Published:Updated:

“எனக்குப் பணம் வேண்டும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 6

“எனக்குப் பணம் வேண்டும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 6
“எனக்குப் பணம் வேண்டும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 6

“எனக்குப் பணம் வேண்டும்!” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 6

“குழந்தை செய்யும் ஒரு தவறு காரணமாக குழந்தைக்கோ, நமக்கோ பெரிய இழப்பு ஏற்படும் என்று பெற்றோர் அறிந்தால், அந்தத் தவற்றை குழந்தை மீண்டும் செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் குழந்தையை வளர்ப்பதற்கான சிறந்த வழி” என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். 

தஷ்வந்த் செய்த சின்னச்சின்ன தவறுகளுக்கு எல்லாம் அவனுடைய பெற்றோர் ஆதரவாக இருந்ததுடன், அவன் தொடர்ந்து தவறு செய்யாமல் இருப்பதைக் கண்காணிக்காமல் அலட்சியமாகவும் இருந்ததன் விளைவு, பெரிய அளவில் தவறு செய்யும் அளவுக்கு அவனை வளர்த்துவிட்டது. பணம் கொடுப்பதைப் பெற்றோர் நிறுத்தியதால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான தஷ்வந்த், கடந்த டிசம்பர் 2-ம் தேதி தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தன் தாய் சரளாவிடம் பணம் கேட்டிருக்கிறான். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, சுத்தியலைக்கொண்டு தாய் சரளாவின் தலையில் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைகளுடன் அங்கிருந்து தப்புகிறான் தஷ்வந்த். 

தந்தை சேகர் அளித்த புகாரின்பேரில், தஷ்வந்தைப் பிடிக்கப் போலீஸார் தனிப்படை அமைத்து அவனைத் தேடுகின்றனர். அவனது நண்பர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது. தனிப்படை போலீஸார் தஷ்வந்தின் தொலைபேசிக்குக் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்கின்றனர். ஏற்கெனவே சிறுமி ஹாசினி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சில காலம் சிறையில் இருந்தபோது தஷ்வந்துக்கு, சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தஷ்வந்தின் தொலைபேசிக்குக் கடைசியாக வந்த அழைப்புகளை வைத்து ஆய்வு செய்ததில், அவன் ராஜ்குமார் தாஸ் என்பவருக்கு (தஷ்வந்துக்குச் சிறையில் பழக்கமானவன்) அடிக்கடி பேசியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார்  தாஸைக் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.

“எனக்குப் பணம் வேண்டும்!”

இதற்கிடையே வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற 6 பவுன் தங்க நகைகளை விற்பதற்காக, தஷ்வந்த் தனக்கு ஜெயிலில் பழக்கமான ஜேம்ஸ் என்பவரின் நண்பரான டேவிட்டைச் சந்தித்து நகைகளை விற்றுத் தரும்படி கேட்டிருக்கிறான். டேவிட், அவருடைய நண்பரான மணிகண்டன் என்பவரிடம் அந்த நகைகளைக் கொடுத்து விற்கச் சொல்லியிருக்கிறார். நகைகளை வாங்கிக்கொண்ட மணிகண்டன் மீது ஏற்கெனவே திருட்டு வழக்கு இருக்கும் நிலையில், தஷ்வந்த் கொடுத்த அந்த நகைகளுடன் மணிகண்டன் தலைமறைவாகி விடுகிறான். இதனால், கோபமடைந்த தஷ்வந்த், “உன்னை நம்பித்தானே நகைகளைக் கொடுத்தேன். எனக்குப் பணம் வந்தாக வேண்டும்” என்று டேவிட்டிடம் மிரட்டல் விடுக்கிறான். ஆனால் டேவிட்டோ, “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை; மணிகண்டன் என்னிடம் சிக்கும்போது, உனக்கு மொத்த பணத்தையும் தருகிறேன்” என்று சொல்லி அப்போதைக்கு தன் கையில் இருக்கும் சில ஆயிரங்களைக் கொடுக்கிறார். 

அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு பெங்களூருவுக்கு தப்பிய தஷ்வந்த், பின்னர் அங்கிருந்து மும்பைக்குச் செல்கிறான். சிறையில் பழக்கமான ஒரு நண்பன் மூலம் மும்பையில் தங்கியிருக்கும் விஷயத்தைத் தனிப்படை போலீஸார் அறிந்து, மும்பைக்குச் செல்கின்றனர். அங்கு, தமிழ் அமைப்புகளின் உதவியுடன், தஷ்வந்த் பற்றிய தகவல்களைக் கொடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். இந்தச் சூழலில், டிசம்பர் 6-ம் தேதி காவல் துறையினருக்கு ஓர் அழைப்பு வருகிறது. “சார்... தஷ்வந்தைப் போலவே ஒரு நபர் பாந்த்ராவில் இருக்கும் ரேஸ் கோர்ஸுக்குள் நுழைந்துள்ளார். எதற்கும் அங்குசென்று பாருங்கள்” என்று போனில் பேசிய நபர் தகவல் கொடுக்கிறார்.  அடுத்த நொடி, அங்கு விரைகிறது தனிப்படை. அந்த உருவம் தஷ்வந்த்-தான் என்பதை உறுதி செய்த அவர்கள், அவன் அருகில் சென்று, “என்ன தம்பி எப்படி இருக்கீங்க... இங்க எப்போ வந்தீங்க” என்று ஒன்றும் தெரியாததுபோல் கேள்வி கேட்கின்றனர். அதற்கு தஷ்வந்த், “நீங்கள் யார்” எனக் கேட்கிறான். 

“நாங்களா, சென்னைப் போலீஸ். வா எங்களுடன், சென்னை போகலாம்...” எனச் சொல்லி தஷ்வந்தைக் கைதுசெய்தனர். மறுநாள் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்துச் செல்ல அனுமதி வாங்குகின்றனர். பின்னர், சென்னைக்கு அழைத்து வரவிருந்த வேளையில், சாப்பாட்டுக்காக கைவிலங்கைப் போலீஸார் அவிழ்த்துவிட..., அடுத்த நொடி அங்கிருந்து மீண்டும் தப்பிக்கிறான் தஷ்வந்த். ஆனால், போலீஸாரின் அதிரடி தேடுதல் வேட்டைக்குப் பிறகு டிசம்பர் 8-ம் தேதி மீண்டும் தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டு மிகுந்த பாதுகாப்போடு சென்னைக்கு அழைத்துவரப்பட்டான். இங்கு வந்தபின்னர், அவன் தப்பியது குறித்தும், பின் சிக்கியது குறித்தும் தனிப்படை போலீஸார் விளக்கினர். 

தந்தையைக் கொலை செய்யத் திட்டம்!

இதுகுறித்து அவர்கள், “சரளா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை கைதுசெய்ய மும்பை சென்றோம். கைது செய்தபின், சாப்பிடுவதற்காகத் தஷ்வந்தின் கைவிலங்கைக் கழற்றினோம். ஆனால், அவன் எங்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். அவனது இடது கையில் கைவிலங்கு மாட்டப்பட்டு இருந்ததால், மீண்டும் அவனைக் கைது செய்துவிட்டோம். ஒருமுறை எங்களிடமிருந்து தப்பியதால் தஷ்வந்தைக் கண்காணிக்கக் கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்பட்டனர். இதற்கிடையில் சென்னையிலிருந்து புறப்பட்டுவந்த இன்னொரு தனிப்படை டீமும் தஷ்வந்த்-ஐ பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமானப் பயணத்தின்போதும் அவனைக் கண்காணித்துக்கொண்டே இருந்தோம். கழிவறைக்குக்கூட தஷ்வந்தை போலீஸார்தான் அழைத்துச் சென்றனர். போலீஸார் பாதுகாப்பில்தான் உணவும் வழங்கப்பட்டது. கடந்த முறை எங்களிடமிருந்து தப்பியதால் விமானத்தில் வரும்வரை அவரிடம் எதுவும் பேசவில்லை. அவன் கேட்ட உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தோம். சென்னைக்கு அழைத்து வந்தவுடன் அவனிடம் விசாரணையைத் தொடங்கினோம்” என்று தெரிவித்தனர். 

அவனிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய அப்பாவையும் அவன் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த தகவலைப் போலீஸார் கூறியதைக் கேட்டு தஷ்வந்தின்  உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

ஹாசினி சிறகடிக்கும்...

அடுத்த கட்டுரைக்கு