Published:Updated:

“தஷ்வந்த் சிறையில் என்ன செய்கிறான் தெரியுமா?” -‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 8

“தஷ்வந்த் சிறையில் என்ன செய்கிறான் தெரியுமா?” -‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 8
News
“தஷ்வந்த் சிறையில் என்ன செய்கிறான் தெரியுமா?” -‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 8

“தஷ்வந்த் சிறையில் என்ன செய்கிறான் தெரியுமா?” -‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 8

ருவனைச் சிகரத்துக்கு உயர்த்துவதும் படுபாதாளத்துக்குத் தள்ளுவதும் அவன் பெற்ற அறிவும், செயலுமே ஆகும். ஆம்...தஷ்வந்தின் வாழ்க்கை திசைமாறுவதற்கும் அவனுடைய நடத்தையே முக்கியப் பங்கு வகித்துள்ளது. விசாரணைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த், அங்கு எப்படியிருக்கிறான் என்று சிறைத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். 

“சட்டப் புத்தகங்களைப் படிக்கிறான்!” 

“தஷ்வந்த் அதிகாலையிலேயே எழுந்து, காலைக்கடன்களை முடிக்கிறான். பின்பு, உடற்பயிற்சி செய்கிறான். அதன்பிறகு, சிறையில் உள்ள சக சிறைவாசிகளிடம் அரட்டையடிக்கிறான். ஓய்வு நேரத்தில்கூட அவனுடைய கவனம் சட்டப் புத்தகங்கள் மீதே உள்ளது. இரவில், நீண்டநேரம் சட்டப் புத்தகங்களை வரிவிடாமல் படிக்கிறான். நீதிமன்றத்தில் வாதாடுவதற்காகவே அவன் சட்டப் புத்தகங்களைப் படித்து வருகிறான். மற்றபடி வழக்கம்போல அவனுடைய செயல்பாடுகள் உள்ளன” என்றனர் சிறைத் துறை அதிகாரிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் ஹாசினி கொலை, சரளா கொலை, மும்பையில் போலீஸிடமிருந்து தப்பியது என தஷ்வந்த் மீது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் கேஸ் ஹிஸ்ட்ரி தொடங்கப்பட்டு, அதில் அவன் தொடர்பான விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், சிறுமி ஹாசினியின் வழக்கு வேகமெடுத்தது.

“நானே வாதாடுகிறேன்!”

இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி தஷ்வந்தை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பெண்கள், யாரும் எதிர்பாராத நிலையில் செருப்பு உள்ளிட்டவற்றால் தஷ்வந்தைத் தாக்கினர். அப்போது தஷ்வந்தின் வழக்கறிஞர் விஜயகுமார் வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். “எனக்கு வாதாட வழக்கறிஞர்கள் வேண்டாம். நானே வாதாடுகிறேன். எனக்கு இப்போதே தண்டனை வழங்க வேண்டும்” என அவன் நீதிபதியிடம் தெரிவிக்க, “இதற்குச் சட்டத்தில் இடமில்லை... நீங்கள், இலவச சட்ட ஆலோசனை மையத்தை நாடலாம்” என்று நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தினார். 

“ஹாசினியைக் கொலை செய்யவில்லை!”  

இதையடுத்து, தஷ்வந்த் தரப்பு சார்பாக ஆஜராக வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விடுமுறை தினங்களிலும் ஹாசினி கொலை வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்றது. செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து வரப்பட்டான். புழல் சிறையில் அவனுக்கான மதிய உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. விசாரணை முடிந்து ஒருநாள் வேனில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்ட தஷ்வந்த், “நான் ஹாசினியைக் கொலை செய்யவில்லை” என ஊடகங்களில் தெரிவித்ததால், அவனிடம் மீடியாவினரை நெருங்கவிடாமல் காவல் துறையினர் கூடுதல் கவனமெடுத்துப் பார்த்துக்கொண்டனர். புத்தருக்குப் போதி மரம் மாற்றத்தைத் தந்ததுபோல... தனக்கும் சட்டப் புத்தகங்கள் ஒரு மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில், காத்திருந்தான் தஷ்வந்த். ஆனால் சாட்சிகளோ, அவனுக்கு எதிராகக் கோர்ட்டில் சாட்சியம் அளித்துக்கொண்டிருந்தனர். 

இதுதொடர்பாக தஷ்வந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம். அவர், “ஹாசினி கொலை வழக்குத் தொடர்பாக மொத்தம் 35 சாட்சிகளைக் காவல் துறையினர் தயார் செய்துள்ளனர். அதில், இதுவரை 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. ஆண்மைப் பரிசோதனை குறித்து செங்கல்பட்டு யூரியாலஜி மருத்துவர் செந்தில்குமார், ஹாசினி உடலை உடற்கூறு ஆய்வு செய்த சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவர் கிருத்திகா தேவி மற்றும் ஹாசினியின் பெற்றோர் பாபு, ஸ்ரீதேவி, அதே குடியிருப்பில் வசித்து வந்த புஷ்பா, கோகுல்தாஸ், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கோயில் தர்மகர்த்தா உள்ளிட்டோரின் சாட்சியங்கள் விசாரணைக்குப் பின் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மாங்காடு கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்று பைக், ஹெல்மெட், காலி கேன் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தச் சாட்சியங்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் தஷ்வந்துக்கு எதிராகவே சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்” என்றவர், யார்யார் என்னென்ன விளக்கங்கள் கொடுத்தனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

“தஷ்வந்த் ஆண்மை சக்தி உள்ளவர்தான்!”

“ ‘தஷ்வந்த் ஆண்மை சக்தி உள்ளவர்தான்’ என மருத்துவர் செந்தில்குமார் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அதுபோல, ‘தஷ்வந்த் வைத்திருந்த அப்பாச்சி பைக் எங்களிடம் வாங்கப்பட்டதுதான்’ என ஷோரூம் உரிமையாளர் சாட்சியளித்துள்ளார். பெட்ரோல் பங்கில் வேலை செய்த சந்தோஷ்குமார், ‘சம்பந்தப்பட்ட தினத்தன்று தஷ்வந்த், எங்களிடம் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டார். நாங்கள், கேனில் பெட்ரோல் தருவதில்லை என்று சொன்னோம். வீட்டில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது என அவர் கேட்டதால் பெட்ரோல் கொடுத்தோம். அதற்கு ஆக்சிஸ் பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தி பெட்ரோல் வாங்கினார்’ எனச் சாட்சியம் அளித்திருக்கிறார். எனவே, இந்த வழக்கில் தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார் வழக்கறிஞர்.

இறுதியில், இந்த வழக்குத் தொடர்பாக 42 ஆவணங்கள் விசாரணை செய்யப்பட்டன. 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் இறுதிக்கட்ட விவாதம் முடிந்து இரு தரப்பினரும் வழக்குத் தொடர்பான எழுத்துபூர்வமான பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். வழக்கின் இறுதி விசாரணைக்காக மாங்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தஷ்வந்த் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி வேல்முருகன், “வழக்குத் தொடர்பாக ஏதேனும் தெரிவிப்பதென்றால் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்” என்றார். இதைத்தொடர்ந்து அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. பிறகு, “பிப்ரவரி 19-ம் தேதி இந்த வழக்குக்கான தீர்ப்பு அளிக்கப்படும்” என்றார். 

தீர்ப்பு நாளான பிப்ரவரி 19-ம் தேதி புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காலை 11.35 மணிக்கு, தஷ்வந்த் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டான். 

ஹாசினி சிறகடிக்கும்...