Published:Updated:

காற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமா? #Bullying

காற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமா? #Bullying
காற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமா? #Bullying

"குழந்தைகளுக்கு இதைப் புரிய வைப்பதற்கு முன், குழந்தைகள் நலனில் பங்கு கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், குழந்தைகள் மீதான கவனம் அவர்கள் உடல்நலத்துக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது."

மீபத்தில் வந்த திரைப்படங்களில் வன்முறையாகச் சித்திரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான காரணங்களைப்  பார்த்துவிடலாம். சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசனில், வக்கிரமும் வன்முறையும் வெறுப்பும் நிறைந்த மிருகமாக வில்லன் கிறிஸ்டோபரை காட்டியிருப்பார்கள். மரபணு நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனான கிறிஸ்டோபர், அவனுடைய சக மாணவர்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறான். ஒருகட்டத்தில் எல்லோராலும் வெறுக்கப்படுபவனாக மாற கொலையாளியாக மாறுகிறான் என்று அந்தப் பாத்திரத்தை வடிவமைத்திருப்பார்கள்.

அடுத்தது, `காற்றின் மொழி' திரைப்படம். ஜோதிகா - விதார்த் தம்பதியின் ஒரே மகன் செல்போன் கேமுக்கு அடிக்ட் ஆனவனாகக் காட்டப்பட்டிருப்பான். `நீ எல்லாம் ப்ளே ஸ்டேஷன் விளையாடத்தான் லாயக்கு' என்கிற கேலிக்கு ஆளாவது, பெற்றவர்களுக்குத் தெரியாமல் கேம் விளையாடுவது என்கிற அவனின் செய்கை ஆசிரியர்களின் போனை திருடும் அளவுக்கு வந்து நிற்கும். குழந்தைகளைப் பெரும்பாலும் மனரீதியாக வதைக்கும் இந்தச் செயலை Bullying என்கிறார்கள். அதுவே தொழில்நுட்ப உதவியுடன் மெய்நிகர் உலகில் அரங்கேறுகையில் Cyber Bullying என்கிறார்கள்.

ஒரு குழந்தை தடம் மாறிப் போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதில் நமக்கும் நம் சமூகத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதே வலிக்கும் செய்தியாக இருக்கிறது. இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனையும், சோஷியல் மீடியாவையும் ஜஸ்ட் லைட் தட் கையாள்கிறார்கள். டிக் டாக்கில் உலா வருகிறார்கள். நமக்குத் தெரியாத விஷயங்களை அவர்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

ஒருபுறம், பெரியவர்களால் குழந்தைகளுக்குப் பாலியல் சீண்டல்களும், குழந்தைகள் மீதான வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே வரும் வேளையில், குழந்தைகளே சக குழந்தைகளைக் காயப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த Bullying செயலை நாம் கவனிக்கத் தவறுகின்றோம். இதுகுறித்து, குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் துளிர் அமைப்பில், 12 ஆண்டுகளாக ஆலோசகராக இருக்கும் நான்சி என்பவரிடம் பேசினேன், ``Children live their social lives online, but their consequences are offline - குழந்தைகள் தங்கள் சமூக வாழ்வை ஆன்லைன் திரையில் வாழ்ந்தாலும், அதில் அவர்களின் செயல்களுக்கான விளைவுகளை நேரில் சந்திக்கிறார்கள்'' என்ற நான்சியிடம், இந்த bullying, cyber bullying பற்றிக் கேட்டேன்.

எந்தெந்த செயல்கள் bullying என்று கருதப்படும்? 

ஒருவரின் அந்தரங்கத்தைக் கேள்விக்குறியாக்கும் அல்லது உணர்வுகளைப் பாதிக்கும், துன்புறுத்தும் அனைத்துச் செயல்களுமே cyber bullying தான். ஒருவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, ஒருவரை அவர் அனுமதியின்றி தொடர்ந்து ஆன்லைனில் தொடர்பு கொள்ள முயல்வது, கமென்டுகளில் வசைச் சொற்களால் திட்டுவது, அவர்கள் காயப்படும் வகையில் கிண்டல் செய்வது, உரையாடல்களில் சேர்த்து கொள்ளாமல் விலக்குவது, ஏன் சமயங்களில் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவது என இப்படி அனைத்துமே இதில் அடங்கும். 

Bullying மற்றும் Cyber Bullying வித்தியாசம் என்ன?

நேரில் துன்புறுத்துவதை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சோசியல் மீடியா செயலிகள் வழியில் செய்தால் அது cyber bullying. இதன் விளைவுகள் ஆழமானவை. காரணம் இவை ஒருமுறை அல்ல, மீண்டும் மீண்டும் நம் பார்வையில் படுவதால், நாம் காயத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்ற காரணத்தால், bullying -ஐ விட ஆபத்தானவை. குறிப்பாக இது ஒரு குழந்தை இருக்கும் நேரம், காலம், சூழ்நிலை வரையின்றி அவர்களைப் பாதிக்க வல்லது.

Bullying ஏன் நடக்கிறது? 

இவை நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகள் அவர்களைப் பற்றிய ஒரு பயத்தை உருவாக்குவதற்காக இதைச்  செய்யலாம், அல்லது அவர்களின் இயலாமையை அல்லது பயத்தை மறைப்பதற்காக இதைச் செய்யலாம். பல நேரங்களில் குழந்தைகள் அவர்கள் விளையாட்டாகச் செய்வது பிறரை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று தெரியாமல்கூட இதைச் செய்கிறார்கள்.

