Published:Updated:

103 நாள்களாக கிடைக்காத குழந்தை... செவிமடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்! #FollowUp

மு.பார்த்தசாரதி
103 நாள்களாக கிடைக்காத குழந்தை... செவிமடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்! #FollowUp
103 நாள்களாக கிடைக்காத குழந்தை... செவிமடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்! #FollowUp

மூணு மாசம் ஆகுது தம்பி. சரியா சொல்லணும்னா நூத்தி மூணு நாளு ஆகிடுச்சு. ஆனாலும், என் சுதந்திரம் இன்னும் என் கைக்கு வந்து சேரலை. என்னிக்கு நான் அந்தப் பிஞ்சுக் குழந்தைய குழியில இருந்து பத்திரமா வெளியில எடுத்தேனோ அப்போவே அது என் புள்ளைன்னு முடிவு பண்ணிட்டேன். அந்தப் புள்ளையோட வாசம் இன்னும் எம்முந்தானையில ஒட்டிக்கிட்டு நிக்கிது. தெனம் தெனம் கண்ணே மணியேன்னு பாடி தூளி ஆட்ட இந்த ரெண்டு கையும் ஏங்கிக் கெடக்குது. ஆனா, எம்மனச யாருமே புரிஞ்சிக்கலயே தம்பி” கடந்த சுதந்திர தினத்தன்று தனது வீட்டு வாசலில் உள்ள கழிவுநீர் ஓடையில் கிடந்த குழந்தையை காப்பாற்றிய கீதா பாசமும் பரிதவிப்பும் ஒருசேர பேசுகிறார். 

“சுதந்திரத்தைப் பார்த்து ஒரு மாசம் ஆகிடுச்சு. கடைசியா அவனை ஹோம்ல போய் பார்த்துட்டு வந்தேன். என்னைப் பார்த்து லேசா சிரிச்சான். நான் தூக்கினப்போ அழவே இல்ல. எம்மடியில மல்லிகைப்பூ மாதிரி அமைதியா கிடந்தான். அவனோட நினைப்பு என்னை இருக்கவே விடலை. அடுத்து போகலாம்னு நினைச்சப்போ எனக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அந்த ஹோம்ல உள்ளவங்ககிட்ட குழந்தையை எப்போ சார் என்கிட்ட கொடுப்பீங்கன்னு கேட்டதுக்கு, 'அதுக்கு நிறைய வேலை இருக்கு. குழந்தையை நீங்க நினைச்சதும் எடுத்துட்டுப் போய் வளர்க்க முடியாது. முதல்ல ஆன்லைன்ல அப்ளை பண்ணனும், பணம் கட்டிப் பதியணும். அப்படியே பதிஞ்சாலும் அந்தக் குழந்தைதான் உங்களுக்கு கிடைக்குமான்னு தெரியாது. உங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் அப்ளை பண்ணியிருக்காங்க. அதனால, அவங்களுக்குத்தான் நாங்க முன்னுரிமை கொடுப்போம்'னு சொல்லிட்டாங்க. அவர் அப்படி சொன்னதுல இருந்தே மனசு நிம்மதியா இல்ல தம்பி. 

எனக்குச் சுதந்திரம் மேலதான் பாசம் இருக்கு. அந்தப் புள்ளையதான் நான் என் கையால எடுத்துருக்கேன். அதே மாதிரி என் கையாலதான் அவனை வளர்க்கணும்னு ஆசைப்படுறேன். நீங்க கேக்குற குழந்தை உங்களுக்குக் கிடைக்கிறது கஷ்டம்தான்னு ஹோம்ல உள்ளவங்க சொல்றதைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. சுதந்திரம் வேற யாருக்கிட்டயும் போறதை விட என்கிட்ட வந்தா அவனோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு நான் நம்புறேன். நிச்சயமா நான் அவனை நல்லா பாத்துப்பேன் தம்பி” என்றபடியே கலங்கி நிற்கும் கண்களை துடைத்தபடியே தொடர்ந்து பேசுகிறார். 

“போன ஞாயிற்றுக்கிழமை 'தயா அறக்கட்டளை' சார்பா நடந்த குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் மேடம் என்னை வர சொல்லியிருந்தாங்க. அப்போ அவங்க 'சுதந்திரம் பேருல ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதை நீங்களே பொறுப்பெடுத்து பார்த்துக்கலாம். அதுமட்டுமில்ல, உங்க கண் முன்னே கஷ்டப்படுற ஏழைக்குழந்தைகளைப் பற்றி எங்களுக்குத் தகவல் கொடுங்க'ன்னு சொன்னவங்க 'சீக்கிரமே சுதந்திரத்தை நீங்க தத்தெடுத்துக்கோங்க. அவன் உங்ககிட்ட வந்துட்டா எங்களால முடிஞ்ச உதவிகளை நாங்க செய்யுறோம்'னு சொல்லி அவங்க வீட்டுக்கும் என்னை வரச் சொல்லியிருக்காங்க. நான் அவங்க வீட்டுக்குப் போகும்போது நிச்சயமா சுதந்திரத்தோடதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அவன் என்னோட பையன். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மேடமும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாரும் எழும்பூர் ஆஸ்பத்திரியில வெச்சு சுதந்திரத்தை என் கையில கொடுத்தாங்க. அவங்ககிட்டகூட நான்தான் குழந்தைய வளர்க்கப்போறேன்னு சொல்லி இருந்தேன். அன்னிக்கு உங்களுக்கு எல்லா உதவிகளையும் நாங்க செய்யுறோம்னு சொல்லிட்டு இன்னிக்கு கைய விரிச்சிட்டாங்களே” என்று கதறி அழுதவர் இறுதியாக “விஜயபாஸ்கர் சார், எப்படியாவது நீங்களே உங்க கையால சுதந்திரத்தை என்கிட்ட வாங்கிக் கொடுத்துடுங்க சார். உங்களுக்குப் புண்ணியமா போகும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார். 

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். 

“அந்த அம்மாவின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அவர் அந்தக் குழந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். ஆனால், சட்டப்படி ஆதரவற்ற குழந்தைகளை சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் காப்பகத்தில் ஒப்படைத்துவிடுவோம். அங்குள்ள விதிமுறைகளின்படி குழந்தையை அந்த அம்மாவோ, நீங்களோ ஏன் நானோ கூட தத்தெடுத்து வளர்க்க முடியும். ஆனாலும், அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து நான் சோஷியல் வெல்ஃபேர் அமைப்பிலுள்ள அதிகாரிகளைச் சந்தித்து கீதா அம்மாவே குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்காகப் பரிந்துரை செய்கிறேன். அதுமட்டுமல்ல, வேறு யாரோ ஒருவரிடம் அந்தக் குழந்தை வளர்வதை விட கீதா அம்மாவிடமே குழந்தை வளர்வதுதான் பொருத்தமாக இருக்கும். தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளில் இருக்கிறேன். நிவாரணப்பணிகள் முடிந்ததும் இந்த விஷயம் குறித்து முடிவெடுக்கிறேன்” என்றார்.