Published:Updated:

குழந்தைகள் Vs இன்டர்நெட்

தேவை அதிக கவனம்ஞா.சுதாகர்

பிரீமியம் ஸ்டோரி

ங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து வருகிறது என்றால் என்ன செய்வீர்கள்? உடனே உங்களுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் அந்த ஆபத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்கள். ஆனால், உங்களுக்கே தெரியாத வழிகளில் வரும் ஆபத்துகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?  

குழந்தைகள் Vs இன்டர்நெட்

படிக்கும்போதே கொஞ்சம் குழப்புகிறதா? ஆனால், குழந்தைகளுக்கு இணையத்தின் மூலம் ஏற்படும் ஆபத்துகள் இப்படித்தான் இருக்கின்றன. இன்று குழந்தைகளின் கையில் இருக்கும் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்கள் அனைத்திலுமே அவர்களுக்கான நன்மையும்  தீமையும் ஒளிந்தே இருக்கின்றன.

நம் செல்போனில் இருக்கும் இ-வாலட் விவரங்களை, பாஸ்வேர்டு கொடுத்து மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறோம். ஆனால்,  அவற்றின் பாஸ்வேர்டு விவரங்களை எளிதாக அறிந்துகொள்கிற குழந்தைகள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி பணத்தைச் செலவு செய்துவிடலாம். ஆன்லைனில் சாட் செய்யும் நபர் நம் குழந்தைகளுக்கு மனரீதியான, பாலியல்ரீதியான துன்புறுத்தல்களைக் கொடுக்கலாம்; ஏமாற்றலாம்; ஏன் மிரட்டல்கூட விடுக்கலாம். குழந்தைகளின் கையில் இருக்கும் கேட்ஜெட்கள் மற்றும் இணையத்தில்தான் இத்தனை ஆபத்துகளும் ஒளிந்திருக்கின்றன.

நமக்குத் தாமதமாகக் கிடைத்த தொழில்நுட்பங்கள் அனைத்தும், இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே கிடைக்கின்றன. 10 வயது குழந்தையிடம் 18 வயது இளைஞருக்கான முதிர்ச்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், 18 வயது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து தொழில்நுட்பங்களும் வசதிகளும் குழந்தைகளுக்கும் கிடைக்கின்றன. இங்கேதான் அவர்களுக்கான சிக்கலும் பெற்றோர்களுக்கான பொறுப்பும் அதிகரிக்கிறது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்குக் காரணம் இணையம் பற்றி குழந்தைகளுக்கு விழிப்பு உணர்வு இல்லாததும் மட்டுமல்ல; பெற்றோர்களுக்கும் விழிப்பு உணர்வு இல்லாததும்தான். பெரும்பாலான பெற்றோர் தங்கள் ஸ்மார்ட்போன்களை அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சைபர் தாக்குதல்கள், இணையப் பாதுகாப்பு போன்றவை குறித்த விழிப்பு உணர்வு இல்லை. எனவே, பெற்றோர்கள் முதலில் இதுபற்றி முறையாக அறிய வேண்டும். 

குழந்தைகள் Vs இன்டர்நெட்

இன்றைய குழந்தைகளுக்கு எப்படி நிஜ உலகில் ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் இருக்கின்றனவோ, அதைவிடவும் அதிகமான ஆபத்துகள், அச்சுறுத்தல்கள் இணைய வெளியில் இருக்கின்றன. இணையத்தைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் நம் குழந்தைகளை மிரட்ட முடியும். அவர் நம் வீட்டுக்கு அருகிலும் இருக்கலாம். அல்லது பெயர் தெரியாத ஏதோ ஒரு நாட்டிலும் இருக்கலாம். இணையம் என்பது எந்தளவு பரந்து விரிந்துள்ளதோ, அந்தளவு   தொலைதூரத்தில் இருக்கின்றன அதன் ஆபத்துகள். ‘பெண் குழந்தைகளுக்குத்தான் இந்த ஆபத்துகள் இருக்கின்றன; ஆண் குழந்தைகளுக்கு இல்லை’ என நினைத்தால் அது மிகவும் தவறு. இருபாலின குழந்தைகளுக்குமே இணையத்தில் ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் எதுவுமே இதுவரை இல்லை. மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில்கூட, சைபர் க்ரைம்கள் பற்றி மட்டுமே இருக்கிறதே தவிர, குழந்தைகள்மீது இணையத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்கிறது யுனிசெஃப். சைபர் தாக்குதல்கள் என்றால், வெறும் ஆன்லைன் பேங்க்கிங், கிரெடிட் கார்டு மோசடி மட்டுமே இல்லை. தனிப்பட்ட தாக்குதல்களும் அதில் அடங்கும். ஆனால், சிறிய வயதில் கற்றுத்தரும் விஷயங்களோடு, அவை தொடர்பான பாதுகாப்பு வழிமுறை களையும் கற்றுக்கொடுத்துவிட்டால் பிரச்னை இல்லை.

