Published:Updated:

மாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் !

மாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் !
மாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் !

மாணவன் எழுதிய வார்த்தையால் 5 மாணவிகள் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்து இருக்கிறது அரசம்பட்டி. இங்கு இயங்கி வரும் அரசு மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் 172 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தினமும் வீட்டில் இருந்தே பள்ளிக்குச் சென்று வந்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் அதே பள்ளியில் 7-ம் வகுப்புப் படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாகத் தெரிவித்ததோடு அதை வகுப்பறையிலும் எழுதி வைத்திருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி ஆசிரியர்களிடமும் தனது பெற்றோர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மாணவனின் பெற்றோர்களை அழைத்த பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் முன்பு அந்த மாணவரை எச்சரித்ததோடு சிறுமி தரப்பினரைச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கின்றனர். ஆனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொள்வதற்காக கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கு வகுப்பறையிலேயே வாந்தி எடுத்ததால் அரசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குதான் எலி மருந்து சாப்பிட்டதாக அந்த சிறுமி தெரிவித்ததால் மேல் சிகிச்சைக்காக உடனே சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் அந்தச் சிறுமியுடன் படிக்கும் மேலும் 4 மாணவிகள் வாந்தி எடுத்ததோடு தாங்களும் எலி மருந்து தின்றதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்கள் 4 பேரையும் சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து அந்த 5 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், மற்ற நான்கு மாணவிகளும் ஏன் எலி மருந்தைச் சாப்பிட்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.