Published:Updated:

“ப்ளீஸ் என்னை விட்ருங்க!”:கதறும் ஹாசினியின் தந்தை - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ப்ளீஸ் என்னை விட்ருங்க!”:கதறும் ஹாசினியின் தந்தை - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - 9
“ப்ளீஸ் என்னை விட்ருங்க!”:கதறும் ஹாசினியின் தந்தை - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - 9

“ப்ளீஸ்... என்னை விட்ருங்க. என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்வரை என்னால் சாப்பிட முடியாது” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார், ஹாசினியின் தந்தை பாபு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுவாக, எவர் ஒருவரும் நிதானம் இழந்துவிட்டால், அவர் தம் வாழ்க்கையையே இழக்கவேண்டி வரும்; ஆகையால், எப்போதும் நிதானத்தை இழக்காமல் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கூற்று, தஷ்வந்த் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. அவன் நிதானத்தை இழந்ததால்தான், பாதகச் செயல் புரிந்து, நீதிமன்றத்தால் இன்று தண்டனைக்கு ஆளாகியிருக்கிறான். 

“தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும்!” 

பிப்ரவரி 19, அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முன்பாகவே ஹாசினியின் தந்தை ஶ்ரீனிவாஸ் பாபு, நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். முதல் மாடியில் உள்ள வழக்கறிஞரின் அறையில் அவர் அமர்ந்திருந்தார். அங்கிருந்த வழக்கறிஞர்கள், “தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும்” என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவருடைய முகம்  களையிழந்தே காணப்பட்டது. புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காலை 11.35 மணிக்கு, தஷ்வந்த் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டான். ஹாசினி வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு, வழக்கத்தைவிடவும் அதிக அளவில் போடப்பட்டிருந்தது. தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதைப் பார்த்த ஶ்ரீனிவாஸ் பாபுவின் முகம் கடுமையான கோபத்தில் சிவந்து காணப்பட்டது. ஆனால், அவர் தன்னுடைய கோபத்தையும் குமுறலையும் அடக்கிக்கொண்டு மிகவும் அமைதியாகவே இருந்தார். நீதிமன்றத்துக்குள் தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதும், நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டன. செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், ஶ்ரீனிவாஸ் பாபு அடிக்கடி தன் மனைவி ஶ்ரீதேவிக்கு, அங்கு நடக்கும் தகவல்களைக் கைப்பேசியில் தெரிவித்தபடியே இருந்தார். நேரம், சரியாக மதிய உணவு இடைவேளையை ஞாபகப்படுத்தியது. மதிய உணவு இடைவேளையைக் கருத்தில்கொண்டு பிற்பகல் 3 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சாப்பிடச் சென்றனர். பாபுவை எல்லோரும் சாப்பிட அழைத்தனர். ஆனால், அவர் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. “ப்ளீஸ்... என்னை விட்ருங்க. என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்வரை என்னால் சாப்பிட முடியாது” என்று கண்ணீர் மல்கக் கூறினார். 

“நியாயம் கிடைச்சிடும்!” 

அந்தக் கண்ணீருடன், மனைவி ஶ்ரீதேவிக்கு மீண்டும் போன் செய்கிறார். “தேஜீ சாப்பிட்டானாம்மா... நீ சாப்பிட்டாதான் அவனும் சாப்பிடுவான். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. ‘ஹாசினி அக்காவுக்கு நியாயம் கிடைச்சிடும்’னு அவன்கிட்ட சொல்லும்மா” என்றபடியே கண்கலங்குகிறார். தொடர்ந்து வார்த்தைகளைப் பேச முடியாமல், அவருடைய நிலையையும் கண்ணீரையும் பார்க்கும் மற்றவர்களுக்கும் அதேபோன்ற உணர்வே ஏற்பட்டது. ‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது’ என்பார் திப்பு சுல்தான். உண்மைதான்... பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வலிகளை மற்றவர்களும் உணர்ந்துகொள்ளும்போதுதான், அந்த வலி எல்லோருக்கும் பொதுவானதாக அறியப்படுகிறது. அதனால்தான், பாபு கதறி அழுதபோது,  மற்றவர்களும் அவருடைய நிலையைக் கண்டு மனம் வருந்தினார்கள்.