குழந்தைகளை எப்படித் தொழில் நுட்பத்திடமிருந்து பாதுகாப்பது என்பது குறித்து விளக்குகிறார் தொழில்நுட்ப ஆர்வலர் சைபர் சிம்மன்.

“நோக்கியா போனையே பயன்படுத்தத் திணறிக்கொண்டிருந்தவர்களை சில வருடங்களுக்கு முன்னர் பார்த்திருப்போம். ஆனால், இன்று குழந்தைகளே ஐ-பேட்களை அநாயாசமாகக் கையாளுகின்றன. வருங்காலத்தில் தொழில்நுட்பம் பன்மடங்கு விஸ்வரூபம் எடுக்கும். எனவே, குழந்தைகளை அதிலிருந்து விலக்கிவைக்காமல், அதை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள்வது எனச் சொல்லித் தருவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். தொழில் நுட்பத்தைக்கண்டு அஞ்சி, அதிலிருந்து ஒதுங்கி வாழ்பவர்களை `லூடைட்ஸ்' என அழைப்பார்கள். நம் குழந்தைகளை அப்படி மாற்றிவிடக் கூடாது. மாறாக மொபைல், கணினி போன்றவற்றில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களைக் கற்றுக்கொடுப்பதுதான் சரி. இதுகுறித்து பெற்றோர்களும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

*  ஃபேஸ்புக், மின்னஞ்சல் போன்றவற்றில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் தேவையற்ற இணைப்புகள் எதையும் டவுன்லோட் செய்யவோ, க்ளிக் செய்யவோ கூடாது; அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட்டிங் செய்வதும் தவறு என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

* இலவச ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது, நம் மொபைலில் எந்தத் தகவல்களை எல்லாம் பயன்படுத்த அனுமதி கேட்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நம்பகமான நிறுவனங்களின் ஆப்களை மட்டுமே மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.   

குழந்தைகள் Vs இன்டர்நெட்

 *குழந்தைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் இ-வாலட், மொபைல் பேங்கிங் போன்ற ஆப்ஸ் இருந்தால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன என்பன போன்றவற்றை எல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 *இவை தவிர ஆப்களை பாதுகாக்க லாக்கிங் ஆப்கள், பேரன்ட்டல் கன்ட்ரோல் மென்பொருள்கள் போன்றவை அனைத்தும் இணையதளங்களில் கிடைக்கின்றன. தேவையென்றால் மட்டும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* யூடியூப் தளத்துக்குப் பதிலாக யூடியூப் கிட்ஸ் ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்து தரலாம். இதில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இதுபோல குழந்தைகளுக்கான பிரத்யேக சேனல்கள், ஆப்ஸ் போன்றவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம்.

ஆன்லைனில் இருக்கும் பிரச்னைகளை விடவும், அதில்தான் அவர்களுக்கு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எனவே, ஆன்லைனில் இருக்கும் ஆபத்துகளைச் சொல்லிக்கொடுத்து, அவர்களை வழிநடத்துவதுதான் பெற்றோர் களின் கடமையாக இருக்க வேண்டும்” என்கிறார் சைபர் சிம்மன். 

குழந்தைகளை மனரீதியாக எப்படி தயார் செய்வது என்பதை விளக்குகிறார் உளவியல் நிபுணர் மனோஜ் சர்மா.

