Published:Updated:

``நான் டாக்டர் ஆவேன்... என்னைய வேலைக்குப் போ சொல்றீங்க!'' - செஃப்டிக் டேங்கில் இறந்த மாணவன்

``நான் டாக்டர் ஆவேன்... என்னைய வேலைக்குப் போ சொல்றீங்க!'' - செஃப்டிக் டேங்கில் இறந்த மாணவன்

பள்ளிக்கூடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருந்தா எங்க புள்ள உசுரோட இருந்திருக்குமே

``நான் டாக்டர் ஆவேன்... என்னைய வேலைக்குப் போ சொல்றீங்க!'' - செஃப்டிக் டேங்கில் இறந்த மாணவன்

பள்ளிக்கூடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருந்தா எங்க புள்ள உசுரோட இருந்திருக்குமே

Published:Updated:
``நான் டாக்டர் ஆவேன்... என்னைய வேலைக்குப் போ சொல்றீங்க!'' - செஃப்டிக் டேங்கில் இறந்த மாணவன்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவுநீர் தேக்கத்துக்காகக் கட்டிவைத்திருந்த 10 அடி தொட்டியில் தவறி விழுந்து, எட்டாம் வகுப்புப் படிக்கும் சிவராமன் உயிர் நீத்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவராமனின் ஊரான மேல் அருங்குணத்தில் அந்தத் தெருவில் நுழைந்ததுமே அழுகை ஓலம் நெஞ்சைப் பிசைந்தது. வீட்டை நெருங்க, `போஸ்ட் மார்டம் முடிஞ்சதாம். இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி வந்துரும்'னு ஒரு குரல். அவ்வளவுதான்... `அநாதையா உன் அம்மா நிக்கானு அவன்கிட்ட சொல்லுங்க' என சிவராமனின் அம்மா வெடித்து அழுகிறாள். நம்மையும் அறியாமல் கண் கலங்குகிறது. சுற்றி இருப்பவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயல்கின்றனர். 

``வாழ்க்கையில இம்புட்டு கஷ்டத்துக்கு பின்னாடியும் நான் உசுரோடு இருக்கேன்னா அதுக்கு என் புள்ள சிவராமன்தான் காரணம். இன்னைக்கு அவனையும் அந்தச் சாமி கூட்டிட்டுப் போயிருச்சே. இது அடுக்குமா?' என்றபடி மயக்கமடைகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவராமனின் பெரியம்மா, `இந்தப் புள்ள ரொம்ப மனசு விட்டுருச்சுமா. புருஷன் மாரடைப்பு வந்து சில வருஷத்துக்கு முன்னாடி செத்துட்டாரு. வாழ்க்கையே அவ்வளவுதான்னு ஒடிஞ்சு கிடந்தவளை ஊர்க்காரவகதான் சமாதானப்படுத்தினோம். எங்க ஊரு பள்ளிக்கூடத்துலதான் ஆயாம்மாவா வேலை பார்க்குது. எவ்வளவோ கஷ்டத்திலும் புள்ளைக்காக வாழ ஆரம்பிச்சது. இப்போ அந்தப் புள்ளையும் இல்லைன்னா தாங்கமுடியுமா? காலையில்கூட அந்தப் பயல், `பெரியாத்தா பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வர்றேன்'னு என்கிட்டச் சொல்லிட்டுப் போனான். எங்க ஊருக்காரப் புள்ளைங்க எல்லாம் செஞ்சி பள்ளிக்கூடத்துலதான் படிக்குதுக. தினமும் 18 மைல் போவணும். காலையில் வெள்ளனவே கிளம்பினாதான் முடியும். இப்பவும் அப்படிப் போனவன்தான் சிவராமன். திரும்ப மாட்டானு யாருக்குத் தெரியும்'' எனப் பொங்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்கிறார்.

``அவன் பள்ளிக்கூடத்துல, என்னமோ விரிவாக்கப் பணி செய்றாங்களாம். செப்டிக் தண்ணீர் விழறதுக்கு 10 அடி ஆழத்தில் குழி தோண்டி, தொட்டி கட்டி, தண்ணிய ரொப்பியிருக்காங்க, காலையில பள்ளிக்கூடம் போனாவன், பாத்ரூம் பக்கம் போயிருக்கான். பாத்ரூமுல தண்ணீ வரலைன்னு வெளியே வந்து, புதுசாக் கட்டியிருந்த தொட்டியில் இருக்கிற தண்ணீயை எட்டிப் பார்த்தப்போ தவறி விழுந்திருக்கான். வெளிய வரமுடியாமல் செத்து மிதந்திருக்கான். கட்டட வேலைக்கு வந்தவங்கதான் முதலில் பார்த்திருக்காங்க. செய்தி தெரிஞ்சு நாங்களே பாதி உசுரோடுதான் அங்கே போனோம். இதுக்கா இவ்வளவு கஷ்டத்தை அவன் அம்மா அனுபவிச்சா. பாவிப் பயலுக... தொட்டியைக் கட்டினதும் உடனடியா மூட வேணாமா? அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு புள்ளைககிட்ட கண்டிப்பாச் சொல்லிவெச்சிருக்க வேணாமா? அங்கே ஆளுகளையும் வேலைக்குப் போடலை. இன்னைக்கு எங்க புள்ளைய காவு வாங்கிட்டானுக.

சிவராமன் அப்பா செத்தப்பவே, பையனை வேலைக்கு அனுப்பிடலாம்னு சிலர் சொன்னாங்க. `நான் டாக்டர் ஆகப்போறேன். என்னைய இப்பவே வேலைக்கு அனுப்புறீங்களே'னு சொன்ன பயல். எப்பவும் கலகலப்பா இருப்பான். `சாயங்காலம் நான் வீட்டுக்கு வரும்போது நோட்டு புத்தகம் வாங்கிவைம்மா'னு சொல்லிட்டுப் போயிருக்கான். இப்போ அவன் பொணத்துக்குத்தான் வாங்கிக்கொடுக்கணும். பள்ளிக்கூட ஆளுங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா எங்க புள்ள உசுர் போயிருக்காதே. என்ன பாவம் பண்ணுச்சு அந்தப் பிஞ்சு மண்ணு. அது கனவைப் பள்ளிக்கூடத்துலயே குழி தோண்டிப் பொதச்சுட்டாங்களே'' என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிவராமனின் உடல் ஏற்றிய வண்டி தெருவுக்குள் நுழைகிறது.

அழுகைக் குரல் உச்சம் தொட, அரை மயக்கத்திலிருந்த சிவராமனின் தாய், துடித்து எழுகிறார். ``என்னைய விடுங்க... என்னைய விடுங்க.. என் புள்ளைகிட்ட நானும் போறேன்'' எனக் கதறியபடி ஓடுகிறார்.

வானம் மெள்ள இருண்டு கண்ணீரை மலர்வளையமாக அனுப்பத் தயாராகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism