Published:Updated:

``முன்ன யானை பயம் .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்

``முன்ன யானை பயம்  .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்
``முன்ன யானை பயம் .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்

``முன்ன யானை பயம் .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்

``முன்ன யானை பயம்  .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்

 கோவையில் சாடிவயலையொட்டியுள்ள பழங்குடி கிராமத்துச் சிறுவர்கள் இப்போது அவ்வளவு குதூகலமாக இருக்கிறார்கள். இத்தனை நாள்களாகப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும்போதும் வீட்டுக்குத் திரும்பும்போதும் அவர்களுக்கு இருந்த அலுப்பு, வெறுப்பு, பயத்தை விரட்டியடித்து, பாட்டும் டான்ஸுமாகப் பயணத்தைப் படுசுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறது, வனத்துறையின் சூழல் சுற்றுலா வாகனம். 

சாடிவயல், சிறுவாணி, போரேத்தி, வெள்ளபதி, பொட்டபதி, சீங்கிப்பதி, கல்கொத்தி... இவையெல்லாம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் மலைவாழ் கிராமங்கள். கோவையில் யானைகள் நடமாட்டம் பற்றி வரும் அநேகச் செய்திகளில் இடம்பிடிக்கும் ஊர்கள் இவை. வனப் பகுதிக்குள் வசிக்கும் இந்தக் கிராம மக்கள், ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனேயே கடத்துகிறார்கள். ஆதி குடிலான வனத்துக்கும் இப்போதைய வளர்ச்சிக்கும் இடையிலான அவர்களின் வாழ்க்கை அவ்வளவு சிக்கலானது. இதிலிருந்து அடுத்த தலைமுறையினராவது தப்பிப் பிழைக்க, அவர்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் படிப்பு.

வனத்தின் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை அறிந்துகொள்ளவும், வனத்தை அழிக்க நினைக்கும் அரக்கர்களை எதிர்த்துப் போராடவுமாவது கொஞ்சமேனும் படிப்பு தேவை. மற்ற பகுதிகள்போல மலைவாழ் பிள்ளைகளின் படிப்பு, அவ்வளவு எளிதானது அல்ல. அது பெரிய சாகசம். அந்தப் பிள்ளைகளின் சிரமத்தைக் குறைப்பதற்கு முன்வந்துள்ளது, கோவை வனத்துறை. ஆம்! வனத்துறைக்குச் சொந்தமான நான்கு சூழல் சுற்றுலா வாகனத்தில், ஒரு வாகனத்தை, மலைவாழ் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தக் கொடுத்துள்ளது.

``முன்ன யானை பயம்  .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்

பள்ளிவிடும் மாலை நேரம்... மத்வராயபுரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி வாசல். மாணவர்களின் வருகைக்காகக் காத்திருந்த வனத்துறை வாகனத்தோடு நாமும் காத்திருந்தோம். பெல் அடித்தது. ஹோ...வென ஆரவாரமாக ஓடிவந்து ஏறிக்கொண்டார்கள் பிள்ளைகள். வீட்டுக்குப் போகும் சந்தோஷம் தனக்கும் தொற்றிக்கொண்டதுபோல அமர்க்களமாகப் புறப்பட்டது அந்த வேன். இடைவேளையில் வாங்கியிருந்த மிக்ஸர் பாக்கெட், கடலை மிட்டாய் என ஒவ்வொன்றையும் மிச்சப்படுத்தி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் சிலர் பாட்டுப்பாட... சிலர் ஆட்டம்போட... அந்த வேனில் நடந்தது ஆனந்தக் கூத்து. வேன் பயணம் பற்றி பிள்ளைகளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

எட்டாம் வகுப்பு படிக்கும் ஜெயராம், ``வேன்ல போறது டவுன்ல உள்ளவங்களுக்குச் சாதாரணம்ணே. எங்களுக்கு அப்டி இல்லே. இந்த வேன் இல்லாட்டி நாங்க பல கிலோமீட்டர் நடந்தே வந்து பஸ்ஸைப் புடிக்கணும். அந்த பஸ் மிஸ் ஆகிருச்சுன்னா பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாது. வழியில எப்போ யானை வரும்னே தெரியாது. மழைக்காலத்துல வழியெல்லாம் தண்ணி ஓடும். பல நாள் போகவே மாட்டோம். இப்போ ஃபாரஸ்ட்காரங்க இந்த வண்டியை விட்டதிலிருந்து பள்ளிக்கூடம் போறதுக்கு ரொம்ப ஜாலியா இருக்குண்ணே'' என்றார்.