நம் குழந்தை பாதிப்படைந்து இருக்கிறது என்று நாம் அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

குழந்தைகளின் பொருள்கள் அடிக்கடி காணாமல் போவது, அது குறித்து அவர்கள் சரியான விளக்கம் அளிக்காமல் தவிர்ப்பது, திடீரென அவர்கள் உடலில் ஏற்படும் காயங்கள், பள்ளிக்குச் செல்ல பயப்படுவது, பள்ளியில் அனைவரிடத்திலிருந்தும் விலகி இருப்பது, நம்பிக்கையிழந்து காணப்படுவது, அழுவது, விரக்தியாக இருப்பது, வழக்கமாகச் செய்யும் செயல்களில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது, பதற்றமாகக் காணப்படுவது, சரியாகத் தூங்காமலும், சாப்பிடாமலும் இருப்பது இவை யாவுமே இதற்கான அறிகுறிகள்தான். நமது குழந்தைகளின் செயல்பாடுகளைச் சற்றுக் கூடுதல் கவனத்துடன் கண்காணித்தாலே நம் குழந்தைகளின் உள்ளங்களை நாமாகவே அறிந்துகொள்ள முடியும்.

Bullying/Cyber Bullying  இவற்றைத் தடுப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ என்ன வழிகள் இருக்கின்றன?

குழந்தைகளுக்கு இதைப் புரிய வைப்பதற்கு முன், குழந்தைகள் நலனில் பங்கு கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், குழந்தைகள் மீதான கவனம் அவர்கள் உடல்நலத்துக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது. அவர்கள் மீது மிகச் சரியான வயதிலிருந்தே ஆரோக்கியமான, அவசியமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மிக முக்கியமாகப் பிறரை மதிப்பதற்குக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகள் பிறரை துன்புறுத்தினால் அதற்கான காரணம் அறிந்து, அதன் விளைவுகளைப் புரிய வைக்க வேண்டும். மொத்தத்தில் பெரியவர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, நம் குழந்தைகள் இந்தச் சிக்கலில் இருந்தால், அவர்களை மீட்க சில வழிமுறைகள்...

* அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
* அவர்களை நாம் எந்த விதத்திலும் குற்றவாளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும்.
*பெற்றோரிடமோ அல்லது ஆசிரியர், உறவினர் போன்ற ஏதோவொரு நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடத்தில் அவர்களைப் பேச வைக்க வேண்டும்.
*அவர்களைத் தண்டிக்க மாட்டோம் என்று குழந்தைகளுக்குப் புரிய வைத்தல் அவசியம். 
* அவர்கள் செல்போன் பயன்படுத்துவதை உடனடியாகத் தடுக்க வேண்டாம். ஆனால், துன்புறுத்துபவர்களுக்கு எந்தக் காரணத்தினாலும் இவர்கள் பதில் அளிக்காமல் இருக்க வேண்டும் என்று கற்பிக்க வேண்டும்.
* தவறாக வந்த மெசேஜ், அல்லது பதிவை டெலீட் செய்யாமல் பத்திரமாக வைக்க வேண்டும், இதுவே நமக்கான ஆதாரமாகப் பயன்படும்.
* எத்தகைய சூழலிலும் அவர்கள் தனியாகப் பிரச்னையைச் சந்திக்க வேண்டாம் எனச் சொல்ல வேண்டும்.
* உடல் ரீதியாக, மன ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகள் நலம் குறித்து அறிந்த வல்லுநர்களிடம் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். 
* மன நல, உடல் நல மருத்துவ உதவி அவர்களுக்குக் கட்டாயம் வேண்டும்.
* மிக மோசமான சூழ்நிலையில் பள்ளியிலோ, உரிய அதிகாரிகளிடத்திலோ இதை ரிப்போர்ட் செய்ய பயப்பட வேண்டாம்.
*பெற்றோர் பதற்றமடையாமல் இந்தப் பிரச்னையை அணுகுவது மிகவும் அவசியம், உங்கள் பதற்றம் குழந்தைகளை மேலும் அச்சுறுத்தும். 

இவையெல்லாம் அடிப்படையாக இந்தப் பிரச்னையிலிருந்து நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ளத் தேவையான வழிமுறைகளே. எப்போதும் இதைத் தனியாக கையாளாமல் உரிய வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுக் கையாளுவது சிறந்தது.

குழந்தைகள், 24 மணி நேரமும் நம் கண்முன்னால் இருந்தால்கூட, அவர்களின் உலகத்துக்குள் நாம் மிகச் சொற்ப நேரமே அனுமதிக்கப்படுகிறோம் என்பதே உண்மை. ஆங்கிலத்தில் பட்டர்ஃபிளை எபெக்ட் (Butterfly Effect) என்பார்கள், ஒரு பட்டாம்பூச்சியின் சின்ன சிறகசைப்பில் பெரு மாற்றங்கள் நிகழுமாம், அப்படி வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும், விளைவுகளை நிகழ்த்தும் வல்லமை ஒரு சிறு வார்த்தைக்கும், செயலுக்கும் உண்டு என்பதை நம் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது, உளவியல் நோய் அற்ற ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு நாம் இடும் முதல் வித்து" என்கிறார் நான்சி.

அடுத்த கட்டுரைக்கு