Published:Updated:

"என் குழந்தையின் மரணத்துக்காகக் காத்திருக்கிறேன்!" ஒரு தலைமுறையை இழந்த சிரியாவின் கதை #SaveSyria

"என் குழந்தையின் மரணத்துக்காகக் காத்திருக்கிறேன்!" ஒரு தலைமுறையை இழந்த சிரியாவின் கதை #SaveSyria
"என் குழந்தையின் மரணத்துக்காகக் காத்திருக்கிறேன்!" ஒரு தலைமுறையை இழந்த சிரியாவின் கதை #SaveSyria

சிரியாவைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. நாள்தோறுமா என யோசிக்க ஆரம்பித்தால். சில மாதங்களாக என்று தோன்றுகிறது. ஏன் சில ஆண்டுகள் என்று கூட சொல்லலாம். ஒவ்வொருமுறையும் #SaveSyria, #SaveHumanity ஹேஷ்டேக்குகள் இணையத்தில் வளம் வருகின்றன.

இனி, நீங்கள் படிக்கப்போவது ஒன்றும் அவ்வளவு மோசமானது அல்ல; ரணமானது அல்ல; கனத்த இதயத்தைக் கொண்டோர் மட்டுமே படிக்க வேண்டியது அல்ல. காரணம் சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதென்பது நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கான பெருஞ்சோகம். அவர்களைக் காக்க அரசு இல்லை என்கிறீர்களா?. அதை நிகழ்த்துவதே அரசுதான். இன்று நிம்மதியாய் இறந்துவிடுவேனா என்கிற ஊர்ஜினமில்லாத வாழ்வு. வாழ்வதென்பது உலகெங்கும் கொடுமைதான். அதனினும் கொடுமை, நிச்சயமற்ற வாழ்வு.  அதுதான் சிரியாவில் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும், குரூரமாக ஓர் உயிர் பறிபோகின்றது.  அப்படி இந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்துவிட்டன. எந்த இறைவனும் அவர்களை காக்க முன்வருவதில்லை. இறைவன் ஒருவன் இருந்தால், அவர்கள் வேண்டுவது எல்லாம் ஒரு ஷணத்தில் நிகழும் நிம்மதியான மரணம் மட்டுமே. இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிமிடம் கூட அங்கு கொலைகள் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கலாம். 

'என் குழந்தையின் மரணத்துக்காகக் காத்திருக்கிறேன்; அப்படி அவன் இறந்துவிட்டால் இந்த வலிகளிலிருந்து தப்பித்துக்கொள்வான். பசி என அழுதுகொண்டிருந்த அவனுக்குச் சமைத்துக்கொண்டிருந்தேன். சமையல் முடிவதற்குள் இப்படிக் காயம்பட்டுக்கிடக்கிறான். அவன் சீக்கிரம் சாகட்டும். செத்தால் நிச்சயம் சொர்க்கத்துக்குத்தான் செல்வான். அங்கே அவனுக்கு நல்ல உணவு கிடைக்கும்' என்று குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடக்கும் மகனைப் பார்த்து அழுகிறாள் தாயொருத்தி. அந்தக் குழந்தையின் நிலையைப் பார்த்து, 'காயம்பட்டுள்ள இவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்றே தெரியவில்லை' என மருத்துவர் ஆற்றாமையில் புலம்புகிறார். 

குண்டு வீச்சினால் தகர்க்கப்பட்ட வீடுகளும், புகை மூட்டத்துக்கு நடுவே அழுதுகொண்டே நடந்தவற்றை விவரிக்கும் குழந்தைகளும் என சிரியாவிலிருந்து வெளியிடப்படும் வீடியோக்கள் அங்கு மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவினைக்’ காட்டுகின்றன.இதைச் செய்வது மனிதர்கள் தானா என்ற கேள்வியும் ஒவ்வொரு முறையும் எழுகிறது. ஒரு குழந்தை குண்டுவெடிப்பு நிகழும் போது, உயிரினைப் பாதுகாத்துக்கொள்ள, வீட்டுக்கு அடியில்போய் எப்படி அமர்ந்துகொள்வேன் என்று தன் அழுகைக்கு நடுவே விவரிக்கிறது. நம் நாட்டில், சாலையில் செல்லும்போது லாரி எதிரே வந்தால், இந்தப் பக்கம் கையினைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல, குண்டு வீசப்பட்டால், இப்படி ஒளிந்துகொள்ள வேண்டும்; துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் இப்படி ஓட வேண்டும் என்று சிரியாவில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

சமூக வலைதளத்தில் கடந்த சில நாள்களாகப் பரப்பப்பட்டு வரும் இந்த வீடியோக்கள், “This video contains disturbing scenes” என்று தொடக்கத்திலேயே உள்ளிருக்கும் குரூரத்தைப் பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கின்றன. முதல் முறை இந்த எச்சரிக்கையை மீறி பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள், இரண்டாம் முறை இந்த எச்சரிக்கையைப் பார்த்து, பதற்றத்துடன் பார்க்காமல் சென்றுவிடுகின்றனர். காரணம், அதிலிருக்கும் உண்மையை நம் மனம் ஏற்க மறுகிறது. அந்தக் குழந்தைகளின் கண்களில் நிரம்பியிருக்கும் வெகுளித்தனத்தில், நம் வீட்டுக் குழந்தைகளைப் பார்க்கிறோம். அந்தக் காணொளிகள் ஏற்படுத்தும் ஆற்றாமை, மனதை நிம்மதியழக்கச் செய்கின்றன.

சிரியாவின் கௌட்டா பகுதியில், சிரிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பொழிந்துவரும் குண்டு மழையினால் கொல்லப்பட்ட 500 பேரில் 121 பேர் குழந்தைகள் எனச் சுட்டுகிறது செய்தி நாளேடுகள். அதன் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. 2013 - ம் ஆண்டு ஆகஸ்ட்டில், ஓர் அறை முழுக்க, உடலில் எந்தக் காயமும் இல்லாத குழந்தைகள் இறந்துகிடக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இரசாயன குண்டு வீசப்பட்டதுதான் அந்தக் குழந்தைகளின் இறப்புக்கான காரணம்.

”கிட்டத்தட்ட 2011 - ம் தொடங்கி இன்றுவரை தொடரும் சிரியப் போரில் 14,000 -த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போர் தொடங்கியது முதல், இரண்டு வருடங்களுக்கு கொல்லப்பட்டவர்களில் 9 சதவிகிதமாகயிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2013 -க்குப் பிறகு, கொல்லப்பட்டவர்களில் நான்கில் ஒருவர், ஒரு குழந்தை என்கிற மோசமான எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது” என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கடந்த பல வருடங்களாக மிகத் தீவிரமாக சிரியா உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளில் மாற்றி மாற்றி வீசப்பட்ட குண்டுகளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். அந்தக் குண்டுகளில் ரசாயனக் குண்டுகளும் அடக்கம். ஆனால், இதற்கு காரணம் சிரியா மட்டும்தானா?

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒழிக்க அமேரிக்கா ஏவிய குண்டுகள் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் வீசிய குண்டுகளின் எண்ணிக்கை முறையே 30,743 மற்றும் 32,801 என்கிறது ஒரு புள்ளிவிவரம். கடந்த வருடம் சிரியாவில் தனது 400 தளவாடங்களை இறக்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்கா ஏன் இத்தனை குண்டுகளை வீச வேண்டும் என்பதையும் அவற்றில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முதலில், மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் அடிப்படைப் பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிரியா மட்டுமல்ல மொத்த மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் சண்டையுமே இடியாப்பச் சிக்கல்

சிரியாவில் 2011 -ம் ஆண்டு அதிபராக இருந்த அஸ்ஸாதிற்கு எதிராக திரண்ட மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, அஸ்ஸாதின் படை. அஸ்ஸாதின் ஆயுதத்தை கையில் எடுத்தது ஒரு குழு. இந்தக் குழுவினை கல்ஃப் நாடுகளும், இன்னும் பல குழுக்களும் ஆதரிக்க, அல்-கொய்தாவும் சிரியாவில் ஒரு கிளையினை ஏற்படுத்தியது. ஈரான் ஒரு புறம் அஸ்ஸாதினை ஆதரிக்க, ஈரானைப் பிடிக்காத கல்ஃப் நாடுகள், ஈரானின் செல்வாக்கினை தடுப்பதற்காக, துருக்கி வழியாக கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், பணத்தையும் வழங்கத் தொடங்கியது.

ஈரான், லெபனானைச் (வடக்கில் சிரியாவையும், தெற்கில் இஸ்ரேலையும் கொண்ட நாடு) சேர்ந்த ஒரு கிளர்ச்சிக் குழுவை சிரியாவின் அஸ்ஸாதை ஆதரிக்க அனுப்பியது. இதனால், கோபமடைந்த கல்ஃப் நாடுகளின் சவுதி அரேபியா நேரடியாக ஜோர்டனின் மூலம், கிளர்ச்சியாளர்கள் குழுவை இன்னும் அதிகப் பணம் மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து ஆதரிக்கத் தொடங்கியது.

இதற்கு நடுவே அமெரிக்கா (ஒபாமா அதிபராக இருந்தபோது) சிஐஏவின் மூலம், ரகசியமாக சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்குப் பணத்தையும் பயிற்சியையும் வழங்கியது. இன்னொரு புறம் அடிப்படைவாதிகள் குழுக்களுக்குப் பணம் வழங்குவதை நிறுத்தச்சொல்லி கல்ஃப் நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது. இதற்கு நடுவே ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்ட குர்திஸ் தேசிய இன மக்கள், அவர்களுக்கான விடுதலைக்கான போராட்டத்தை தொடங்குகிறது. (அதில் சிரியாவில் இருக்கும் ஒரு பகுதி தனியாகவே தற்போது இயங்கி வருகிறது). 2013 - ம் ஆண்டு அஸ்ஸாத் அரசு  இரசாயன குண்டுகளைப் பயன்படுத்தினால், அமெரிக்கா நேரடியான தாக்குதலை நடத்தும் என எச்சரித்தது.

ரஷ்யாவும் அமெரிக்காவின் தலையீட்டினை முறிப்பதற்காக, ஈரானிடமிருந்த இரசாயன குண்டுகளை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்குமாறு கூறியது. சிஐஏ வினால் பயிற்றுவிக்கப்பட்ட முதல் குழு சிரியாவை இந்த நேரத்தில் வந்தடைந்தது. கிளர்ச்சியாளர்களுக்கு நடுவே எழுந்த சில முரண்பாடுகளால், பெரும்பாலும் ஈராக்கினை அடிப்படையாகக் கொண்ட அல்-கொய்தாவுடன் இயங்கி வந்த ஒரு குழு தனியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது. அது அல்-கொய்தாவின் எதிரியாக மாறுகிறது. 2014 - ல், அஸ்ஸாதுக்கு எதிராக சிரியாவில் குண்டுவீசிய அமெரிக்கா, மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டும் சிஐஏ மூலமாகப் பயிற்சி வழங்குகிறது. குர்திஸ் போராளிகள் ஏற்கெனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்ப்பவர்களாக இருந்தாலும், 2015ல் துருக்கி குர்திஸ் போராளிகளுக்கு எதிராக குண்டுகளை வீசத் தொடங்குகிறது. அமெரிக்காவின் அலையென்ஸில் இருந்தாலும், துருக்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான குண்டுகளை வீசவில்லை. ஐஎஸ்ஐஎஸினை எதிர்ப்பதாகச் சொல்லி சிரியாவில் நேரடியான தக்குதலை ரஷ்யா தொடுக்கிறது. ஆனாலும், பெரும்பாலும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் கிளர்ச்சியாளர் குழுக்களையே இலக்காக வைத்து செயல்படுகிறது. 2016 ல் ட்ரம்ப் அதிபராக, சிரியாவிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்று கூற, இன்னொரு பக்கம் கிளர்ச்சியாளர்கள் மிகவும் வலிமையாக இருந்த அலெப்போ, சிரியா-ரஷ்யாவின் கூட்டணியில் இவர்களுக்குக் கிடைக்கிறது. 2017 ல் மீண்டும் அஸ்ஸாத் அரசு இரசாயன குண்டுகளைப் பயன்படுத்துவதாகச் செய்திகள் வர, சிரியா பற்றிய தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்வதாக ட்ரம்ப் அறிவிக்க, அஸ்ஸாதுக்கு எதிராக முதல் முறையாக நேரடியாக ஏவுகணைகளை ஏவுகிறது அமெரிக்கா.

இப்படி ஒரு புறம் சிரிய அரசு மற்றும் அதனை ஆதரிக்கும் ரஷ்யா, மற்றொரு புறம் சிரியாவை எதிர்க்கும் அமெரிக்கா, அமெரிக்காவினால் ஆதரிக்கப்படும் கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள், முன்னாள் அல்லது தற்போதும் கூட மறைமுகமாக அமெரிக்காவால் ஆதரிக்கப்படுவதாகச் சொல்லப்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, இவர்கள் எல்லோரையும் எதிர்க்கும் குர்திஸ் போராளிகள் என்று இது ஒரு பெரிய சண்டை.

