Published:Updated:

“அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 3 

“அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 3 
News
“அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 3 

“அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 3 

குறும்பு என்பது எல்லாக் குழந்தைகளிடமும் சிறுவயது முதலே இருக்கும். சிறுமி ஹாசினியிடமும் அதே குறும்பு இருந்திருக்கிறது. தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தன் அப்பாவிடம் குறும்பு செய்வதே ஹாசினியின் வழக்கமாக இருந்திருக்கிறது. அவள், தன் தந்தையைச் செல்லமாய் அடிப்பதும், உதைப்பதும், குத்துவதும், ஆசையாய்க் கிள்ளுவதும் அவளின் குறும்புகளில் அடங்குபவை. இதுபோன்ற குறும்புகள் ஹாசினியிடம் கணக்கில்லாமல் இருந்திருக்கிறது. 

அவளின் குறும்புகள் குறித்து அவளுடைய தந்தை, “தினமும் பள்ளிவிட்டு வந்ததும், அப்படியே ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாள்; முத்தம் கொடுப்பாள்; அப்புறம் என் கன்னத்தில் செல்லமாய்த் தட்டுவாள்; வயிற்றில் ஓங்கிக் குத்துவாள். என் தோள்மீது ஏறிக்கொண்டு, என்னைச் சுற்றிவரச் சொல்வாள்; கதை சொல்லச் சொல்வாள். இவற்றையெல்லாம் அவள் செய்யும்போது எனக்குக் கோபமே வராது. அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் போவதே தெரியாது. இப்போது அந்த நினைவுகள்தான் என் கண்ணுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் கண்ணீருடன். 

மேலும் அவர், “ஒருமுறை அவளைக் கோபப்பட்டுத் திட்டிவிட்டேன். அதற்கு அவளின் முகம் வாடிவிட்டது. அதிலிருந்து அவளிடம் கோபமே பட்டது கிடையாது” என்றார் கண்ணீரைத் துடைத்தபடி. குழந்தைகள் அழும்போது எதையாவது தருகிறேன் என்று சொல்லி, அந்த நேரத்துக்குக் குழந்தையைச் சமாதானப்படுத்திவிட்டால் போதும்... அவர்களும், அடுத்த நொடி பழையதை எல்லாம் மறந்துவிடுவார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஹாசினிக்கும் ஏதாவது ஒரு கதை சொல்லி அவளை மகிழ வைத்திருக்கிறார் தந்தை. அதையே மனதில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட ஹாசினி, தினமும் அவள் தந்தையிடம் கதை சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறாள். குழந்தைகளுக்கு கதை என்றால் பிடிக்கும்தானே? அதைத்தான் ஹாசினியும் தந்தையிடம் கேட்டிருக்கிறாள். அவரும், தினமும் கதை சொல்லியிருக்கிறார். அவருக்குப் பிடித்த கதை ஒன்றையே அவர்  திரும்பத்திரும்பச் சொல்ல... அதனால் வெறுப்புற்றிருக்கிறாள் ஹாசினி

இதனால் வெறுப்புக்குள்ளான அவள், “என்னப்பா... தெனமும் இதே கதையச் சொல்ற? உனக்கு வேறு கதையே தெரியாதா” என்று சற்றுக் கோபத்துடனேயே  கேட்டிருக்கிறாள். குழந்தையை ஏமாற்ற முடியாது எனத் தெரிந்துகொண்ட ஹாசினியின் தந்தை, அதே கதையை வேறு மாதிரியாகச் சொல்லியிருக்கிறார். அப்போதும் ஹாசினி விடவில்லை. தொடர்ந்து வேறு கதை சொல்லச் சொல்லி அவரிடம் அடம்பிடித்திருக்கிறாள். அவள், அப்பாவிடம் மட்டும் செல்லமாக இருக்கவில்லை. அவள் அம்மாவிடமும் செல்லமாகத்தான் இருந்திருக்கிறாள். அதற்குக் காரணம், அவள் மூத்த குழந்தையாகப் பிறந்ததுதான். 

ஹாசினியின் அம்மா ஶ்ரீதேவி, “அவள், எங்களுக்கு மூத்த குழந்தை. அதனால்தான் அவளுக்கு எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொடுத்தோம். அதுமட்டுமல்லாது படிப்பதில், விளையாடுவதில் என எல்லாவற்றிலும் படுசுட்டியாக இருப்பாள். குறிப்பாகச் சொல்லப்போனால், தன் தம்பியைவிட ஹாசினிக்குத்தான் வீட்டில் முன்னுரிமை கொடுத்தோம். அவள் கேட்டதை எல்லாம்  வாங்கிக்கொடுத்தோம்” என்று தன் மகளைப் பற்றிப் பெருமை பொங்கச் சொல்கிறார். 

ஹாசினியைப் பற்றி அவர்கள் இருவர் மட்டுமல்ல... அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், அந்த மாதா தெருவில் வசிப்பவர்களும் பெருமையாகத்தான் சொல்கிறார்கள். ஹாசினி படித்த நாராயணா பள்ளி ஆசிரியைகள், “பட்டாம்பூச்சி மாதிரிங்க அவ. நாங்கள்லாம் அவளை ‘பட்டர்ஃப்ளை’னுதான் கூப்பிடுவோம். அவ ரெண்டாவது படிச்ச குழந்தைதான். ஆனா, பேச்சுல அவ்வளவு தெளிவு. மலர்ந்த பூ மாதிரி சிரிப்பா. அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும். பள்ளியில் எல்லா ஆசிரியைகளுக்குமே அவளைப் பிடிக்கும்” என்கின்றனர்.

அவளுடைய உறவினர்கள், “அவ, ஸ்மார்ட் கேர்ள் மட்டுமல்ல... மிக பிரில்லியன்ட் கேர்ளும்கூட. அவளுடைய ஆக்டிவிட்டீஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். அவ வீட்டுல ஒட்டியிருக்கிற ஓவியங்கள் எல்லாம் அவ வரைஞ்சதுதான். அந்த ஓவியத்தைப்போல அவளும் அழகாக இருப்பா” என்கின்றனர் மிகவும் ஆச்சர்யத்துடன். 

இப்படி எல்லோருக்கும் அவள் பிடித்தவளாக இருந்ததால்தான், அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோர் வீடுகளிலும் தன் வயது சிறுமிகளுடனும் விளையாட ஆரம்பித்துள்ளார். அவர்களுடன் அவள் விளையாட ஆரம்பித்தால், அவளுக்கு நேரம் போவதே தெரியாது. ஒருவேளை, ஹாசினியின் பெற்றோருக்குக் குழந்தை ஞாபகம் வந்து, அவளைத் தேடிப்போய் அக்கம்பக்கத்து வீடுகளில் அவர்கள் சென்று பார்த்தால்,  அவள் சிரிக்கும் குரல் கேட்டு உடனே திரும்பி வந்துவிடுவர். அவள் விளையாடிவிட்டு வரும்வரை அவர்கள் காத்திருப்பர். இப்படிக் கழிந்த பொழுதுகளில்தான் அதே குடியிருப்பில் வசித்த ஓர் இளைஞனும் சிறுமி ஹாசினியிடம் விளையாட ஆரம்பித்துள்ளான். ...  

ஹாசினி சிறகடிக்கும்...