ஒருவழியாக, உணவு இடைவேளை முடிந்து மணி மூன்றைத் தொட்டபோது, மீண்டும் நீதிமன்றம் பரபரப்பானது. அதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட இறுதி விசாரணையைத் தொடர்ந்து, காலையில் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படாத பத்திரிகையாளர்கள், தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அனுமதிக்கப்பட்டனர். நீதிபதிக்கு எதிரே தஷ்வந்த் நின்றிருந்தான். பிற்பகல் 3 மணி 2 நிமிடம்... தஷ்வந்தைக் குற்றவாளிக் கூண்டுக்குள் வரச்சொல்லிய நீதிபதி வேல்முருகன், “குற்றம் நிரூபணம். தண்டனைகுறித்த விவரங்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்றார். 

“கொஞ்சம் பொறுமையாக இரு!”

நீதிபதி அங்கிருந்து கிளம்பியதும், தஷ்வந்த் அங்கே அமர்ந்திருந்த வழக்கறிஞர் ராஜ்குமாரிடம், “Sir Please, Give me a White Paper and pen” என்று கேட்கிறான். அதற்கு ராஜ்குமார், “கொஞ்சம் பொறுமையாக இரு, தஷ்வந்த். நீ... அங்கே உட்காரு” என்கிறார். அடுத்த சில நிமிடங்களில் பத்திரிகையாளர்களைப் பார்த்து, “Hello, why are writing that please write what Judge says” என்றதும், அங்கே இருந்த ஒரு பத்திரிகையாளர் பதில் கொடுக்க... சட்டென பரபரப்பாகிவிட்டது, நீதிமன்ற வளாகம். பதறிய போலீஸார்... தஷ்வந்தைப் பார்த்து, “அமைதியாக உட்கார் தஷ்வந்த்” என்று அறிவுறுத்தினார்கள். 

ஒன்றரை மணி நேரம் கழித்து, “இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ், சிறுமி ஹாசினியைக் கொலை செய்த குற்றத்துக்காக, தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். அவர், தண்டனையை அறிவித்த அடுத்த கணமே, “நீதியரசர் வேல்முருகன் வாழ்க... நீதியரசர் வேல்முருகன் வாழ்க” என வெளியே திரண்டிருந்த பொதுமக்களின் குரல் விண்ணைப் பிளந்தது. 

“தஷ்வந்த் மனிதன் அல்ல..!”

தீர்ப்பைக் கேட்ட சந்தோஷத்தில் பாபு, வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய கண்களில், கண்ணீர் தாரை தாரையாய்க் கொட்டியது. தனது செல்ல மகளின் புகைப்படத்தை செல்போனில் பார்த்து, முத்தம் கொடுத்து கதறித் துடித்தார். தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாபு, “ஹாசினியின் மரணத்துக்கு நியாயம் கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தீர்ப்பால் நான் முழு திருப்தியடைகிறேன். இந்த வழக்குக்காக நான் போராடியபோது, 90 சதவிகிதம் பின்னடைவு இருந்தது. ஆனால் வழக்கறிஞரும் போலீஸாரும், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் நம்பச் சொன்னார்கள். தற்போது நீதிமன்றம் நியாயத்தை வழங்கியுள்ளது. தஷ்வந்த் மனிதன் அல்ல. அவன், ஓர் அரக்கன். அவனிடம் மனிதத்தன்மை இருந்ததில்லை. எல்லோரும் குழந்தைகளை மென்மையாகப் பார்ப்பார்கள்; அவர்களுடன் விளையாடுவார்கள். ஆனால், தஷ்வந்த் கொடூரமாக நடந்துகொண்டான். என் செல்ல மகளைக் கொலை செய்ததுடன், அவனுடைய தாயாரையும் கொலை செய்தவன் தஷ்வந்த். நான் இப்படி நடக்கும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. மனிதர்கள் இப்படிக்கூட நடந்துகொள்வார்கள் என்று நான் நினைத்ததில்லை. மனிதத்தன்மை உள்ளவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். தஷ்வந்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை சரியானதே. இவனைப் போன்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்” என்றார் கண்ணீருடன்.

தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பலரும் வரவேற்றனர். ஆனால், அவன் மட்டும் வேறொரு முடிவுக்காகக் காத்திருக்கிறான் என்று அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு