மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக தஷ்வந்த் தொடர்ந்த வழக்கில், மாங்காடு காவல் ஆய்வாளரிடம் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

சென்னைப் போரூரைச் சேர்ந்த பாபு என்பவரது 6 வயது மகள் ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, `குற்றம் சந்தேகத்து இடமின்றி நிரூபிக்கப்பட்டது என்று கூறி, தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில் மரண தண்டனையை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தஷ்வந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், `வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாகச் சாட்சி அளித்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். அதனைக்கேட்ட உயர் நீதிமன்றம், `இதுதொடர்பாக மாங்காடு காவல்ஆய்வாளர், நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.