முண்டாந்துறையில் உள்ள பள்ளியிலும் சில மாணவர்களை ஏற்றிக்கொண்டது வேன். சாடிவயலைக் கடந்து, வளைந்து நெளிந்து வனத்துக்குள் சென்றது. வேலுமணி என்ற எட்டாம் வகுப்பு மாணவி ``எனக்கு அப்பாவும் இல்லே... அம்மாவும் இல்லேண்ணே. என் அம்மாவை யானை மிதிச்சுக் கொன்னுருச்சு. அப்பாவும் ஒரு ஆக்சிடென்ட்ல செத்துப் போயிட்டாங்க. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என்னைப் படிக்க வெச்சிரணும்னு ஆசை. எனக்கும் படிச்சுப் பெரிய ஆளா ஆகணும்னு ஆசைதாண்ணே. பாட்டி வயசானவங்க. எல்லா வேலையும் செய்ய முடியாது. நான் காலையில எழுந்துருச்சுச் சமைச்சு வெச்சுட்டுதான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். அதனால, வாரத்துல மூணு நாள் போறதே பெருசுண்ணே. ஒவ்வொரு நாள் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போகும்போதும் யானை மிதிச்சு செத்த அம்மா ஞாபகம் வரும். என்னைக்காவது ஒருநாள் என்னையும் யானை கொன்னுருச்சுன்னா என் தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக்க ஆள் இல்லாமப் போயிருமோனு கவலையா இருக்கும். இப்போ இந்த வேன் வந்ததிலிருந்து  தைரியமாப் பள்ளிக்கூடத்துக்குப் போறேண்ணே'' என்றார்.

``உன்னை ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா படிப்பியா?'' என்று கேட்டதுக்கு, ``நான் போயிட்டா தாத்தாவையும் பாட்டியையும் யாருண்ணே பாத்துப்பா?'' எனக் கேட்கிறார் பாசம் நிறைந்த குரலில். இப்படி அந்த வேனில் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.  

``முன்ன யானை பயம்  .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்

மாணவி வேலுமணி

சமூக ஆர்வலரான சிவா, ``தினமும் 64 கிலோமீட்டர் இந்த வேன் போயிட்டு வருது. சிட்டியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு இது சாதாரண விஷயமா தெரியாலாம். ஆனால், மலைவாழ் பிள்ளைங்களுக்கு இது மிகப்பெரிய வரம். இங்கிருந்து நடந்து பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாமல், எத்தனையோ பேர் படிப்பை நிறுத்தியிருக்காங்க. பள்ளிப் படிப்புங்கிறது ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உறுதியாக் கிடைச்சே தீரணும். போக்குவரத்து இல்லை என்ற காரணத்துக்காகப் பள்ளியைவிட்டு நிற்கும் பேராபத்தை வனத்துறையினரின் இந்த முயற்சி நிச்சயம் தடுக்கும். சூழல் சுற்றுலா மூலமா வனத்துறைக்கு எக்கச்சக்கமா வருமானம் வருது. சனி மற்றும் ஞாயிறுதான் சூழல் சுற்றுலாவுக்கு அதிகமானோர் வருவாங்க. வார நாள்களில் கூட்டம் குறைவுதான். அப்போ, சும்மாவே நிற்கும் வாகனங்களில் ஒன்றை மலைவாழ் பிள்ளைகளின் நலனுக்குப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது'' என்றார்.

இதுதொடர்பாக கோவை டி.எஃப்.ஓ வெங்கடேசன், ``காலையில் 9 மணிக்கு மேலேதான் சூழல் சுற்றுலா ஓபன் ஆகும். அதுவரை அந்த வண்டி சும்மாதான் நிக்கும். அதை இங்குள்ள பிள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டுப் போய்வர யூஸ் பண்ணா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. இதன்மூலம் எந்தத் தொந்தரவும் இல்லாம பசங்க ஸ்கூலுக்குப் போறதுடன், வேன்ல போறதுக்காகவே சிலர் ஆர்வமா  ஸ்கூலுக்கு வர ஆரம்பிச்சதும் நடந்திருக்கு'' என்கிறார் புன்னகையோடு.

ரைட்...ரைட்...

அடுத்த கட்டுரைக்கு