Published:Updated:

அட... இந்தியாவின் வேதனை சாதனைகளில் மேலுமொரு சிறப்பு!

சு.நந்தினி
அட... இந்தியாவின் வேதனை சாதனைகளில் மேலுமொரு சிறப்பு!
அட... இந்தியாவின் வேதனை சாதனைகளில் மேலுமொரு சிறப்பு!

ந்தியா அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு. உலகின் மனித வளத்தேவையைப் பூர்த்தி செய்வதில் முதன்மையான இடத்தை வகிக்கிறது இந்தியா. 'உலக அறிவுத்தேவையை தன்னிறைவு செய்ய  இந்தியா உதவுகிறது' என பெருமைப் பேசிக்கொள்ளும் இந்தியாவின் கறுப்பு முகம் தெரியுமா? இந்தியாதான் உலகிலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு. குழந்தைகள், பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சூழல் இந்தியாவில்தான்  அதிகமாக உள்ளது. இந்த முதலிடம் பெருமை அல்ல...

இந்தியாவில், குழந்தைத் தொழிலாளிகளாகப் பணிபுரியும் குழந்தைகளின் எண்ணிக்கை  60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனாலும், இந்தியாதான் குழந்தைத் தொழிலாளிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் முதலிடம் பிடிக்கிறது. பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், இந்த நிலை மாறவில்லை.

இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986-ன் படி, '14 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டு வேலை பார்க்கக் கூடாது' என்பது தான். 

குழந்தைகள் வேலையே பார்க்கக் கூடாது என்றிருந்த நிலையில், 2012 -ம் ஆண்டு டிசம்பர் 4 -ம் தேதி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், 'குடும்பச் சூழலுக்காகக் குழந்தைகள் வேலை பார்க்கலாம். ஆனால், பள்ளிக் கல்வி பாதிக்கக் கூடாது. கட்டாயமாகப் பள்ளிக்குச் சென்று படித்து முடித்தப் பிறகு, வேலை பார்க்கலாம்' என்று சொல்லப்பட்டது. 6 வயதில் இருந்து 14 வயது வரையிலான குழந்தைகள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால், இன்று 4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 11.8 சதவிகிதம் பேர் கல்வி பயிலாமல், வேலை பார்த்துவருகின்றனர். 

என்னதான் குழந்தைகள் வேலை பார்ப்பதைத் தடுக்கச் சட்டங்கள் கொண்டு வந்தாலும், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  விவசாயம், வீட்டு வேலை, உணவகம், பழுதுபார்க்கும் கடை, சிறு கடைகள் எனப் பல்வேறு தொழில்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பள்ளிக்குப் போகாமல் முழுநேரத் தொழிலாளர்களாகவே இக்குழந்தைகள் வேலை பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலிருந்து குழந்தைத் தொழிலாளிகள் மீட்கப்படுகிறார்கள்.

கடைகளில் வேலை பார்த்து வரும் குழந்தைகள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம், குடும்பச் சூழலுக்காகப் பிச்சையும் எடுத்துவருகிறார்கள். டிராஃபிக் சிக்னலில் குழந்தைகளை வைத்தேப் பிச்சை எடுக்கும் பெற்றோரையும் நாம் தினமும் கடந்து வந்துகொண்டுதான் இருக்கிறோம்.

பீடி - சிகரெட் தயாரிப்பது (21%),  கட்டடத் தொழில் (17%), சலவைத் தொழில் (11%), வீட்டு வேலைகள் செய்வது (15%) எனப் பல துறைகளிலும் குழந்தைகள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் அனைவரும், தங்கள் குடும்பச் சூழலைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் 48.2 மில்லியன் குழந்தைகள் படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு பாகிஸ்தான். அங்கு வெறும் 10.7 மில்லியன் குழந்தைகள்தான் இந்த நிலையில் உள்ளனர். அதைக்காட்டிலும் 4 மடங்கு அதிகமாக உள்ளது இந்தியாவின் நிலை. இந்தியாவில் 10-ல் ஒரு குழந்தைக்குத்தான் சத்தான உணவு கிடைக்கிறது. 18.7 சதவிகிதக் குழந்தைகள் வேலைக்காகப் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். 

இன்று தொலைக்காட்சிகளில், பெரியவர்களால் செய்ய முடியாத விஷயங்களைக்கூட குழந்தைகள் செய்துகாட்டி பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஒரு பக்கம், மலாலா போன்ற குழந்தைகள் நாட்டின் உரிமைக்காகப் போராடுகிறார்கள். இன்னொரு பக்கம், இதுபோன்ற குழந்தைகள் சிக்னலிலும், ரயில் நிலையங்களிலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கட்டட வேலைக்கு அனுப்பும் சிறுவன், லண்டன் பாலத்தைக் கட்டும் திறமையுள்ள சிவில் இன்ஜினீயராக வேண்டியவன்; ஐ.டி பார்க் வாசலில் பிச்சை எடுப்பவன் சுந்தர்பிச்சையாக கூகுளை ஆள வேண்டியவன்; வல்லரசை நோக்கி அரசு ஓட வேண்டாம்... இவர்களது வாழ்க்கையை மாற்றிப் பாருங்கள்... இந்தியாவை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!