தூக்குக் கயிற்றின் மிக அருகில் இருக்கும் தஷ்வந்துக்கு…
முற்றிலும் எம்மை இருள் சூழ்ந்திருக்கும் ஒரு நள்ளிரவுப் பொழுதில்தான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் தஷ்வந்த். உயர்நீதிமன்றம் உங்களது மரணதண்டனையை உறுதி செய்தபிறகு தற்போது தங்களுக்கும் அப்படியாக இருள் சூழ்ந்துதான் இருக்கும். மர நிறக் கண்கள் மினுங்கப் பார்க்கும் ஹாசினியின் முகத்தை தலையணையைக் கொண்டு மூடிய தருணத்தில் அந்தப் பிஞ்சு உயிருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். தங்களது பிள்ளையை, கருகிய நிலையில் கையில் வாங்கிய நொடி அவளது பெற்றோருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.
ஆனால், ஓர் உயிரை உங்களது இன்பத்துக்காக மாய்த்துவிட்டு உங்களால் எப்படிக் குற்றமற்றவராகக் காட்டிக்கொள்ள முடிந்தது. உங்களுக்குள் எப்படிக் குற்ற உணர்வு எழாமல் இருந்தது?. ஒரு சடலத்தின் மீது எப்படி நடிக்கத் துணிந்தீர்கள்?. எப்படியாக `நான் குற்றமற்றவன்’ என்று மேல்முறையீடு செய்யத் துணிந்தீர்கள்?. சட்டத்தில் இருக்கும் ஏதோவோர் ஓட்டையின் வழியே எப்படியும் வெளியே வந்துவிடலாம் என்கிற குருட்டு நம்பிக்கையா? எப்படிக் கொலையின் மீதொரு குற்றமாய் தாயைக் கொன்றீர்கள்?. இவ்வாறு எப்படி, ஏன் என ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றன. ஆனால், அது எதுவும் இறந்த ஹாசினியை எங்களுக்கு மீட்டுத் தரப்போவதில்லை. நாளை மீண்டுமொரு குழந்தையை அவர்களது குடும்பம் வரவேற்கலாம். ஆனால், தெற்றுப்பல் தெரிய புகைப்படங்களில் சிரித்துக் கொண்டிருக்கும் ஹாசினியின் சிரிப்பை வேறு யார் நிரப்பிவிட முடியும்?.
`குழந்தையை வெளியில் விளையாட விட்டது தவறு' என்று பெற்றோர்களைக் குற்றம்சாட்டி ஒருவகையில் உங்களது குற்றங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள் சிலர். ஆனால், அவர்கள் கூறுவதும் ஒருவகையில் உண்மைதான். குற்றங்களின் கூடாரத்தில் குழந்தைகள் பிறப்பதே தவறுதான். குற்றங்களைத் தடுப்பதில் தவறிவிட்ட இந்தச் சமூகம் ஒவ்வொரு குற்றம் நடந்த பின்புதான் விழித்துக் கொள்கிறது, அடுத்ததொரு புதிய குற்றம் நிகழும் வரை. அதன் மீது விவாதிக்கிறது. இந்த விவாதங்களால் பெரிதும் ஆதாயங்கள் இருப்பதில்லை. `குழந்தைகளுக்கு ஒழுங்கான ஆடைகளை உடுத்துங்கள்’ என்பது போன்ற முட்டாள்தனமான முடிவுகள்தாம் அதில் எட்டப்படுகின்றன. `தஷ்வந்த்கள்' சிறுவயதில் எப்படி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அங்கே விவாதப் பொருளாக இருப்பதில்லை.. அப்படி விவாதிக்கப்பட்டாலும் அவை செயலாக்கம் பெறுவதில்லை. இறப்புகள் வெறும் இறப்புகளாகவே இருக்கின்றன.
உங்களது தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் கூறியதுதான் மீண்டும் ஒருமுறை இங்கே நினைவுப்படுத்தத் தோன்றுகிறது. நாங்கள் எறும்புகளுக்கும் தீங்கிழைக்காதவர்கள்தாம். ஆனால், சீஸரைக் கொன்றதற்குக் காரணம் கூறிய ப்ரூடஸ், `நான் சீஸரை நேசித்தேன். ஆனால், ரோமானியப் பேரரசை இன்னும் அதிகமாக நேசித்தேன்’ என்றார். அதுபோல உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட தீர்ப்பு நிச்சயமாக எங்களது வன்மத்தின் வெளிப்பாடு இல்லை. ஆனால், அடுத்த வீட்டு நாய்க்குட்டியைப் பார்க்கப் போகிறோம் என்று நம்பி வந்த சிறுமியைச் சாகடித்ததற்கு இதைவிட வேறு எந்த வகையில் நீதியின் தராசு நியாயம் கூறிவிட முடியும்?.
உங்கள் இழிவான பாவங்களுக்குப் பரிகாரமாய் ஒரு குழந்தையையேனும் உங்களது இறப்பின் நொடிக்கு முன்பு அன்புடன் அரவணைத்துவிட்டுச் செல்லுங்கள். அன்பும் அறமும் உங்களோடு இருக்கட்டும்.
மற்றபடி… உங்களைப் போன்ற ஏராளமானவர்கள் இன்னும் இங்கே நிறைந்திருக்கிறார்கள். உடலுக்காக உயிரையும் ஆன்மாவையும் துச்சமென மிதித்து நசுக்கும் அறமற்றவர்கள் அவர்கள். இருந்தும் ஒருநாள் எங்கள் பிள்ளைகளைச் சூழ்ந்திருக்கும் அவர்களின் இருள் விலகும்.. விடியும்.