ஆனாலும், ஊடகங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் கைகளில் இருப்பதால், அமெரிக்கா வீசிய குண்டுகளினால் இறந்த, பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பெரும்பாலும் வெளியிடப்படாது. அதே நேரத்தில், சிரிய அரசு போடும் குண்டுகளை வைத்து, உலகம் முழுக்க சிரிய அரசினை மட்டுமே காரணம் காட்டி, பட்சாதாபத்தை ஏற்படுத்தி, தான் தப்பிக்க நினைக்கிறது அமெரிக்கா. இங்கு நிச்சயமாக சிரிய அரசினை யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால், அந்தக் குழந்தைகளின் குருதிக்கறை அமெரிக்காவின் கைகளிலும் படிந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சிரியாவின் கௌடா பகுதியில் ஐந்து மணிநேரம் எந்தக் குண்டுகளும் வீசப்படாது என்று ரஷ்யாவின் அதிபர் அறிவித்திருக்கிறார். வெறும் ஐந்து மணிநேரம் நீங்கள் உயிர் பயத்திலிருக்கத் தேவையில்லை என்று ‘கெடு’வினை வாரி வழங்கியிருக்கிறார்கள். எவ்வளவு கருணை?!

ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது, இலங்கையை ரஷ்யாவும், அமெரிக்காவும் ஆதரித்தது என்பது இங்கு நாம் நினைவு கூறவேண்டியது. அதாவது, வல்லரசுகளுக்கு நடுவே நடக்கும் வளங்கள் மற்றும் ஆதிக்கத்திற்கான போட்டிகளுக்காகத்தான் உலகம் முழுக்க அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இனப்படுகொலையை, அதுவும் அடிப்படைத் தொடர்புள்ள ஓர் இனம் அழிக்கப்படுவதை அருகிலிருந்து பார்க்கும் சாபம் பெற்றவர்களாகிய நமக்கு உலகில் எங்கு மக்கள் கொல்லப்பட்டலும், கனெக்ட் ஆகி மனம் வருந்துவது இயல்புதான். ஆனால், ’அந்த மக்கள் யாராலும் கொல்லப்படக் கூடாது; அந்த மக்களின் நிலம் அதன் வளமும் அந்த மக்களுக்கே சொந்தம்; ரஷ்யாவும் அமெரிக்காவும் ஏன் சிரியாவுமே கூட அதனை சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

சிரியா கிட்டத்தட்ட ஒரு தலைமுறை குழந்தைகளை குண்டுகளுக்கும், போரினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் பலி கொடுத்திருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு ஓர் இயல்பான ‘குழந்தைப் பருவம்’ என்றால் என்ன என்றே தெரியாமல், அந்தச் சூழலிலேயே வளர்ந்திருக்கிறார்கள். இந்தப் போரினில் தப்பித்து அகதியாகப் பயணப்படும் குழந்தைகள் அனுவிக்கும் சமூக, மன அளவிலான பிரச்னைகள் என்பது தனிக்கதை. 

தற்போது வரை மொத்தப் நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பகுதி உருக்குலைந்திருக்கும் சிரியாவினை மீட்டுருவாக்கம் செய்ய 180 பில்லியன் செலவாகும் என்று கணக்குச் சொல்கிறது உலக வங்கி. போரினால் உயிரிழந்திருக்கும், தன்னுடைய மொத்தக் குழந்தைப் பருவத்தையும், பால்யத்தையும் இழந்திருக்கும் குழந்தைகள், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை என்று சொந்தங்களை இழந்திருக்கு குடும்பங்களை எப்படி மீட்டுருவாக்கம் செய்ய முடியும்?

எப்பொழுதும் ஏதோ ஒரு மூலையில்

யுத்தம் நடந்துகொண்டேயிருக்கிறது

எங்காவது குழந்தைகள் அஞ்சி பதுங்கியிருக்கிறார்கள்

ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில் குழந்தைகளை ஒளித்திருக்கின்றனர்

ஆப்கானிஸ்தானில் எறியப்பட்ட குண்டுகள்

ஆறாதிருக்கின்றன

அமெரிக்கப் படைகள் உலகம் எங்கும் நிறைகின்றன

எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி

அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்

அவர்கள் எதையோ பெறுவதற்காகவும்

எதையோ நிகழ்த்துவதற்காகவும்

புன்னகை மிகுந்தபடி கூடுகிறார்கள்

எல்லோருமே யுத்தக் குற்றவாளிகளாக இருப்பதை

தந்திரமாக மூடுகிறார்கள்

குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்

ஈழக் கவிஞர் தீபச் செல்வனின் ’யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல்’ கவிதையிலிருந்து சில வரிகள்

அடுத்த கட்டுரைக்கு