Published:Updated:

`என்னால மறக்க முடியலை; மனசு பதறுது!' - சுதந்திரத்தைப் பிரியும் கீதா கண்ணீர்

`என்னால மறக்க முடியலை; மனசு பதறுது!' - சுதந்திரத்தைப் பிரியும் கீதா கண்ணீர்
`என்னால மறக்க முடியலை; மனசு பதறுது!' - சுதந்திரத்தைப் பிரியும் கீதா கண்ணீர்

நான், தினம் தினம் அவனோட நினைப்புலதான் இருக்கேன். கிறிஸ்துமஸ், புது வருஷம், பொங்கல்னு எந்த நல்ல நாள் வந்தாலும் அவனோட நினைப்பு வந்துடுது. நியூ இயர்க்கு ரெண்டு நாளைக்கு முன்னகூட அவனைப் போய் பார்த்துட்டு வந்தேன். ஆனா இப்போ, கொழந்தைய யாருக்கோ தத்து கொடுக்கப் போறாங்களாம். இனி, உங்களால சுதந்திரத்தைப் பார்க்க முடியாதுனு எனக்குத் தகவல் வந்துச்சுங்க. அந்த நிமிஷத்துல இருந்தே என் தூக்கம் போயிடுச்சு. அப்போ, இனிமே நான் சுதந்திரத்தைப் பாக்க முடியாது'' என பரபரப்பான குரலில் ஏக்கமும் கலந்திருக்கிறது கீதாவின் குரலில். 

சுதந்திரத்தைப் பற்றிய அறிமுகம் விகடன் வாசகர்களுக்குத் தேவையில்லை. அந்த அளவுக்கு  குழந்தை சுதந்திரம், தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சயம். கடந்த சுதந்திர தினத்தன்று கழிவுநீர்க் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட கீதா, அவனுக்கு சுதந்திரம் எனப் பெயர் வைத்தார். அதன்பிறகு, தானே குழந்தையை வளர்க்கப்போவதாக முடிவெடுத்திருந்தவருக்கு சில சிக்கல்கள். அதனால், அரசு முறைப்படி யாருக்கு குழந்தையைத் தத்துக் கொடுக்கிறதோ, அவர்களுக்கே கொடுக்கட்டும் என்றார். ஆனாலும், இப்போது நம்மைத் தொலைபேசியில் அழைத்து, படபடப்போடு இந்தத் தகவலைப் பகிரும்போது, அந்தத் தாய்மையின் வலி நம்மையும் நெருடுகிறது. 

“நான், சுதந்திரத்தைக் காப்பாத்தியிருக்கேன். அது உண்மைதான். ஆனா, அதுக்காக நான் அவன் மேல முழுசா உரிமை கொண்டாடுறது தப்புன்னு எனக்கே நல்லா தெரியும். எனக்கு எப்போதெல்லாம் அவனைப் பாக்கணும்போல இருக்கோ, அப்போது ஓடிப்போய் பாத்துட்டு வந்துடுவேன். முன்னவிட இப்போ அவன் என் முகத்தைப் பாத்து நல்லா சிரிக்கிறான். என் கண்ணுக்குள்ளேயே ஒட்டிக்கிட்டான். அதனால, அவனை என்னால மறக்க முடியலை. எப்போதும் அவனோட சிரிப்பு கண்ணுக்குள்ள வந்து விழுது. இந்த நேரத்துலதான் திடீர்னு அவன் இருக்கிற ஹோம்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. சுதந்திரத்தை தத்துக் கொடுக்கப்போறோம். அவனை டெல்லியில இருக்கிற ஒரு தம்பதி கேட்டுருக்காங்க. பொங்கல் முடிஞ்சதும் குழந்தைய டெல்லிக்கு தூக்கிட்டுப் போயிடுவாங்கன்னு சொன்னாங்க. மனசு கெடந்து பதறுது. நேத்துல இருந்தே ஒரு வேலையும் செய்ய முடியலை. என்னிக்கோ ஒரு நாள், அவன் யாரோ ஒருத்தங்களுக்கு மகனா போகப் போறவன்தான். ஆனா, இவ்வளவு சீக்கிரமா என்கிட்ட இருந்து போயிடுவானோன்னு பயமா இருக்கு” என்கிறார் கலங்கியபடியே. 

இதுகுறித்து, சுதந்திரம் இருக்கும் காப்பகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். “சுதந்திரத்தை தத்துக் கொடுக்கப்போறது உண்மைதான். ஆனா,  உடனே இல்ல. அதுமட்டுமில்லை, எங்களோட பொறுப்பு காப்பகத்துக்கு வர்ற குழந்தைகளை கேர் பண்ணிக்கிறது மட்டும்தான். குழந்தையை யார் தத்தெடுத்து வளர்க்கப்போறாங்கங்கிற விவரம் எல்லாம் மத்திய அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்குது. இது, முழுக்க முழுக்க ஆன்லைன் புராசஸ். ஆன்லைன்ல அப்ளை பண்றவங்கள்ல யார் தகுதியா இருக்கிறாங்களோ, அவங்களுக்குத்தான் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதேநேரத்துல, தகுதியானவங்ககிட்ட உடனே குழந்தையைக் கொடுத்துடவும் மாட்டாங்க. அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெற்றோர்கிட்ட பேசுவாங்க. அவங்க, குழந்தையை வந்து பார்ப்பாங்க.

அதுக்கப்பறம் கோர்ட் அவங்களை ஒரு மாதத்துக்கு அப்சர்வேஷன்ல வெச்சிருக்கும். இது எல்லாம் முறைப்படி நடந்த பிறகுதான், குழந்தைய நிரந்தரமா தத்து எடுக்கிறவங்ககிட்ட கொடுப்பாங்க. இப்போ, ஒரு பேரன்ட் குழந்தையை வந்து பார்க்கிறதா இருக்கிறாங்க. அவங்களுக்கு சுதந்திரத்தைப் பிடிச்சிருந்தா 20 நாள்களுக்குள்ள நாங்க மற்ற ஃபார்மாலிடன்டீஸ்லாம் பண்ணணும். இது ஒருபக்கம் இருந்தாலும், எங்களால கீதா அம்மாவோட உணர்வுகளை நல்லாவே புரிஞ்சிக்க முடியுது. நாங்க அவங்ககிட்ட தத்து எடுக்கப்போறவங்க யாரு என்னங்கிற விவரத்தைச் சொல்ல முடியாது. ஆனா, சுதந்திரம் இங்க இருந்து கிளம்புறதுக்குள்ள கண்டிப்பா அந்த அம்மாவை வந்து பார்த்துட்டுப் போகச் சொல்லுவோம்” என்கிறார் காப்பகத்தைச் சேர்ந்த ஒருவர்.