“குழந்தைகள் அதிக நேரத்தை ஆன் லைனில் செலவிடுவதால் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று அதற்கு அடிமையாகி விடுவது. 12 வயது முதல் 19 வயது வரையிலான பருவத்தினர்தான் ஆன்லைன் அடிக் ஷனால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் டெக்னாலஜி, இணையம், கேட்ஜெட்ஸ் போன்றவற்றுக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்பதை `5C' மூலம் கண்டறியலாம்.

*Craving - தொடர்ந்து கேட்ஜெட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஏக்கம்.

*Control - கட்டுபாடின்றி தாறுமாறாக இணையம் மற்றும் கேட்ஜெட்களைப் பயன்படுத்துவது.

*Coping - எப்போதும் கேட்ஜெட்களைக் கோண்டே அனைத்து விஷயங்களையும் சமாளிப்பது.

*Compulsion - கண்டிப்பாக கேட்ஜெட் களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பது.

*Conseqeunces - அதிகமாக கேட்ஜெட் களைப் பயன்படுத்துவதால் வரும் மன மற்றும் உடல்ரீதியான பிரச்னைகள். 

குழந்தைகள் Vs இன்டர்நெட்இதில் ஏதேனும் நான்கு அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால், அவர்கள் கேட்ஜெட்ஸுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என அர்த்தம். உடனே அவர்களுக்கு மனரீதியான சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும். சோஷியல் மீடியா, இணையதளம், கேமிங், கேட்ஜெட்ஸ், போர்னோகிராபி எனப் பல்வேறு விஷயங்களுக்குக் குழந்தைகள் அடிமை ஆகிறார்கள். இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி, முதலில் அவர்கள் அதற்கு அடிமையாகியிருக்கிறார்கள், பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களுக்கு உணர வைப்பதுதான். பின்னர் சிறிது சிறிதாக கேட்ஜெட்களை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தவது என்பது பற்றி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதில் செலவிடும் நேரத்தில் விளையாடுவது, புத்தகம் படிப்பது போன்ற மற்ற மகிழ்ச்சியான விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்தால் கேட்ஜெட்கள் மீதான மோகம் குறைந்துவிடும். தொடர்ந்து கேட்ஜெட்களைப் பயன்படுத்தினால் அடுத்து 30 நிமிடங்களுக்கு அவற்றுக்கு ஓய்வளிப்பது, தூங்கச்செல்வதற்கு முன்பு கேட்ஜெட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, போதுமான அளவுக்குத் தூங்குவது போன்றவற்றின் மூலமாகக் குழந்தைகளின் மனநலனும் மேம்படும். குழந்தைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவர்களைவிடவும், அவர்களை எப்படி வழிநடத்துகிறோம் என்ற வகையில் பெற்றோர்களுக்குத்தான் அதிக பொறுப் பிருக்கிறது” என்கிறார் மனோஜ் சர்மா.

இறுதியாக... எந்தக் காரணம் கொண்டும், குழந்தைகள் இணையம், செல்போன் பயன் படுத்துவது முற்றிலும் தவறானது என்ற எண்ணத்துக்கு நீங்கள் வந்துவிட வேண்டாம். காரணம், இன்றைய உலகில் அவர்களுக்கு கிடைத்துள்ள வரம், இந்தத் தொழில் நுட்பங்கள். இவற்றைச் சரியாகக் கையாள்வது குறித்து கற்றுத்தருவதே சிறப்பாக இருக்குமே தவிர, இவற்றில் இருந்து விலகியிருத்தல் அல்ல. வேட்டைக்காரர்களுக்குப் பயந்து, பறவைகள் பறக்காதிருத்தல் கூடாது. குழந்தைகளின் பாதுகாப்பு என அவர்கள் சுதந்திரத்தைக் கூண்டில் அடைத்து விடாதீர்கள்.  

குழந்தைகள் Vs இன்டர்நெட்

ன்னம்பிக்கை குறைந்த குழந்தைகள், பெற்றோர்களுடன் போதிய நேரம் செலவிட முடியாத குழந்தைகளே இணையப் பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு