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார்கள். சுட்கி எட்டு மாதக் குழந்தை என்பதால், வீட்டிலேயே அவளைத் தூங்கவைத்துவிட்டு வேலைக்குக் கிளம்பினார் அவளது தாய். ஆனால், அவள் திரும்பி வரும்போது ரத்த வெள்ளத்தில் கிடந்தது அந்தக் குழந்தை!

''நான் எங்கள் வீடு இருக்கும் டெல்லி சுபாஷ் நகர் பகுதிக்கு அருகிலேயே வீட்டு வேலை செய்கிறேன். வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபோது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டின் மாடியில் இருக்கும் எங்கள் உறவினர் சுராஜ், ‘சித்தி... எங்கே போய்விட்டீர்கள் உங்கள் குழந்தை அழுதுகொண்டிருக்கிறது’ என்று ஓடிவந்து சொன்னான். குழந்தை அழுவதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிடப் போகிறது? ஒரு தாயாகக் குழந்தை அழவேயில்லை என்றால்தானே கவலைப்படவேண்டும். இருந்தும் அவன் அவசரமாக வந்து சொன்னதால், ஓடிச் சென்று பார்த்தேன். வீட்டு வாசலில் முதல் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தாள். சுட்கியின் அழுகுரல் மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. 

'ஒருவேளை அவள் சிறுநீர் கழித்திருக்கக் கூடும். அதனால்தான் அழுகிறாள்' என்று அவளது உள்ளாடையை மாற்றிவிடுவதற்காகக் கழற்றினேன். ஆனால், அப்போது நான் கண்டது எந்த ஒரு தாய்க்கும் நேரக் கூடாது. எனது குழந்தையின் பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அவள் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். 'அய்யோ! நான் என்ன செய்வேன்? என் குழந்தையை யார் என்ன செய்தார்கள்?' என்று அரற்றியபடியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மாடியில் இருக்கும் சுராஜின் வீட்டுக்கு ஓடினேன். சுராஜ் எங்களுக்கு உறவுமுறை. ஒரு குழந்தைக்குத் தகப்பனும் கூட. 'என் குழந்தையை யார் இப்படிச் செய்தது...' என்று சுராஜிடம் கேட்டேன்... பதில் இல்லை. ஆனால், சுராஜின் அம்மா முந்திக் கொண்டு... 'உன் குழந்தையை எதற்காகத் தனியாக விட்டுச் சென்றாய்?' என்று என்னைக் கேள்வி எழுப்பி என்மீது குற்றம் சாட்டினார்கள். 

நடந்த விவரம் அறிந்த போலீஸ் சந்தேகத்தின் பேரில் சுராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றது. நானும் கணவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினோம். குழந்தையின் பிறப்புறுப்பும் ஆசனவாயும் கிழிந்திருக்கிறது என்றார்கள் மருத்துவர்கள். பாவம்! அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும்? அவள் எப்படித் துடித்திருப்பாள்? போலீஸ் முதலில் கேட்டதற்கு தான் எதுவும் செய்யவில்லை என்று சுராஜ் மறுத்தான். பிறகு, குடிபோதையில் அப்படிச் செய்துவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான். ஆனால், நான் பார்க்கும்போது அவன் குடிபோதையில் இல்லை. தெளிவாகவே இருந்தான். சுராஜுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. பிறகு எப்படி என் குழந்தைக்கு இப்படிச் செய்ய மனது வந்தது?” என்று கண்ணீர் தீராமல் அழுதுக் கதறுகிறார் சுட்கியின் தாய்.

தனியார் மருத்துவமனையின் அறிவுரைக்கு இணங்க சுட்கியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். தற்போது அந்த எட்டு மாதக் குழந்தைக்கு இரண்டு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் உறுப்புகள் சிதைந்திருப்பதால் அந்தச் சின்னக் குழந்தைக்குச் சிறுநீரும் மலமும் ஒரே துவாரத்தின் வழியாகவே தற்போது வெளியேறுகிறது. காயம் ஆறியபிறகு மட்டுமே மேலும் ஓர் அறுவைசிகிச்சை வழியாக இதனைச் சரிசெய்ய முடியும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். 

ஆனால், இந்தச் சம்பவத்தால் சுட்கியின் பெற்றோர் நிலைகுலைந்துவிடவில்லை. “அவள் வளர்ந்து பெரிய பெண்ணானதும் தனக்கு நிகழ்ந்தது பற்றி எப்படியும் அவளுக்குத் தெரியவரும். நாங்கள் சொல்லாமல் விட்டால்கூட அவளுக்கு எப்படியேனும் தெரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது அவளது வாழ்க்கையை எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது. வளர்ந்து நன்கு படித்து சுதந்திரமாக அவள் வாழ வேண்டும்!” என்கிறார்  குழந்தையின் தந்தை. 

சுட்கியைப் பார்த்துக்கொள்வதற்காக தான் பார்த்துவந்த வீட்டுவேலையை தற்போது விட்டுவிட்டார் சுட்கியின் தாய். “இனி உறவினர்களை நாங்கள் எப்படி நம்ப முடியும்? முன்பு நான் எது ஊட்டிவிட்டாலும் மறுக்காமல் என் குழந்தை சாப்பிடுவாள். தற்போது அவள் எதுவுமே சாப்பிடுவதில்லை. அப்பாவிடம்கூடச் செல்வதில்லை. எட்டுமாதக் குழந்தை என்பதால், சிரிப்பாள், அழுவாள் அல்லது 'ஆ’ 'ஊ’ என்று செய்கையாவது காட்டுவாள். ஆனால், தற்போது அவளிடம் எந்தச் சலனமும் இல்லை. அமைதியாகிவிட்டாள். அந்த வன்முறை அவளை அமைதியாக்கிவிட்டது”  என்கிறார்.

காயங்கள் பொரிதட்டி வடுக்களாகி தழும்பென மறைந்துவிடும்தான்... ஆனால், வலி அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பிலேயே மரத்துப்போய் கிடக்குமே.... அதற்கான தீர்வுதான் என்ன?

அடுத்த கட்டுரைக்கு